“அய்ந்து பெண்களைப் பெற்றால், அரசனும் ஆண்டி’’ என்று சொன்னார்கள் முன்பு!
இன்றைக்கு அய்ந்து பெண் என்ன? ஆறு பெண் பெற்றாலும், ஆறு பெண்களுக்கும்
மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு!
தாம்பரம், மார்ச் 2 ‘‘அய்ந்து பெண்களைப் பெற்றால், அரசனும் ஆண்டி’’ என்று சொன்னார்கள் முன்பு. இன்றைக்கு அய்ந்து பெண் என்ன? ஆறு பெண் பெற்றாலும், ஆறு பெண்களுக்கும் – கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
கடந்த 23.2.2025 அன்று மாலை சென்னை தாம்ப ரத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து – திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரையாற்றினார்.
28.2.2025 அன்று ‘விடுதலை’யில் வெளிவந்த உரையின் தொடர்ச்சி வருமாறு:
மூன்றாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு. 5 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு. 8 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு ஏன்? பொதுத் தேர்வு, பொதுத் தேர்வு என்று சொன்னால், சிறிய பிள்ளைகள், அதிலும் கிராமத்துப் பிள்ளைகள் என்ன செய்வார்கள்? இங்கே காய்கறி விற்கின்ற நண்பர்கள் இருக்கிறார்கள்; இவர்களுக்கு இந்தப் பணியே சரியாக இருக்கும். இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு 3 ஆம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு என்று சொன்னால், என்ன செய்வார்கள்?
இவர்கள் எங்கள் சமுதாயத்தினர், உழைக்கின்ற சமுதாயத்தினர், பாடுபடுகின்ற சமுதாயத்தினர், உழைப்பையே நம்பிக் கொண்டிருக்கின்ற ஒரு சமுதாயம்.
நீங்கள் கொண்டு வரும் தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
உழைப்பே இல்லாத ஒரு சமுதாயம், நான்கு மந்திரங்களைச் சொல்லிவிட்டு, எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு போகின்ற சமுதாயம் – பிறக்கிறதிலிருந்து, இறப்பு வரையில், வசூல் செய்து கொண்டிருக்கின்ற வாய்ப்பைப் பெற்றிருக்கின்ற ஒரு சமுதாயம் இருக்கிறது. அப்படிப்பட்ட சமுதாயத்திற்காக மட்டுமே நீங்கள் கொண்டு வரும் தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
இந்நிலையை மாற்றிய அரசுதான் திராவிட இயக்க அரசு. இன்றைக்குப் பெண்கள் கவலையில்லாமல் இருக்கிறார்கள். மனுதர்மத்தில் பெண்களுக்குக் கல்வி கொடுக்க இடம் உண்டா?
எந்த நாட்டிலும், எந்த மதத்திலும் இதுவரை படிக்காதே என்று சொன்ன மதம் கிடையாது!
புரட்சியாளர் அம்பேத்கர் மிக அழகாகக் கேட்டார். ‘‘நான் எத்தனையோ நாட்டு வரலாற்றைப் படித்திருக்கின்றேன்; எத்தனையோ மதங்களுடைய வரலாற்றைப் படித்திருக்கின்றேன். ஆனால், எந்த நாட்டிலும், எந்த மதத்திலும் இதுவரை படிக்காதே என்று சொன்ன மதம் கிடையாது.’’
அதைவிட ஒருபடி மேலே போய் சொன்னார், ‘‘படித்தால் உனக்குத் தண்டனை என்று சொன்ன ஒரே ஒரு மதம் ஆரிய மதம், ஹிந்து மதம் என்று சொல்லக்கூடிய ஸநாதன மதம்தான்’’ என்றார்.
‘‘வேதத்தை, சூத்திரர்கள் காதால் கேட்டால், ஈயத்தைக் காய்ச்சி ஊற்று. படித்தால், அவர்களுடைய நாக்கை அறுக்கவேண்டும்” என்று மனுதர்மத்தில் எழுதியிருக்கிறது.
