கிருஷ்ணகிரி, ஜன.23– கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க., நா.த.க., பா.ஜ.க. மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 1300 பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இணைப்பு விழாவில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர. சக்கரபாணி முன்னிலையில், நாம் தமிழர் கட்சி செய்தித் தொடர்பாளர் கவுதமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சூர்யா, பர்கூர் சட்டமன்ற தொகுதி தலைவர் சக்திவேல் மற்றும் காவேரிப்பட்டணம் நிர்வாகிகள் உள்ளிட்ட 1,000 பேர் இணைந்தனர். அதே போல அ.தி.மு.க. மீனவரணி ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் ரத்னம் மற்றும் பாஜ மண்டல பொது செயலாளர் சங்கீதா தலைமையில், 300க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
பெண்ணுரிமைப் போராளி
பெரியார்!
அவர்களை வரவேற்று அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், ‘பெண்ணுரிமைக்காக போராடிய பெரியாரை, நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான், யாருக்காகவோ விமர்சித்துப் பேசி வருகிறார். அதனால் தான் ஆயிரக்கணக்கான தம்பிகள். இன்று தி.மு.க.வில் இணைந்துள்ளீர்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய இந்தியா கூட்டணி. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதி களிலும் வென்றது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இளைஞர்கள் வருகையால் அது கண்டிப்பாக உயரும். நீங்கள் அனைவரும் கடுமையாக உழைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.