நியூயார்க், ஏப்.21 தேர்தல் ஆணையம் சமரசம் செய்துகொண்டுள்ளது மிகவும் தெளிவாகத் தெரிகிறது என இந்திய தேர்தல் அமைப்புப் பற்றி அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, பாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசியபோது, ‘‘மகாராட்டிரத்தில் உள்ள மொத்த மக்கள்தொகையைவிட தேர்தலில் அதிக மக்கள் வாக்களித்துள்ளனர். இதுதான் உண்மை. வாக்குப்பதிவு நடந்த அன்று மாலை 5.30 மணிக்கும் 7.30 மணிக்கும் தேர்தல் ஆணையம் அறிக்கை அளித்தது. இந்த 2 மணி நேரத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியது. இது சாத்தியமே இல்லாதது. ஒரு வாக்காளர், வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும். இதனை நீங்கள் கணக்கிட்டால் மறுநாள் அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம். நாங்கள் இதுதொடர்பான வீடியோ பதிவைக் கேட்டதற்கு அவர்கள் மறுத்தது மட்டுமின்றி சட்டத்தையும் மாற்றியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இந்த அமைப்பில் ஏதோ தவறு இருக்கிறது. நான் இதை பலமுறை கூறியிருக்கிறேன்’’ என்று பேசியுள்ளார்.