இது புரியாமல் சிலர் கேட்கலாம், ‘‘ஏங்க, இன்றைக்கு இவ்வளவு பேர் படித்திருக்கிறீர்களே, உங்கள் நாக்கை அறுக்கிறார்களா? காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறார்களா? பெரியார் சொன்னாரே, வீரமணி சொல்கிறாரே, அது உண்மையா?” என்று.
அதுபோன்று இன்றைக்கு இல்லை. அதற்கு என்ன காரணம்?
பெரியார் இருக்கிறார்; திராவிட இயக்கம் இருக்கிறது; கருப்புச் சட்டை இருக்கிறது. திராவிட இயக்க ஆட்சி இருக்கிறது. நாளைக்கு இந்த ஆட்சி போனால், மறு படியும் அதுபோன்ற நிலையைக் கொண்டு வந்து விடுவார்களே? அதுதானே எங்களுடைய கவலை. எங்களுடைய பிள்ளைகளுக்குப் படிக்கின்ற வாய்ப்பு இருக்குமா?
ஒன்றியத்தில் உங்களுடைய ஆட்சி என்பதினால், எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
எங்களுடைய உரிமைகளுக்காக நீதிமன்றம் சென்று போராட வேண்டி இருக்கிறது; மக்கள் மன்றத்திற்கும் சென்று போராட வேண்டி இருக்கிறது. சாண் ஏறினால், முழம் சறுக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.
மக்களை நம்புகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு உண்டு!
இதற்கிடையில் கூலிப் பட்டாளங்கள், பைத்தி யக்காரர்களை விலைக்கு வாங்கி, ஒலி வாங்கி வாட கைக்கு விடுவதுபோன்று, வாடகைக்கு வாங்கி பேச வைத்திருக்கிறார்கள். (ஒலி பெருக்கிக்காரர் கோபித்துக் கொள்ளக்கூடாது).
இவ்வளவையும் தூக்கி எறியக்கூடிய சக்தி, மக்களை நம்புகின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு உண்டு.
அதனால், நாக்கில் தேனை தடவுவது; தூண்டிலில் நாக்குப் பூச்சியை மாட்டி, மீனைப் பிடிப்பதுபோன்று பிடிக்கலாம் என்று நீங்கள் நினைக்க முடியாது.
இப்போது மட்டுமல்ல தோழர்களே, பல பேருக்கு மறதி அதிகம். அவர்களுக்கு நாங்கள் சொல்கிறோம்.
நீங்கள் பார்த்திருப்பீர்கள் – மோடி ஆட்சிக்கு வந்த பிறகு திடீரென்று ஓர் அறிவிப்பு கொடுத்தார் – அண்ணா பல்கலைக் கழகத்தை உயர்கல்வித் தரமுள்ளாக ஆக்கவேண்டும். அதற்காக 1000 கோடி ரூபாயைத் தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால், அந்தப் பல்கலைக் கழகத்தை ஒன்றிய அரசிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்றார்.
ஆனால், தமிழ் மண் அதற்கு இடம் கொடுக்காது என்று எதிர்க்கட்சியாக இருக்கும்போதே, திராவிட முன்னேற்றக் கழகம் சொன்னது. அன்றைய ஆளுங்கட்சி யாக இருந்த அ.தி.மு.க. அதனை செய்ய முடியாத அளவிற்கு ஆக்கினார்கள். அதனால்தான், இன்றைக்கு அண்ணா பல்கலைக் கழகம் தப்பியது.
இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறோம் – எங்களுக்கு ஞாபக மறதி கிடையாது. ஆனால், மக்களுடைய மறதியிலேயே அரசியல் நடத்தக் கூடியவர்கள் நீங்கள்.
யார் அரசியல் செய்கிறார்கள் என்பதற்கு ஓர் அடையாளம் சொல்கிறேன்!
மும்மொழிக் கொள்கையை வைத்து அரசியல் செய்கிறது தமிழ்நாடு என்று சொல்கிறார்களல்லவா -யார் அரசியல் செய்கிறார்கள் என்பதற்கு ஓர் அடையாளம் சொல்கிறேன்.
