புதுடில்லி,பிப்.4- இந்திய வங்கிகள், கடந்த 10 ஆண்டுகளில் தங்கள் நிதிநிலை அறிக்கைகளில் இருந்து விலக்கி வைத்த, 16.61 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனில், 16 சதவீதத்தை மீட்டுள்ள தாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி இவ்வாறு பதில் அளித்துள்ளது.
தனி பதிவேடு
இருப்புநிலை மேலாண்மை மற்றும் வரி செலுத்துவது தொடர்பான காரணங்களுக்காக, வாராக் கடனில் குறிப் பிட்ட பகுதியை, நிதிநிலை அறிக்கையில் இருந்து வங்கிகள் விலக்கி வைக்கின்றன. இந்த வாராக்கடன் விபரங்களை வங்கிகள் தனி பதிவேட்டில் பராமரிக்கும்.
இதனால், கடன் வாங்கியவர் களிடமிருந்து இந்த தொகையை வசூலிக்க வேண்டியதில்லை என்று அர்த்தமல்ல. இந்த நடை முறைக்கு பிறகும், வங்கிகளுக்கு வாராக்கடன்களை வசூலிக்கும் உரிமை உண்டு.
வாராக்கடன் மீட்பு
கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், கடந்தாண்டு செப்டம்பர் வரை, நாட்டின் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மொத்தமாக 16.61 லட்சம் கோடி ரூபாயை இவ்வாறு ஒதுக்கி வைத்துள்ளன.
இதில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இணைந்து 2.70 லட்சம் கோடி ரூபாயை மீட்டுள்ளன.
இது ஒட்டுமொத்த தொகையில், கிட்டத்தட்ட 16 சதவீதம். மீதமுள்ள 13.91 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்படாமல் உள்ளது. அதை மீட்க வங்கிகள் தரப்பில் நடவடிக்கை தொடர்கிறது.
கடன் வசூல்
2014 ஏப்ரல் 1 – 2024 செப்டம்பர் 30 வங்கிகள் வாராக்கடன் மீட்கப்பட்ட தொகை (ரூ. கோடியில்)
பொதுத்துறை வங்கிகள் ரூ.12,08,621 2,16,547, தனியார் வங்கிகள் ரூ.4,46,669 53,248, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் ரூ.6,020 தகவல் இல்லை.