புதுடில்லி,பிப்.10- தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்கக் கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளதால், நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக நடுத்தர மக்கள் தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரை ஒன்பது மாதங்களில் தங்கக் கடன்கள் 68.3% அதிகரித்துள்ளன. இதன் மதிப்பு ரூ.70,000 கோடி அதிகரித்து ரூ.1.72 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
2024ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தங்கக் கடன்கள் ரூ.1.02 லட்சம் கோடியாக இருந்தது.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் தங்கக் கடன்கள் எளிதாக கிடைப்பது, குறைந்த ஆவணங்கள் தேவைப் படுவது மற்றும் விரைவாக கடன் கிடைப்பது போன்ற காரணங்களால் தங்கக் கடன்கள் மக்கள் மத்தியில் எப்போதும் அதிகம் விரும்பும் கடன்களில் ஒன்றாக உள்ளது. பொதுத்துறை வங்கிகள் உட்பட நிதி நிறுவனங்கள் தங்கக் கடன்களை விரை வாக வழங்கி வருகின்றன.
செலவுகளை சமாளிக்க…
இந்திய கலாச்சாரத் திலும், மக்களின் வாழ்க்கை முறையில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கும் காரணத்தால் தங்கம் முக்கிய முத லீடாகவும், நிதி ஆதார மாகவும் உள்ளது. இப்படியிருக்கையில் தங்கம் விலை உயர்ந்ததன் மூலம் தங்கத்தை வைத்து கடன் வாங்க மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
இதேபோல் விலைவாசி உயர்ந்த வேளையில் தங்கத்தை வைத்து கடன் வாங்கி செலவுகளை சமாளிப்பதும் அதிகரித் துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கும் தங்கக் கடன்கள் 41.66% அதிகரித்து டிசம்பர் 2024 நிலவரப்படி ரூ.43,745 கோடியை எட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கி வழி காட்டுதலின்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சம் 75% வரை கடனாக வழங்க அனுமதிக்கப்படுகின்றன. கடந்த ஒரு ஆண்டில் தங்கத்தின் விலை 25% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தை அடமானம் வைத்து அதிக தொகையை கடனாக பெற முடியும். இதன் காரணமாக தங்கக் கடன்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.