நீட் தேர்வைத் திணித்தது போன்றே, 3 ஆம் வகுப்பு, 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்று திணிக்கிறார்கள். இவற்றையெல்லாம் தாண்டிய பிறகு, ‘நெக்ஸ்ட்’ தேர்வு என்று சொல்கிறார்கள். நம் பிள்ளைகள் கல்லூரிக்கே செல்ல முடியாத நிலையை உருவாக்குகிறார்கள்.
இவற்றையெல்லாம் செய்துவிட்டு, இப்போது புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
அதன் அடியில் வைத்திருக்கின்ற விஷமம் என்ன தெரியுமா? குருகுலத்தில் படித்திருந்தால் போதும்; 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்; குருகுலத்தில் படித்தவர்கள் எல்லாம் நாளைக்குப் பேராசிரியர்களாக வருவார்கள். இப்போதே துணைவேந்தர்களாக வருகின்றவர்கள் கல்வியாளர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை; யார் வேண்டுமானாலும் வரலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்குத் திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். மயமாக ஆக்கவேண்டும் என்பதற்காகத்தான்!
இவையெல்லாம் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். மயமாக, முழுக்க முழுக்க ஆதிக்கவாதிகள், பார்ப்பனர்கள், உயர்ஜாதிக்காரர்கள் வரவேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் செய்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டக் கூடிய அளவிற்கு அவர்களுடைய செயல்பாடு கள் இருக்கின்றன.
அதில் ஒன்றுதான், நீட் தேர்வு. அது வந்தவுடன், தமிழ்நாடு கடுமையாக எதிர்த்தது. அப்போது அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருக்கிறார்.
‘‘மருத்துவக் கல்லூரியில், 3 ஆயிரம் இடங்களைத் தமிழ்நாட்டிற்குக் கூடுதலாகக் கொடுக்கிறோம். எனவே, நீங்கள் நீட் தேர்விற்கு எதிர்ப்புக் காட்டாதீர்கள்” என்று ஒன்றிய அரசு சொல்லிற்று.
30 ஆயிரம் இடங்கள் கொடுத்தாலும், நீட் தேர்விற்கு ஒப்புக்கொள்ளமாட்டோம்!
அதைக் கேட்டு அன்றைய ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க. அரசின் சுகாதாரத் துறை அமைச்சர், எங்கள் வீட்டிற்கு வந்து, ‘‘தமிழ்நாட்டிற்கு, மருத்துவக் கல்லூரியில் 3 ஆயிரம் இடங்கள் கூடுதலாகக் கொடுக்கின்றோம்; நீட் தேர்வை எதிர்க்காதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, நீட் தேர்வை நீங்கள் எதிர்க்கவேண்டாம்’’ என்று சொன்னார்.
உடனே நாங்கள், ‘‘3 ஆயிரம் இடங்கள் அல்ல; 30 ஆயிரம் இடங்கள் கொடுத்தாலும், நீட் தேர்விற்கு ஒப்புக்கொள்ளமாட்டோம்; இது கொள்கை ரீதியான முடிவு. உங்களை ஏமாற்றுவதற்கு இப்படி சொல்கி றார்கள். இதனை ஏற்றுக்கொண்டால், நீங்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்படும்; இதனை முதலமைச்சரிடம் சொல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பினோம்.
அதேபோன்று, அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவ ராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சென்று சொன்னார்கள். அவரும் இதனை ஒப்புக்கொள்ளவில்லை.
உடனே ஆளுங்கட்சியினர் என்ன செய்தார்கள் என்றால், அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கடுமையாக எதிர்த்தோம்!
தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் நாங்களும் பங்கேற்றோம். அந்தக் கூட்டத்தில் இரண்டு பேர் கடுமையாக எதிர்த்தோம். நான் முதலில் தொடங்கி பேசினேன். அடுத்ததாக இன்றைய முதலமைச்சர், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய அரசு எத்தனை இடங்களை கூடுதலாகக் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது கொள்கை முடிவாகும். அதனுடைய விளைவு மிகவும் ஆபத்தானதாகும் என்று சொன்னார்.
