* அறியாமை நோயைத் தீர்த்த மாமருந்துதான் தந்தை பெரியார் – சுயமரியாதை இயக்கம்!
* உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்! வெற்றி நமதே!
ஆயிரம் தடங்கல்கள் வந்தாலும், கொள்கை, லட்சியம், ஈரோட்டுப் பாதையிலிருந்து ஒருபோதும் நம்முடைய பயணம் மாறாது, இது உறுதி!
சென்னை, மே 14 ‘‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’’ – அப்படி சிரிக்காதே என்றால், நோயோடு இருங்கள் என்றுதான் அர்த்தம். அந்த அறியாமை நோயைத் தீர்த்த மாமருந்துதான் தந்தை பெரியார் – சுயமரியாதை இயக்கம். உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்! வெற்றி நமதே! ஆயிரம் தடங்கல்கள் வந்தாலும், கொள்கை, லட்சியம், ஈரோட்டுப் பாதையிலிருந்து ஒருபோதும் நம்முடைய பயணம் மாறாது! இது உறுதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
திராவிட மாணவர் கழகக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
கடந்த 11.5.2025 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை ஆகிய அமைப்புகளின் கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஒரு சிறிய தவறுகூட நடைபெறாமல் இருக்கும் இயக்கம்
திராவிடர் கழகம் மட்டும்தான்!
திராவிடர் கழகம் மட்டும்தான்!
கமிட்டி நடைபெறும்போது, ஆண்கள் முன்வரிசையில் அமர்ந்து கொள்கிறார்கள். பெண்கள் பின் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். முன்பெல்லாம் நாடகம் நடைபெறுகிறது என்கிற துண்டறிக்கையில், ‘‘பெண்களுக்குத் தனி இடம் உண்டு’’ என்று அச்சடித்தி ருப்பார்கள். ஆனால், நம்முடைய மாநாட்டிற்குத் தனி சிறப்பு என்னவென்றால், அம்மாநாட்டில், பெண்கள், ஆண்கள் எல்லாம் கலந்து ஒன்றாக அமர்வார்கள். இதில் ஒரு சிறிய குறைபாடுகூட இன்றி, ஒரு சிறிய தவறுகூட நடைபெறாமல் இருக்கும் இயக்கம் திராவிடர் கழகம் மட்டும்தான். வழிகாட்டிய இயக்கம்.
இங்கே நாமெல்லாம் ஒரு குடும்பம் போன்று இருக்கின்றோம்.
ஒரே ஒரு கேள்வியை தாய்மார்களைப் பார்த்து நான் கேட்க விரும்புகின்றேன்.
இந்த இயக்கத்தில் மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம் என்று அமைப்புகள் இருக்கின்றன. என்னுடைய கேள்விக்கு நேர்மையாக பதிலைச் சொல்ல லாம் அல்லது கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தால், கையைத் தூக்கினால் போதும்.
நம் இயக்கத்தில் எந்தவிதமான
புகாரும் கிடையாது!
புகாரும் கிடையாது!
அது என்னவென்றால், நம்முடைய இயக்கத்தில் மகளிரணியை உருவாக்கி நடத்திக் கொண்டு வரு கிறோம். அதற்கென பொறுப்பாளர்களும் இருக்கிறார்கள்.
இங்கே இருக்கின்ற ஆண்கள் யாராவது, அந்த மகளிரணியினரிடம் சென்று தவறாக நடந்தார்கள் என்ற புகார் ஏதாவது உண்டா? அப்படி இருந்தால் தாராளமாக இங்கே சொல்லலாம்.
இல்லை என்பவர்கள் கையைத் தூக்குங்கள்.
சரி, இங்கே எந்தப் புகாரும் கிடையாது. ஆனால், நாளிதழை எடுத்துப் பார்த்தால், எங்கே பார்த்தாலும் அசிங்கமான செய்திகள், கொச்சையான செய்திகள், பாலியல் வன்முறைகள் போன்ற செய்திகள்தான் நிறைய இருக்கின்றன.
பகுத்தறிவுப் பகலவனின் அறிவுப்பூர்வமான விளக்கம்!
