திருவனந்தபுரம், பிப் 13 சமூக காணொலி வலைதளமான யூடியூபில் புகழ்பெற்ற பிறகு புகழ்போதையில் பள்ளிக்கு யாரும் செல்லவேண்டாம் என்று சர்ச்சையாக பேசிய நபர்மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நேரத்தை வீணாக்காமல் இருக்க பள்ளிக்குச் செல்வதை தவிர்க்குமாறு சொன்ன யூடியூபர் மீது கேரள பொதுக் கல்வித்துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர், மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் நெருங்கி வருவதால், நேரத்தை வீணாக்காமல் இருக்க, மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்குமாறு வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவைப் பார்த்த கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி சம்பந்தப்பட்ட யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுக்கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பத்தனம்திட்டா கல்வித் துணை இயக்குநர், யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல்துறைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு குறிப்பிட்ட வருகைப் பதிவு கட்டாயம் என்பதால், மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று அமைச்சர் சிவன்குட்டி வலியுறுத்தியுள்ளார்.
புதையல் ஆசையில் தொழிலாளி நரபலி
ஜோதிடர் உள்பட
2 பேருக்கு வலைவீச்சு
பெங்களூரு, பிப்.13 கருநாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரசுராம்புராவை சேர்ந்தவர் பிரபாகர். இவர் அப்பகுதியில் செருப்பு தைக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய பிராபகருக்கு பைக்கில் லிப்ட் கொடுப்பதாக ஒரு அடையாளம் தெரியாத நபர் தன்னுடன் அழைத்துச்சென்றுள்ளார்.
நரபலி
இந்நிலையில் அந்த தொழிலாளி நரபலி கொடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் புதையல் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு ஆணை நரபலி கொடுக்க வேண்டும் என ராமகிருஷ்ணா என்கிற ஜோதிடர் ஆனந்த ரெட்டியிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சாலையில் சென்றுகொண்டிருந்த பிரபாகருக்கு, ஆனந்த் ரெட்டி தனது பைக்கில் உடன் கூட்டிச் செல்வதாக (லிப்ட்) கொடுத்துள்ளார். பின்னர் அவரை நரபலி கொடுத்ததாக தெரியவந்துள்ளது. இந்த கொடூர செயலை செய்த ஆனந்த் ரெட்டி மற்றும் ஜோதிடரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த காலத்திலும் இதுபோன்ற நரபலிகள் நடப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.