பா.ஜ.க., இன்னும் சிலரைத் தவிர, அனைவரும் ஆளுங்கட்சியின் முடிவை ஆதரித்துப் பேசவில்லை.
மிக சாமர்த்தியமாக அன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் வரவில்லை. அதற்குப் பதிலாக துணை முதலமைச்சர் தலைமை தாங்கினார்.
நாங்கள் பதிவு செய்த கருத்து, பதிவாகியிருக்கிறது, அது சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் இருக்கும்.
நீட் தேர்வை எதிர்க்கக் கூடாது என்பதற்காக கூடுத லாக இடங்களைத் தருகிறோம்.
அண்ணா பல்கலைக் கழகத்தை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் – ஆயிரம் கோடி ரூபாய் நிதி தருகிறோம்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின்
‘‘விஸ்வகர்ம யோஜனா’’ திட்டம்!
அவ்வளவு தூரம் போகவேண்டாம்; சற்று நேரத்திற்கு முன்பாக நம்முடைய அருள்மொழி இங்கே உரையாற்றும்பொழுது சொன்னாரே, ‘‘விஸ்வகர்ம யோஜனா’’ – அவரவர் குலத்தொழிலை செய்ய வழி வகுக்கும் திட்டம். விஷ உருண்டையின்மீது நவீன முறையில் சர்க்கரைப் பூச்சு போன்று. இது புரியாமல் சிலர், ‘‘அய்யோ, பணம் தருகிறார்கள்; அதை வீரமணி எதிர்க்கிறாரே’’ என்று சொன்னார்கள்.
சாதாரணமாக தொழில் தொடங்குவதற்கு வங்கியில் கடன் கொடுக்கிறார்கள். புதிதாக என்ன இருக்கிறது விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில்?
முதலில் ஒரு லட்சம் ரூபாய் வங்கிக் கடன் கொடுப்போம்; அதற்குப் பிறகு இரண்டு லட்சம் ரூபாய் கொடுப்போம் என்று சொன்னார்கள். கைவினை ஞர்களுக்கெல்லாம் நல்ல திட்டம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.
18 வயது தாண்டியவர், கல்லூரிக்குச் செல்ல வேண்டிய கட்டத்தில், தனது தகப்பனின் தொழிலான செருப்புத் தைத்தால், வங்கிக் கடனாக ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம் என்று சொன்னார்கள்.
பழைய குலக்கல்வித் திட்டம்தான் விஸ்வகர்மா யோஜனா!
பழைய குலக்கல்வித் திட்டம்தான் விஸ்வகர்மா யோஜனா. பழைய கள், புது மொந்தை என்று சொல்வார்கள். அதுபோன்றதுதான் இது என்று இந்தத் திட்டத்தில் உள்ள சூழ்ச்சியை விளக்கி, நாங்கள் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தோம். அதனால், ஒன்றிய அரசின் முயற்சி பலிக்கவில்லை.
ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு எதிராக எதையாவது குறை சொல்லவேண்டும் என்பதற்காக, ‘‘ஒன்றிய அரசு, இளைஞர்கள் தொழில் செய்வதற்குப் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறது. ஆனால், அந்தத் திட்டத்திற்குத் தடை போடுகிறது’’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.
உடனே நம்முடைய முதலமைச்சர் அவர்கள், அதற்கு நல்ல பதிலடி கொடுத்தார். ‘‘கைவினைஞர்களுக்கான சிறப்பான திட்டத்தை நாங்கள் வைத்திருக்கின்றோம். ஆனால், 18 வயது இளைஞர்களுக்குத்தான் என்று கிடையாது. கல்லூரிக்குச் சென்று படிக்கவேண்டுமா? தாராளமாக கல்லூரிக்குச் சென்று படிக்கலாம்’’ என்று அறிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கையில், காலைச் சிற்றுண்டி அளிப்போம் என்ற திட்டம் இருக்கிறதா?
