புதுடில்லி, பிப்.13 ஆளுருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ள உச்சநீதிமன்றம், இருதரப்பும் பதில் அளிக்க, 12 கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
கேள்விகள் என்ன?
அப்போது அனைத்து தரப்பும் ஒரு வார காலத்திற்குள் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பான, 12 கேள்விகளை நீதிமன்றம் எழுப்பி உள்ளது.
1. சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பி வைத்த மசோதாவை ஆளுநர் மீண்டும் அரசுக்கு அனுப்பி வைத்தால், அதில் திருத்தங்கள் செய்தோ அல்லது செய்யாமலோ மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கும்போது, அதை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியுமா? ஆம், எனில் அதற்கான அதிகாரங்கள் என்ன?
2. குறிப்பிட்ட மசோதாக்களை மட்டும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடியுமா அல்லது அனைத்து மசோ தாக்களையும் அனுப்பி வைக்க முடியுமா?
3. ஆளுநருக்கு என்று இருக்கும் தனிப்பட்ட அதிகாரங்கள் என்னென்ன?
4. அரசியல் சாசன பிரிவு 200 இன் கீழ், அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்டு தான் ஆளுநர் நடக்க வேண்டுமா அல்லது அதற்கு மாறாக நடந்து கொள்ள முடியுமா?
5. சட்டப்பேரவை அனுப்பும் மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் எனில் அதே மசோதாவை சட்டப்பேரவை மீண்டும் நிறை வேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், அந்த மசோதாவை அவர் என்ன செய்வார்?
6. அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 இன் கீழ், மசோதாக்களின் மீது ஆளுநர் முடிவெடுக்க ஏதேனும் கால வரம்பு இருக்கிறதா?
7. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் மசோதாவுக்கான ஒப்புதலை கட்டா யம் வழங்க வேண்டுமா?
8. அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 இன் கீழ், மசோதாக்கள் மீது நான்கு விதங்களாக முடி வெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?
9. மசோதாக்களை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பதற்கு ஆளுநருக்கு என்று என்னென்ன அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன?
10. சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோ தாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்போது, ஒன்றிய அரசால் பரிந்துரைகள் வழங்கப்பட்டு மசோதா நிராகரிக்கப்பட்டால், அதை அரசமைப்புச் சட்டத்தின் எந்த விதி கையாள்கிறது?
11. ஆளுநர் அனுப்பி வைத்த மசோதாவை மீண்டும் அவருக்கே திருப்பி அனுப்பும் குடியரசுத் தலைவர், அதன் மீது சட்டப்பேரவை முடிவெடுக்க அறிவுறுத்தல் கொடுக்கிறார். பிறகு மீண்டும் சட்டப்பேரவை ஆளுநரிடம் மசோதாவை கொடுக்கிறது. இப்போது அந்த மசோதாவை ஆளுநர் மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியுமா, முடியாதா?
12. அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 இன் கீழ், ஆளுநர் தன் விருப்பத்தின் படி எந்த அளவிற்கு செயல்பட முடியும்?
இவ்வாறு 12 கேள்விகளை எழுப்பி உள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும், ஆளுநர் தரப்பும் ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க
உள்ளனர்.