புதுடில்லி, மார்ச் 27- நீலப் பொருளாதாரம் எனப்படும் கடல்சார் வளங்கள் தீவிரமடைந் துள்ள புவி வெப்பமடையும் தாக்கத்துக்கு உள்ளாவதிலிருந்து மீனவ சமுதாய மக்களை காப்பாற்றப்படுவதற்கு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்ன? நாடாளுமன்றத்தில் தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவர்
டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பி யிருந்தார்.
இதற்கு ஒன்றிய அரசின் மீன் வளங்கள் துறை அமைச்சர் திரு.ஜார்ஜ் குரியன் இதற்கு மக்களவையில் 25.3.2025 அன்று கேள்வி நேரத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
மீட்சிப் பணிகள்
நீலப் பொருளாதாரம் மீதான தாக்கம் உலகளவில் காலநிலை மாறுதல் காரணமாக புவியின் வெப்பநிலை உயர்ந்து வருவதால் நீலப் பொருளாதாரம் என அழைக்கப்படும் கடல்சார் வளங்களின் பயன்பாடும் இடையறா வளர்ச்சியும் கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த ஆபத்தை ஒன்றிய அரசு உணர்ந்துள்ளது.
எனவே, இதனை எதிர்கொள்ள “பிரதமர் மீன் வளங்கள் திட்டம்தனை” கடலோர மாநிலங்களின் ஆலோசனையுடன் தயாரித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் புவிவெப்ப தாக்கததிலிருந்து மீண்டெழும் ஆற்றல் கொண்ட 100 மீனவ கிராமங்கள் கண்டறியப்பட்டு மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதார மீட்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீன்கள் உலர்த்தும் களங்கள், பதப்படுத்தும் மய்யங்கள், மீன்பிடிகள் தரையிறக்க ஏதுவாக கப்பல்/ படகுத் தளங்கள், சந்தைகள் அமைத்தல், பனிக்கட்டி தயாரிப்பு, குளிரூட்டப்பட்ட கிடங்குகள் மற்றும் ஆபத்துகால அவசர மீட்பு வசதிகள் ஆகியவை பொதுவான வசதிகளாக பிரதமர் மீன் வளங்கள் திட்டத்தின் வாயிலாக அமைக்க ஒன்றிய மீன்வளத் துறை உரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும், பாரம்பரிய மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மீன்பிடித் தடைக் காலங்களிலும் மீன்வளம் குறையும் காலத்திலும் தேவையான ஆதரவுகள் வழங்குவதையும் இத்திட்டம் உள்ளடக்கி உள்ளது.
அத்துடன், இந்திய வேளாண் ஆராய்ச்சி மய்யத்தின் மூலம் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் இறால் மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடு பட்டுள்ளவர்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப அறிவுரைகள், உரிய ஆய்வுகளுக்குப் பின்னர் வழங்கவும் தக்க ஏற்பாடுகளை ஒன்றிய மீன்வளத் துறை செய்துள்ளது.
பன்னாட்டுக் கருத்தரங்கு
நீலப் பொருளாதார பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பாக அய்க்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு உதவி எதையும் தர முன்வரவில்லை.
இருப்பினும், வங்கக் கடல் சூழலியலைப் பாதுகாக்க, குறிப்பாக மீன்பிடித் தொழில் காரணமாக கடல் பகுதியில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து பாதுகாக்க உணவு மற்றும் வேளாண் அமைப்பு, பன்னாட்டு கடல்சார் அமைப்பு, உலக சுற்றுச்சூழல் வசதி உள்ளிட்ட பல்வேறு அய்.நா. அமைப்புகளின் ஆதரவுடனும் நிதி உதவியுடனும் பிராந்திய அளவில் செயல்திட்டங்கள் அமல்படுத்தப் படுகின்றன. இந்தியா, ஏனைய நாடுகளுடன் இணைந்து இந்த செயல்திட்டங்களில் பணியாற்றி வருகிறது.
இதன் ஒருபகுதியாக, சென்ற அக்டோபர் 16-19, 2023இல் உணவு மற்றும் வேளாண் அமைப்புடன் இணைந்து ஒரு பிராந்திய சர்வதேச கருத்தரங்கத்தை இந்தியா நடத்தியது. 15 நாடுகள் பங்கேற்ற இந்த மாநாட்டில் காலநிலை மாற்ற தாக்கங்களை எதிர்கொள்ள மீன்வள மேலாண்மையிலும், நிர்வாகத்திலும் எத்தகைய உத்திகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டு உரிய முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன.
அதில் கூறப்பட்டு இருந்தது.