புதுடில்லி, ஜன.29 வாட்ஸ் அப் உள்ளிட்ட பிற மின்னணு தளங்கள் மூலம் வழக்கின் விசாரணைக்கு ஆஜராக காவல்துறை சம்மன்களை அனுப்பக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேவையற்ற கைது நடவடிக்கைகளை தடுக்கவும், ஜாமீன் வழங்குவதை எளிதாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கானது நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அமர்வில் நேற்று (29.1.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு உதவ நியமிக்கப்பட்ட அமிகஸ் கியூரியான மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லுத்ரா, வழக்கு விசாரணைக்காக ஆஜராக காவல்துறையினர் அழைப்பாணை (சம்மன்) வாட்ஸ்அப் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத சேவை தளங்கள் மூலம் அனுப்புகின்றனர்.
இதனை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது பாதுகாப்பான ஒன்று கிடையாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அங்கீகரிக்கப்படாத சேவை தளமான வாட்ஸ் அப் உள்ளிட்ட பிற மின்னணு தளங்களில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராக கூறி அழைப்பாணை அல்லது நோட்டீஸ் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் அனுப்பக் கூடாது. இது தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் காவல்துறைக்கு பொதுவான சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.