புதுடில்லி, ஜன. 11- மணவிலக்கு வழக்கு ஒன்றில், கடந்த நவம்பர் 28ஆம் தேதி, கணவன்-மனைவி இடையே தீர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், அவர்களுடைய மகளும் கையெழுத்திட்டுள்ளார். அப்பெண் அயர்லாந்தில் படித்து வருகிறார்.
தீர்வு ஒப்பந்தத்தின்படி, மனைவிக்கு மொத்தம் ரூ.73 லட்சம் வாழ்வூதியமாக அளிக்க கணவர் ஒப்புக்கொண்டார். அதில், ரூ.43 லட்சத்தை மகள் தனது படிப்பு செலவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், அந்த பணத்தை ஏற்றுக் கொள்ள மகள் மறுத்து விட்டார். ஆனால், பணத்தை திரும்பப்பெற அவருடைய தந்தை மறுத்து விட்டார்.இதற்கிடையே, இந்த மணவிலக்கு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
சட்டப்பூர்வ உரிமை
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-மகள் என்ற முறையில், அந்த பெண் தனது கல்விச்செலவுக்கு பெற்றோரிடம் இருந்து பணம் பெற சட்டப்பூர்வ உரிமையும், இழக்க முடியாத உரிமையும் உண்டு. மகளுக்கு தனது கல்வியை தொடர அடிப்படை உரிமை உள்ளது. அதற்காக தங்களது நிதி ஆதாரத்தில் இருந்து போதிய நிதியை அளிக்க பெற்றோரை கட்டாயப்படுத்த முடியும்.அந்த பெண், தனது கண்ணியத்தை காக்க பணத்தை வைத்துக்கொள்ள விரும்பாமல், திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டார். அந்த பணத்தை பெற மகளுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது.
வாழ்வூதியமாக மனைவி ரூ.30 லட்சம் பெற்றிருப்பதாலும், இந்த இணையர் கடந்த 26 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதை ஒப்புக்கொண்டதாலும் அவர்களுக்கு இருவரின் சம்மதத்தின்பேரில் மண விலக்கு வழங்குவதை தவிர்க்க முடியாது. மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவின்கீழ் உச்சநீதிமன்றத்திற்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, இருவரின் சம்மதத்தின்பேரில், இருவருக்கும் மணவிலக்கு அளிக்கிறோம்.
உரிமை கோரக்கூடாது
தீர்வு ஒப்பந்தத்தின்படி, இருவரும் ஒருவர் மீது ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரக்கூடாது. ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தால், அது முடித்து வைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில், இருதரப்பினரும் எந்த உரிமையும் கோரக்கூடாது. தீர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.