சம்பத் – சுலோசனா அவர்களின் மணவிழாவில் அய்யா அவர்கள் உரையாற்றும்போது சொன்னார், ‘‘இதற்கு அடிப்படையான காரணம் ஒன்றே ஒன்றுதான். அண்ணன் – தங்கையாக இருக்கின்ற குழந்தைகளை நாம் ஒன்றாக வளர்க்கின்றோம். ஆனால், பெண் குழந்தைகளை மட்டும் குறிப்பிட்ட வயது வந்த பிறகு, அதற்கு மேல் நீ அந்தப் பக்கம் போகாதே, இந்தப் பக்கம் போகாதே என்று சொல்லி பிரித்துவிடுகின்றோம். கையை மூடி மூடி வைத்திருந்தால், அதன் உள்ளே என்ன இருக்கின்றது என்று பார்ப்பதற்கு ஓர் ஆவல் வருகிறது; அதனால் கோளாறு வருகிறது’’ என்று சொன்னார்.
இதைத் தத்துவ ரீதியாக, அறிவுப்பூர்வமாக பகுத்தறிவுப் பகலவன் சொன்னார்.
தனி மனித வாழ்க்கையில்
ஒழுக்கம்தான் மிகவும் முக்கியம்!
ஒழுக்கம்தான் மிகவும் முக்கியம்!
ஆகவேதான், இந்த இயக்கம் – ஒழுக்கம்! ஒழுக்கம்!! ஒழுக்கம்!!! என்று அதனை உறுதியாகப் பின்பற்றச் செய்கின்றது. தனி மனித வாழ்க்கையில் ஒழுக்கம்தான் மிகவும் முக்கியம்!
அப்படியென்றால், காதல் செய்யாமல் இருப்பார்களா? என்று நீங்கள் கேட்கலாம். காதல் செய்பவர்கள், காதல் செய்யட்டும். ஆனால், ஒழுக்கம் என்பது கட்டுப்பாடுதானே!
ஆகவேதான், இந்த இயக்கம் சிறந்த வாழ்வியலை சொல்லிக் கொடுக்கின்ற இயக்கம்.
அதுமட்டுமல்ல, பிள்ளைகள் வளர்ந்துவிட்டால், 18 வயதாகிவிட்டால், ஓட்டுப் போடுகின்ற நிலைக்கு வருகிறார்கள். ஓர் அரசாங்கத்தையே தேர்ந்தெடுக்கக் கூடிய அறிவு 18 வயதில் வந்தாகிவிட்டது என்று சொல்லுகின்ற காலகட்டத்தில், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், 18 வயது, 21 வயதாகிவிட்டது என்றால், அவரவர்களுடைய வாழ்விணையரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?
பெற்றோரைக் கேட்கவேண்டும், பெற்றோரைக் கேட்கவேண்டும் என்று சொல்லுவது ஏன்?
கல்யாணத்திற்குத்தான் பெற்றோரிடம் பிள்ளைகள் அனுமதி கேட்பார்களே தவிர, காதல் செய்வதற்குக் கேட்கமாட்டார்கள்!
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், ‘‘எல்லாம் சரிங்க, என் பிள்ளை என்னிடம் சொல்லாமல் காதல் செய்திருக்கிறானே?’’ என்றார்.
‘‘உன்னிடம் கேட்டுவிட்டா, காதல் செய்வான்?’’ என்று நான் கேட்டேன்.
‘‘அவர்களுக்கே காதல் எப்போது வருகிறது என்று தெரியாது; அப்படி இருக்கும்போது, பெற்றோரை கேட்டுவிட்டா காதல் செய்ய முடியும். கல்யா ணத்திற்குத்தான் பெற்றோரிடம் பிள்ளைகள் அனுமதி கேட்பார்களே தவிர, காதல் செய்வதற்குக் கேட்க மாட்டார்கள்’’ என்றேன்.
ஆகவே தோழர்களே, நாம் ஒரு பண்பாட்டுத் தளத்தில் இருக்கின்றோம். ஒழுக்கம் என்பது கட்டுப்பாடு.
அந்த ஒழுக்கத்தை இந்த இயக்கத்தில், இளை ஞர்களானாலும், இயக்கத்தவர்களானாலும் அதைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமாகும்.
பெரும்பாலும் மகளிர்தான்!
