மும்பை, ஏப்.20 வக்ஃபு திருத்த சட்டத்தை தொடா்ந்து ஹிந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ, ஜெயின், பவுத்தம் என பிற மதத்தினருக்கு சொந்தமான நிலங்களை பாஜக குறிவைப்பதாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே குற்றஞ் சாட்டினார். ஆா்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி இதே குற்றச்சாட்டை தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) மூத்த தலைவரான ஜிதேந்திர அவாதும் முன்வைத்தார்.
சிவசேனை கட்சியின் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடா்பு பிரிவை தொடங்கி வைத்து உத்தவ் தாக்கரே பேசியதாவது: ஹிந்து கோயில் நிலங்கள் உள்பட கிறிஸ்தவ, ஜெயின், பவுத்தம் என பிற மதத்தினருக்கு சொந்தமான நிலங்களை பாஜக குறிவைக்கத் தொடங்கும்.
அவா்களது பெரு நிறுவன நண்பா் களுக்கு இந்த நிலங்களை வழங்கவே பாஜக விரும்புகிறது. எந்தவொரு சமூகத்தின் மீதும் பாஜகவுக்கு அன்பில்லை. இதை வெளிப்படையாக காட்டத் தொடங்கி விட்டனா். பொதுமக்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது என்றார்
மேலும், பாஜகவின் 45-ஆவது நிறுவன நாள் கொண்டாடப்பட்ட நிலையில் பாஜக சிறிதாவது நியாய மாக நடக்க வேண்டும் எனவும் அறிவு றுத்தினார்.
ஆா்எஸ்எஸ் அமைப்பின் பத்திரிகையில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி ஜிதேந்திர அவாத் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஒன்றிய அரசுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக நிலங்களின் உரிமையாளராக வக்ஃபு வாரியம் உள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை.
அரசு அல்லாத அமைப்புகளில் அதிக நிலங்களை கொண்டதாக இந்திய கத்தோலிக்க தேவாலயம் உள்ளது எனவும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. எனவே, வக்ஃபு திருத்த சட்டத்தை தொடா்ந்து கிறிஸ்தவா்களின் நிலங்களை பாஜக குறிவைக்கிறது’ என குறிப்பிட்டார்.