தமிழ்நாட்டுக்கு வருகைதரும் மோடி அவர்களே ராமனின் முகமூடி பெரியார் மண்ணில் செல்லாது!

viduthalai
3 Min Read

தமிழ்நாட்டின் அடையாளம், மொழி உரிமைகள், பொருளாதார நிதி ஒதுக்கீடு, மற்றும் கூட்டாட்சி முறை என தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பாஜக மோடி அரசு செய்த தீமைகள் ஏராளம் – அதில் சில..

ஹிந்தி மற்றும்
மும்மொழிக் கொள்கை திணிப்பு

பாஜக அரசு தமிழ்நாட்டில் ஹிந்தி மற்றும் மும்மொழிக் கொள்கையை வலுக்கட்டாயமாக திணிக்கிறது.

தமிழ்நாடு மாநில அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் தமிழ் மொழியின் உரிமைகளை பாதிக்கும் மற்றும் தமிழர்களின் பிராந்திய அடையாளத்தை அழிக்கும் என எதிர்த்த போதிலும் பிடிவாதமாக தன்னுடைய நடவடிக்கையை கைவிட மறுக்கிறார்.

சமஸ்கிருதம் மற்றும் ஹிந்திக்கு நிதி ஒதுக்கப்படுகிறது, ஆனால் தமிழுக்கு நிதி அளிக்கப்படவில்லை.

பேரிடர் நிதி மறுப்பு

புயல், வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பாஜக அரசு பேரிடர் நிதி ஒதுக்கவில்லை நிதி மறுப்பு தமிழ்நாட்டின் மக்களை வஞ்சிக்கும் பாஜகவின் திட்டம் ஆகும்.

தேசிய கல்வி கொள்கை (NEP) மற்றும்
ஒன்றிய நிதி மறுப்பு

தேசிய கல்வி கொள்கை (National Education Policy NEP) தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை பாதிக்கும் வகையில் உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை மற்றும் பி.எம்.சிறீ திட்டத்தை ஏற்க மறுத்ததற்காக, பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு ஒன்றிய நிதியை மறுத்துவிட்டார் கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். இது தமிழ்நாட்டின் கல்வி உரிமை மீதான வஞ்சகதாக்குதல் ஆகும்.

கூட்டாட்சி முறைக்கு எதிரான நடவடிக்கைகள்:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் மற்றும் ஒன்றிய அரசின் தலையீடுகள் தமிழ்நாட்டின் கூட்டாட்சி உரிமைகளை பாதிக்கின்றன, பாஜக அரசு தமிழ்நாட்டின் சுயாட்சியை அழிக்க முயற்சிக்கிறது

மக்களவை தொகுதி வரையறை

2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பாஜக அரசு மக்களவை தொகுதி எல்லைகளை மாற்றுவதற்கு (delimitation) முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கும் மற்றும் வடமாநிலங்களுக்கு எண்ணிக்கையில் அதிக உறுப்பினர்கள் இருப்பார்கள் – இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உரிமைகள் பறிபோகும்இது தமிழ்நாட்டின் அரசியல் உரிமைகளை பாதிக்கும்.

பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் புறக்கணிப்பு

பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு பெரிய அளவிலான முதலீடுகள் அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களை வழங்கவில்லை என கூறப்படுகிறது. காவிரி நீர் பிரச்சனை, நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் நோக்குடனேயே மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

கோவில்கள் மற்றும் கலாச்சார தலையீடு

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் ஹிந்து கோவில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தமிழ்நாடு அரசின் இந்து அறநிலயத்துறை கோவில்களில் குறிப்பிட்ட சமூகத்தினர் கையில் வைத்துகொண்டு செய்த முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மீனவர்கள் மற்றும் கடலோர பிரச்சினைகள்

கச்சத்தீவு (Katchatheevu) தொடர்பான பிரச்சினையிலும், தமிழ்நாடு மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்க பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த வாரம் கூட தமிழ்நாடு மீனவர்களை கைது செய்து இழுத்துச்சென்றது சிங்கள கடற்படை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து சிதைத்துக் கொண்டு இருக்கும் சிங்கள அரசைக் கண்டித்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

இருப்பினும் ராமநவமி அன்று தமிழ்நாடு அதுவும் ராமேஸ்வரம் வருகைதந்து இங்கும் ராமர்சாயம் பூசலாம் என்று பார்க்கிறார்.

இப்படி தனது ஆட்சிக்காலம் முழுவதும் தமிழ்நாடு உரிமையை பறித்து மதத்திற்குப் பின்னால் மறைந்துகொண்டு தமிழ்நாடு வந்தால் எங்களுக்குச் செய்த துரோகத்தை மறந்து விடுவார்களா தமிழர்கள்?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *