ராமேசுவரம்,பிப்.11- தமிழ்நாடு மீனவர்கள் 15 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீனவர்கள் சிறை பிடிப்பு
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 25ஆம் தேதி கடலுக்கு சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி அதிலிருந்த ஜெயபால், ஏனோக், வீரபாண்டி, சுரேஷ், அந்தோணி, சூசை, சிவசங்கர், குணசேகரன், முத்து, அபிஸ்டன், சந்தோஷ், ரேமிஸ்டன், மேக்மில்லன், ஆரோக்கிய ஜோபினர், அகரின் ஆகிய 15 மீனவர்களை சிறைபிடித்தனர். இவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ரூ.60 லட்சம் அபராதம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 14 மீனவர்களுக்கு இலங்கை பணத்தில் தலா 50 ஆயிரம் அபராதம் அல்லது 6 மாதச் சிறைத் தண்டனையும், விசைப்படகு ஓட்டுநர் ஜெயபாலுக்கு இலங்கை பணத்தில் 2 கோடி அபராதம் மற்றும் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். 15 மீனவர்களுக்கும் மொத்த அபராதம் இலங்கை பணத்தில் 2 கோடியே 7 லட்சம். இதன் இந்திய மதிப்பு ரூ. 60 லட்சத்து 48 ஆயிரம் ஆகும்.