திருச்சி, ஜன. 24- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 45ஆவது ஆண்டு விழா 23.01.2025 (வியாழக்கிழமை) மாலை 4.00 மணி அளவில், பள்ளியின் வளாகத்தில் உள்ள என்.எஸ்.கலைவாணர் அரங்கில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
நிகழ்விற்கு பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினராக, திருச்சி, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர். மற்றும் பள்ளியின் மேனாள் மாணவி. முனைவர்.ஜே.கோகிலா பங்கேற்றார்.
மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில், பள்ளி மாணவியர் தங்கள் கண்கவர் வரவேற்பு நடனம் மூலம் அனைவரையும் வரவேற்றனர். தொடர்ந்து பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றி நிகழ்விற்கு வந்திருந்தோரை வரவேற்று, சிறப்பு விருந்தினருக்குப் பயனாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்வில் பள்ளியின் முதல்வர் டாக்டர் க.வனிதா 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தளித்து பள்ளியின் சாதனையைப் பறைசாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடந்து வந்த 45 ஆண்டு கால வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டக்கூடிய நாடகம் மற்றும் வேண்டாம் ஜாதியப் பாகுபாடு என்னும் கருத்துடைய நாடகமும் பள்ளியின் மாணவர்களால் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டப்பட்டது. மேலும் தந்தை பெரியாரின் பெருமை பேசும் பாடலுக்கும், இயற்கையைக் காக்க வேண்டிய அவசியம் குறித்தப் பாடலுக்கும் மாணவர்கள் அரங்கம் அதிர நடனமாடி மகிழ்வித்தனர்.
கல்வியோடு கூடிய ஒழுக்கம்
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் முனைவர் .ஜே.கோமதி கல்வியோடு கூடிய ஒழுக்கத்திற்கு வித்திடக் கூடிய இந்த பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்த பெற்றோர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோடு, மாணவர்களுக்கு விளையாட்டோடு கூடிய கல்வியின் முக்கி யத்துவத்தை பெற்றோர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், தற்போதைய மாணவர்களுக்குப் பெற் றோர்கள் கொடுக்கக்கூடிய அளவுக்கு மீறிய செல்லம், அவர்கள் தவறான பாதைக்குச் செல்வதற்கு வழி வகுப்பதால் பெற்றோர்கள் கண்டிப்புடன் கூடிய கனிவைக் கையாள வேண்டியது இன்றைய சூழலில் மிக மிக அவசியம் என்று அறிவுறுத்தினார். மாணவர்களுக்கு அலைபேசி பயன்பாடு தற்போதைய படிக்கும் சூழலில் தேவையற்ற ஒன்று என்று கூறிய சிறப்பு விருந்தினர், மாணவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும், பழ வகைகளையும், காய்கறிகளையும் தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, தவறாமல் உடற்பயிற்சி செய்து உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், நோயற்ற வாழ்வே குறைவற்றச் செல்வம் என்று நம் முன்னோர் சொன்னது வெறும் வார்த்தை அல்ல; அது வாழ்க்கைக்கான பழமொழி, என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றிகளைக் குவித்து சாதனை படைப்பதோடு குழந்தைகள் பெற்றோர்களுக்கும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தைக் கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.நிகழ்வில் தம்மிடம் மன இறுக்கமின்றி எப்படி படிப்பது.? எப்படி சாதனை படைப்பது..? எனத் தன்னிடம் கேள்வி கேட்ட மாணவிகளுக்குத் தயக்கமில்லாமல் பதில் வழங்கி, வீடோ, பணியிடமோ, கற்கும் இடமோ எங்கிருந்தாலும் மன அழுத்தத்திற்கு இடம் தராது செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பணித் தோழர்கள் சிறப்பிப்பு
விழாவில், ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்.திருமதி.எஸ்.ரம்யா மற்றும் 10 ஆண்டுகள் பணிபுரிந்து வரும் பணித் தோழர் பி.மகேந்திரன் ஆகியோருக்கு ரொக்கப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தங்கள் பாடங்களில் 100% தேர்ச்சியைத் தந்த ஆசிரியர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து 2024-2025ஆம் கல்வி ஆண்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல், நூறு சதவிகிதம் வருகை புரிந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது . கடந்த கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தது பெற்றோர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நிறைவாகப் பள்ளியின் கணித ஆசிரியரும், 45ஆவது ஆண்டு விழாவின் ஒருங்கிணைப்பாளருமான இ.அருண் நன்றியுரை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
நிகழ்வைப் பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி செல்வி.டி.சவுமியா ஜாஸ்மின் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி செல்வி.இ.தருணிக்கா ஜாஸ்மின் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.