கோலாலம்பூர், பிப். 15- மலேசிய திராவிடர் கழக கூலிம் கிளையின் மேனாள் தலைவர் நாரண திருவிடச்செல்வன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கடந்த 21 டிசம்பர் 2024 அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை அவரது நெருங்கிய நண்பர் பொ.முனியப்பன் வழி நடத்தினார்.
அவர் தமதுரையில், நா.திருவிடச்செல்வன் தமது இறுதி நிகழ்வு எப்படி நடைபெற வேண்டும் என்று எழுத்துப்பூர்வமாக தம்மிடம் வழங்கியதாக தெரிவித்தார். மேலும் தமது இளமைக் காலம் முதல் முதுமைக் காலம் வரை தமது கொள்கைகளில் சிறிதளவும் பிசகாமல், தமிழ்ப்பற்று, தமிழ் வளர்ச்சி, தொலைநோக்கு சிந்தனை ஆகியவற்றுடன் செயல்பட்டு வந்ததாக கூறினார்.
திருவிடச்செல்வனின் மூத்த மகன் கனியமுதன் தன் தந்தையைப் பற்றி கூறுகையில் தம் தந்தையின் பிரிவை தங்களால் மறக்க இயலவில்லை என்றார். பிள்ளைகள் மூவருக்கும் நிறைவான கல்வியறிவை கொடுத்து வளர்த்தார், எல்லா நிலைகளிலும் பிள்ளைகளின் தேவைகளை அறிந்து செயல்பட்டார் என்றும் கூறினார்.
கே.ஆர்.அன்பழகன் தமதுரையில், நாரண திருவிடச்செல்வன் அவர்கள் ம.தி.க. கூலிம் கிளையின் தலைவராக இருந்த பொழுது கூலிம் கிளை மிகவும் கட்டுக்கோப்பாக தனித்துவமான கிளையாக திகழ்ந்தது என்றார். 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமது மகளின் திருமணத்திற்கு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வந்திருந்தபொழுது நாரண திருவிடச்செல்வன் அவர்கள், ஆசிரியரிடம் ‘தமிழில் பெயரிடுவோம்’ என்ற தமது நூலை திராவிடர் கழக சார்பில் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆசிரியர் அவர்கள் அதை ஏற்று கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்நூலை திராவிடர் கழகம் சார்பில் வெளியிட்டார். அதன்பிறகு அதன் 2ஆம் பதிப்பு 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதென்று கூறினார்.
நாராண திருவிடச்செல்வன் அவர்கள் 1991ஆம் ஆண்டு “அலகுக்காவடி’, தீமிதி அருளா?அறிவியலா?” என்ற நூலை கடும் எதிர்ப்புக்களுக்கிடையில் வெளியிட்டார். 1987ஆம் ஆண்டு கோலாலம்பூர் பகுத்தறிவு பாசறை இளைஞர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, தீ மிதித்து, இவை எல்லாம் மூடநம்பிக்கைகள் என நிரூபித்தனர். இந்நிகழ்வுகளின் ஒளிப்படங்களும் அது தொடர்பான பத்திரிக்கை செய்திகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இந்நிகழ்வில் ம.தி.க. பினாங்கு மாநில தலைவர் செ.குணாளன் மற்றும் மாநில செயலாளர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் காணொலி இந்நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவருக்கும் நாராண திருவிடச்செல்வன் குடும்பத்தினர் சார்பாக வெளியிடப்பட்ட “தமிழில் பெயரிடுவோம்” நூலின் எட்டாம் பதிப்பு வழங்கப்பட்டது.
மலேசியா ‘தமிழில் பெயரிடுவோம்’ நூலாசிரியர்நாரண திருவிடச்செல்வனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

Leave a Comment