புதுடில்லி, மார்ச் 18- ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும், மக்களின் பங்கேற்பை குறைக்கும் என ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
10 பக்க அறிக்கை
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக அரசியல் சாசன திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
பின்னர் அவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த மசோதாக்களை பரிசீலித்து வரும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவினர் – பலவேறு சமூக அமைப்புகளின் கருத்துகளையும் கேட்டு வருகின்றனர்.
இதில் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (ஏ.டி. ஆர்.) என்ற தனியார் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது. இது தொடர்பாக 10 பக்கங்களை கொண்ட அறிக்கையும் தாக்கல் செய்து உள்ளது. அதில் அந்த அமைப்பு கூறியுள்ளதாவது:-
குதிரை பேரம்
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது அதிக அளவில் குதிரை பேரம் நடக்க வழிவகுக்கும்.
மேலும் தேர்தலில் பொது மக்களின் பங்கேற்பை குறைத்தல், அரசியலை மய்யப்படுத்துதல், தளவாடம் மற்றும் அரசியல் சாசன சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தும் போது மக்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக ஒரு மாநிலத்தில் உள்ள கொள்கைகளைப் பற்றி சிந்திக்கவும், அடுத்த தேர்தல்களில் தங்கள் அதிருப்தியைக் காட்டவும் வாக்காளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
தேர்தல்
கருநாடகா, தெலங்கானா மாநிலங்களில் ஒரு கட்சியின் குறுகிய கால உறுதி திட்டங்கள் பெருவெற்றியை பெற்றுக் கொடுத்தன. ஆனால் அதே கட்சியால் அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை.
இதுதான் மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தானிலும் நடந்தன. இவ்வாறு நீண்ட கால அளவில் சிறந்த பொருளாதார கொள்கைகளை மக்கள் தேர்வு செய்ய வழி ஏற்பட்டது.
ஆனால் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் ஒரே கட்சியே இரண்டிலும் வெல்லும் வாய்ப்பு ஏற்படும். அதனால்தான் இந்த திட்டத்தில் ஆளும் கட்சி அதிக ஆர்வம் காட்டுகிறது.
மாநில சுயாட்சியில் தலையீடு
மேலும் இந்த திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் சுயாட்சியில் தலையிடுவதுடன், அரசியலமைப்பின் தன்மையையும் மாற்றும் நடவடிக்கையாக உள்ளது.
ஒரு மாநிலத்தில் எப்போது தேர்தல் நடத்துவது?, நாடாளுமன்றத்துக்கு ஏற்ப அதற்கான பதவிக்காலத்தை பதவிக் முடிவு செய்வது போன்றவற்றை தேர்தல் கமிஷனுக்கு வழங்கினால், அது கட்டுப்பாடற்ற அதிகாரம் கொண்ட அமைப்பாக தேர்தல் கமிஷனை மாற்றி விடும்.
இடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் பதவிக் காலத்தைக் குறைப்பது, அரசமைப்பின் ‘கூட்டாட்சித் தன்மையில்’ மறைமுகமாக தலையிட்டு, அதை ‘ஒற்றை அமைப்பு’ ஆக மாற்றுவதாகும்.
இவ்வாறு ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு கூறியுள்ளது.