தோற்றமோ – எதிரிகளை
தோற்கடிக்கும்!
பார்வையோ பகைவர்களை
பதற வைக்கும்!
சீற்றமிகு எழுத்துகளோ
சிங்கத்தின் கர்ச்சனைதான்!
கவிதைக் கருப்பொருளோ
காலப் புரவியின்
பாய்ச்சலை விரைவுபடுத்தும்
பகுத்தறிவு சாட்டையாகும்!
தந்தை பெரியார் கொள்கை
மூச்சில் – முத்தெடுத்து
சிந்தனைப் பேரழகை
செதுக்கிய சிற்பி!
புரட்சிக் கவிஞர்
ஒரே ஒருவர்தான்
புரட்டு மலைகளை
பொடியாக்கும் புயல்!
புராணக் குப்பை மேடுகளை
பொசுக்கும் எரிமலை
புதுமை மலர்களின்
சிரிப்புப் பூஞ்சோலை!
கருஞ்சட்டைக்காரர்!
கழகக் கொடிகளை
ஊரெல்லாம் ஏற்றச் சொன்ன
ஒப்பற்ற போர் வீரன்!
வீடெல்லாம் ‘விடுதலை’
விளங்க வேண்டுமென்று
அறிக்கை முரசு கொட்டிய
அடிப்படைக் கட்சிக்காரர்!
புரட்சிக் கவிஞர் பிறந்த நாளை
தமிழ் நாளென்று தலைப்பிட்டு
ஒரு வாரம் நடத்தச் செய்த
‘திராவிட மாடல்’ அரசை
தேன் மழையில் குளிப்பாட்டுவோம்!
புரட்சிக் கவிஞர் வாழிய!
புரட்சி யுகம் படைத்து
மதவாத யானையை
மண்ணில் புதைப்போம்!
புரட்சிக் கவிஞர் பிறந்த நாள்
உறுதிமொழி இதுவே, இதுவே!
– கவிஞர் கலி. பூங்குன்றன்