பெரியார் கல்வி நிலையங்களில் படிக்கின்ற மாணவர்கள் நூற்றுக்கு நூறு தேர்ச்சி பெறுகின்றனர். அதில் பணியாற்றுவது பெரும்பாலும் மகளிர்தான்.
அறக்கட்டளை பொறுப்பாளர்களாகிய நாங்கள் எல்லோரும் ஆண்கள்தான். நம் மேல் எந்தக்குற்றம் வேண்டுமானாலும் இதுவரையில் சொல்லியிருப்பார்கள். அக்கப்போர் குற்றங்களான பெரியார் சொத்தை அனுபவிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், நம்முடைய எதிரிகள்கூட, பெரியார் கல்வி நிறுவனங்களில், ஆண்கள்- பெண்கள் கோளாறு நடக்கிறது என்று நம்மீது ஏதாவது ஒரு சிறிய குற்றம் சொல்லியிருக்கிறார்களா?
இதுதான் பெரியார்!
இதுதான் சுயமரியாதை இயக்கம்!
இதுதான் சுயமரியாதை வாழ்வு!
ஆகவே, நன்றாக நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இளைஞர்களுக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
ஆகவேதான், இந்த இயக்கம் கட்டுப்பாடுள்ள இயக்கமாகும்.
எந்தவிதமான தவறான எண்ணத்திற்கோ, நோக்கத்திற்கோ ஆளாகாமல் பழகவேண்டும்!
இளைஞர்களே, நீங்கள் ஆண் – பெண் பேதமின்றி பழங்குங்கள். நட்போடு பழகுங்கள், அன்போடு பழ குங்கள். பாலின வேறுபாட்டினரோடு பழகும்போது எந்தவிதமான தவறான எண்ணத்திற்கோ, நோக்கத்திற்கோ ஆளாகாமல் பழகவேண்டும்.
கல்லூரியில் படிக்கின்ற இருபால் இளைஞர்கள் நல்ல அளவிற்குப் பழகுகிறார்கள். முன்பெல்லாம் எவ்வளவு குறுகிய மனப்பான்மை இருந்தது என்று சொன்னால், ஆண் – பெண் பேசினாலே தவறு என்று சொன்னார்கள். அதைவிட முட்டாள்தனமாக, ‘‘பொம்பளை சிரித்தால் போயிற்று; புகையிலை விரித்தால் போயிற்று’’ என்று சொன்னார்கள்.
அறியாமை நோயைத் தீர்த்த மாமருந்துதான் தந்தை பெரியார் – சுயமரியாதை இயக்கம்!
‘‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’’ – அப்படி சிரிக்காதே என்றால், நோயோடு இருங்கள் என்று அர்த்தம்தான். அந்த அறியாமை நோயைத் தீர்த்த மாமருந்துதான் தந்தை பெரியார் – சுயமரியாதை இயக்கம்.
ஆகவே, இந்த இயக்கத்திற்கு உங்களை யெல்லாம் வரவேற்கிறோம். இளைஞரணி தோழர்களுக்கு அதிகம் சொல்லவேண்டிய தேவை யில்லை.
ஒரே ஒரு உறுதி மொழியை நீங்கள் எல்லாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
திராவிட மாணவர் கழகத்தினர் மட்டும் எழுந்து நில்லுங்கள்!
திராவிட மாணவர் கழகத்தினர்
எடுத்துக் கொண்ட உறுதிமொழி!
எடுத்துக் கொண்ட உறுதிமொழி!
திராவிட மாணவர் கழகத்தில் உறுப்பினராக என்னை நான் இணைத்துக் கொண்டுள்ளேன்.
காரணம்,
- மானமும் அறிவும் தான் மனிதர்க்கழகு என்ற அறிவுச் சுதந்திர ஆசான் தந்தை பெரியாரால் தொடங்கப் பட்டு, காலமெல்லாம் எமது கல்வியை மறுத்த மனுதர்மத்தை எதிர்த்து வெற்றிபெற்ற இயக்கம் இது.
- ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் படைக்கவும், சமூகநீதி, பாலியல் நீதி ஆகியவற்றை நிலைநாட்டும் கொள்கைப் பாசறையாக இயக்கத்தை உருவாக்கி எதிர்நீச்சல் அடித்து வெற்றி காணும் இயக்கமாம் திராவி டர் கழகத்தின் உருவாக்கமான திராவிட மாணவர் கழகம் இது.
