ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிவிக்கையின்படி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி உச்சநீதிமன்ற நீதிபதியாகிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றிய நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியாகிட அறிவிக்கை வெளிவந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி பின்னாளில் (2031) முதுநிலை அடிப்படையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிடும் வாய்ப்பும் உள்ளதாக தெரிய வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த காலஞ் சென்ற அல்டமாஸ் கபீர் அவர்களுக்குப் பின்னர் (2013) கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலிருந்து எவரும் இந்திய தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு அமையவில்லை. அந்த வாய்ப்பு நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி அவர்களுக்குக் கிடைத்திடும் வாய்ப்பு உள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளான பி.ஆர். கவாய், சூர்யகாந்ட், அபாய் எஸ். ஒக்லா மற்றும் விக்ரம்நாத் ஆகியோரைக் கொண்ட கொலீஜியம் நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி அவர்களை உச்சநீதிமன்ற நீதிபதியாகிட பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியாகிட பணி மூப்பில் உள்ள (seniority) உயர்நீதிமன்ற நீதிபதிகளிடையில் (உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உள்ளிட்ட) 11ஆம் நிலையில் இருந்த நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி அவர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு ஒன்றிய அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பரி்ந்துரை செய்த கொலீஜியம், தற்பொழுது உச்சநீதிமன்ற அமர்வில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலிருந்து நீதிபதி திபாங்கர் தத்தா மட்டும்தான் உள்ளார் என்பதைக் கருத்தில் கொண்டு மற்றொரு நீதிபதியாக நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி அவர்களைப் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய வகையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை நெறி அடிப்படையில் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது பாராட்டப்படுகிறது. மேலும் இதைப் போலவே வருங்காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி நியமனங்களில் மாநிலக் கண்ணோட்டம், சமூகநீதிக் கண்ணோட்டம் கொண்டு கொலீஜியம், பரிசீலனை – பரிந்துரை செய்து ஒன்றிய அரசும் ஏற்றுக் கொள்ளும் நிலை வர வேண்டும் என்ற கருத்து நீதித்துறை வட்டாரத்தில் நிலவுகிறது.