ஆனால், அதனை அறிவிக்காமல் அதனைச் செய்த ஆட்சிதான் ‘திராவிட மாடல்’ ஆட்சியாகும்.
இன்றைக்கு எங்களுடைய பிள்ளைகள் மகிழ்ச்சி யோடு பள்ளிக்கூடங்களுக்குச் செல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் – பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் என்பதே இப்போது இல்லை!
இங்கே எங்கள் மதிவதனி உரையாற்றும்பொழுது சொன்னாரே, தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் என்பதே இப்போது இல்லையே என்று.
புரட்சிக்கவிஞர் பாடல் எழுதியிருக்கிறாரே,
‘‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட சாலைக்குப் போ
என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ சிந்தாத
கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்’’ என்று பாடினார்.
புரட்சிக்கவிஞர் இப்போது இருந்திருந்தால் என்ன பாட்டு எழுதியிருப்பார்?
‘‘பள்ளிக்கூடத்திற்கு இவ்வளவு
வேகமாக ஓடுகிறாயே,
மெதுவாகப் போ, மெதுவாகப் போ!
ஏனென்றால்,
இது ஸ்டாலின் ஆட்சி இது!
திராவிட மாடல் ஆட்சி இது!’’
என்று பாடியிருப்பார்.
பிள்ளைகளுக்குக் காலைச் சிற்றுண்டி பள்ளிக் கூடங்களில் அளிக்கப்படுகிறது. வகுப்பு நண்பர்களோடு அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, வகுப்பறைக்குச் செல்கி றார்கள்.
அப்படி பள்ளியில் காலைச் சிற்றுண்டி சாப்பிடும் ஒரு பிள்ளை தன்னையறியாமல், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களைப் பார்த்து, ‘‘அப்பா என்று உங்களை அழைக்கலாமா?” என்று கேட்டிருக்கிறது.
இது வெறும் பதவியால் அல்ல நண்பர்களே!
பதவி இன்றைக்கு வரும்; போகும்.
மதக்கலவரத்தை உண்டாக்கலாமா? என்று நினைத்தார்கள்!
ஏன் இதைச் சொல்கிறோம் என்று சொன்னால், ‘திராவிட மாடல்’ ஆட்சியின்மீது அவ்வளவுக் கோபம் சிலருக்கு. இந்த ஆட்சியை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக ஏதேதோ செய்தார்கள் – விபீஷணர்களைப் பிடித்துப் பார்த்தார்கள்; உளறு வாயர்களைப் பிடித்துப் பார்த்தார்கள்; குத்தகைதாரர்களைப் பிடித்துப் பார்த்தார்கள். மதக்கலவரத்தை உண்டாக்கலாமா? என்று நினைத்தார்கள்.
இங்கே மதக் கலவரத்திற்கு இடமே இல்லை. தமிழ்நாடு என்பது முழுக்க முழுக்க அமைதிப் பூங்கா என்று காட்டி விட்டவுடன், வேறு வழியில்லாமல் திணறிக் கொண்டிருக்கின்றார்கள்.
எந்தவிதமான தியாகத்திற்கும் தயாராக இருக்கக்கூடிய கூட்டம்தான் இந்தக் கூட்டம்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தத் திட்டத்தை நாம் எதிர்க்காமல் விட்டோம் என்றால், எல்லா திட்டங்க ளையும் ரத்து செய்வார்கள். மீண்டும் மனுதர்மம்தான் வரும்; பெண்கள் படிக்க முடியாத நிலை ஏற்படும்.
மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு!
‘‘அய்ந்து பெண்களைப் பெற்றால், அரசனும் ஆண்டி’’ என்று சொன்னார்கள் முன்பு. இன்றைக்கு அய்ந்து பெண் என்ன? ஆறு பெண் பெற்றாலும், ஆறு பெண்களுக்கும் – கல்லூரி செல்லும் பெண்களுக்கும் மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது நம்முடைய ‘திராவிட மாடல்’ அரசு.
(தொடரும்)