- தன்னலம் மறுப்பு, பதவியாசை, அரசியல் வேட்டை முதலிய எந்தவித சபலங்களுக்கும் என்னை ஆளாக்கிக் கொள்ளாமல், சுயமரியாதை, பகுத்தறிவு உணர்வூட்டும் தொண்டறம் மட்டுமே எமது உயிர்மூச்சு என்று கொண்டதால், சபலங்களையும், பேராசைகளையும் விட்டெறிந்து, எஞ்சிய என் வாழ்நாள் முழுவதும் பெரியார் சுயமரியாதைத் தொண்டறத்தைச் செய்யும் வலிமையான கொள்கை வீரராக என்றும் தொடர்வேன்.
இனி, எனது சிந்தனை, செயலாக்கம் எல்லாம் திராவிடர் கழகத்தின் கொள்கை, லட்சிய வெற்றிக்காக, உறுதியோடு என்னை அர்ப்பணித்துக் கொண்டு, முழு கொள்கை வழிப்பட்ட வாழ்க்கையை மேற்கொள்வேன் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும், வேறு எந்த சபலத்திற்கும் எப்போதும் ஆளாக மாட்டேனென்றும் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.
(திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்துக்கூற, திராவிடர் மாணவர் கழக தோழர்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி இது).
திராவிடர் கழக இளைஞரணியினர் எடுத்துக் கொண்ட உறுதிமொழி!
திராவிடர் கழக இளைஞரணியில் உறுப்பினராக என்னை நான் இணைத்துக் கொண்டுள்ளேன்.
காரணம்,
- மானமும் அறிவும் தான் மனிதர்க்கழகு என்ற அறிவுச் சுதந்திர ஆசான் தந்தை பெரியாரால் தொடங் கப்பட்டு, காலமெல்லாம் எமது கல்வியை மறுத்த மனுதர்மத்தை எதிர்த்து வெற்றிபெற்ற இயக்கம் இது.
- ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் படைக்கவும், சமூகநீதி, பாலியல் நீதி ஆகியவற்றை நிலைநாட்டும் கொள்கைப் பாசறையாக இயக்கத்தை உருவாக்கி எதிர்நீச்சல் அடித்து வெற்றி காணும் இயக்கமாம் திராவிடர் கழகத்தின் உருவாக்கமான திராவிடர் கழக இளைஞரணி இது.
- தன்னலம் மறுப்பு, பதவியாசை, அரசியல் வேட்டை முதலிய எந்தவித சபலங்களுக்கும் என்னை ஆளாக்கிக் கொள்ளாமல், சுயமரியாதை, பகுத்த றிவு உணர்வூட்டும் தொண்டறம் மட்டுமே எமது உயிர்மூச்சு என்று கொண்டதால், சபலங்களையும், பேராசைகளையும் விட்டெறிந்து, எஞ்சிய என் வாழ்நாள் முழுவதும் பெரியார் சுயமரியாதைத் தொண்டறத்தைச் செய்யும் வலிமையான கொள்கை வீரராக என்றும் தொடர்வேன்.
இனி, எனது சிந்தனை, செயலாக்கம் எல்லாம் திராவிடர் கழகத்தின் கொள்கை, லட்சிய வெற்றிக்காக, உறுதியோடு என்னை அர்ப்பணித்துக் கொண்டு, முழு கொள்கை வழிப்பட்ட வாழ்க்கையை மேற்கொள்வேன் என்றும், எக்காரணத்தை முன்னிட்டும், வேறு எந்த சபலத்திற்கும் எப்போதும் ஆளாக மாட்டேனென்றும் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.
(திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் எடுத்துக்கூற, திராவிட இளைஞரணி தோழர்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி இது).
உலகம் பெரியார் மயம் –
பெரியார் உலக மயம்!
வெற்றி நமதே!
ஆயிரம் தடங்கல்கள் வந்தாலும், கொள்கை, லட்சியம், ஈரோட்டுப் பாதையிலிருந்து ஒருபோதும் நம்முடைய பயணம் மாறாது! மாறாது!! இது உறுதி! உறுதி!! உறுதி!!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.