கவிஞர் கலி.பூங்குன்றன்
மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம் பாடுபடு கின்றது. இவற்றிற்கு எதிராகவும், தடையாகவும் இருக் கும் எதையும் அடியோடு ஒழிக்கத் தைரியம் கொள்கிறது
(‘குடிஅரசு’ 20.09.1931)
தன்மான இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்று வரலாற்றில் நின்ற இந்த இயக்கத்தின் ஆணி வேர் எதை நோக்கி? அதை ஈட்ட அது எதையும் சந்திக்கவும், தடைகளைத் தகர்க்கவும் தோள் தூக்கி எழுவது என்று தீர்மானித்துவிட்டது.
அந்தத் தடைகள் (1) கடவுள், (2) மதம், (3) சாஸ்திரம் (4) காந்தி (5) பார்ப்பான் ஆகிய வடிவங்களாலும், சிந்தனை ஓட்டத்தாலும் ஆணி வேர்வரை இங்கு பதிந்துள்ளன என்பதை அறுதியிட்டுத் தெரிந்து கொண்ட தந்தை பெரியார் இவை அய்ந்தும் ஒழிக என்கிற முழக்கத்தோடு தன்மான இயக்கத்தைத் துவக்கினார்.
தன் தோளில் போட்டுக் கொண்டு
இந்த அய்ந்தும் சமுதாயத்தில் எவ்வளவு பலமாக வேரூன்றி நின்றன – எந்த மக்களுக்காகப் பாடுபடப் போகிறோமோ, எந்த மக்களின் நன்மைக்காக இவற்றை எதிர்க்கப் போகிறோமோ அந்த மக்களே தம் பணிக்கு எதிர்ப்பாக முரட்டுத்தனத்துடன் கிளம்புவார்கள் – அந்த அளவுக்கு அந்த மக்களின் சிந்தனை சீழ் பிடித்துப் போயிருக்கிறது; அவர்களின் மூளைக்கு இந்தப் பிற்போக்குச் சக்திகள் விலங்கிட்டு விட்டன என்பதை உணர்ந்த நிலையில்தான் யாரும் செய்ய முன் வராத பணியைத் தந்தை பெரியார் அவர்கள் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்ய தானே முன் வந்தார்.
அதனால்தான் தம் மக்களாலேயே கடும் எதிர்ப்பும், கொடும் தொல்லைகளும் மூர்க்கப் புயலாகக் கிளப்பப்பட்டபோதும், அது இயல்பானது தான் என்று எடுத்துக் கொண்டாரே தவிர, அவர்களை வெறுக்கவோ, வீண் வம்பு – தும்புகளில் ஈடுபடவோ எண்ணினார்கள் இல்லை. அவர்களின் மயக்கத்தை, மதியீனத்தை மாற்றுவதுதான் அதற்குச் சரியான மா மருந்து என்று எண்ணி அறிவுத் துறையில் தன் பணியைத் துவக்கினார்கள்.
சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கும் போதுகூட நம்மையே நாம் பொறுப்பாளியாகவும், உதவியாளனாகவும், நம்பியுமேதான் இக்காரியத்தில் இறங்கினோம். இவ்விஷயத்தில் நமக்குள்ள உறுதிதான் இவ்வியக்கத்துக்குச் சொத்தும், அஸ்திவாரமுமேயொழிய வேறு ஒன்றுமில்லை (‘குடிஅரசு’ 10.02.1930) என்று கூறுகிறோம். இதில் உள்ள துணிவும், தீர்க்கமும் தீயில் அழுக்கு இல்லை என்பது போன்ற தெளிவைத் தீர்க்கமாக வெளிப்படுத்துகின்றன.
கடைசி மூச்சு அடங்கும் வரை இந்தத் தூய்மையை, தன்மையை தந்தை பெரியாரிடம் காணலாம்.
சுயமரியாதை உணர்வு
இந்தச் சுயமரியாதை உணர்வு என்பது சின்னஞ் சிறு வயதிலேயே தந்தை பெரியாரைப் பற்றிக் கொண்டது தான்! அந்த உணர்வின் ஊட்டமே, பிற்காலத்தில் அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலுமே ஒளிவிட்டது! எந்தச் சுற்றுச் சார்பும் அவரைப் பலி கொள்ளவில்லை.
தாம் எடுத்துக் கொண்ட பணி எத்தகையது என்பதை 1933ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கூறுகிறார்:
“மனித சமூகத்திற்கு தீங்கை இழைத்து வரும் விஷயம் கடவுள் சொன்னதானாலும், மதம் சொன்னதானாலும் அல்லது கடவுளும், மதமும், அரசாங்கமும் சொன்னதானாலும், அவைகளை அழிக்கத் தைரியம் கொள்ள வேண்டும், நாம் எல்லோரும் வெகு காலமாகவே முன்னோர் காலந்தொட்டு மதச் சீர்திருத்தவாதிகளாகவும், கடவுள் சீர்திருத்தவாதிகளாகவும், ஒழுக்கச் சீர்திருத்த வாதிகளாகவும், அரசு சீர்திருத்தவாதிகளாகவும் இருந்து பார்த்தாய் விட்டது. நமது முன்னோர்கள் காலம்தொட்டு ஆயிரக்கணக்கான வருடங்களாய் சீர்திருத்தவாதிகளாய் இருந்தும் பார்த்தாய் விட்டது. எந்தத் துறையில் சீர்திருத்தமடைந்திருக்கிறோம்? ஏழை சீர்திருத்தமடைந்து நாளுக்கு நாள் பட்டினியும், நோயும், இழிவும் அடைந்து கொண்டே போகிறான். பணக்காரனும், சோம்பேறியும் சீர்திருத்தமடைந்து நாளுக்கு நாள் பெரும் பணக்காரனாகி, பிரபுவாகி, ஜமீனாகி, ராஜாவாகி, தலைமுறை தலைமுறை ஜமீனும், ராஜாவுமாய் ஆகிக் கொண்டே போகிறான். சீர்திருத்தத்தின் பலனைக் காண்பதற்கு இன்னும் வேறு என்ன உதாரணம் வேண்டும்? ஆகவே, ஏழைத் தன்மை, பணக்காரத் தன்மை என்கின்ற இரண்டு தன்மையும் உலகில் இருக்கக் கூடாது என்று அவைகளை அடியோடு அழிப்பது நல்ல வேலையா? அல்லது அத்தன்மைகள், எந்த ரூபத்திலாவது என்றும் இருக்கும்படி சீர்திருத்தம் செய்வது நல்ல வேலையா? என்று யோசித்துப் பாருங்கள். அழிவு வேலைக்கு எதிர்ப்புதான் சீர்திருத்த வேலை என்பது. தீமைகளுக்குக் காவல்தான் சீர்திருத்தம் என்பது. ஆகவே, தீமைகளை அழிக்க வேண்டுமானால் அவற்றின் காவல்களையும், காப்புகளையும் முதலில் நிர்த்தூளியாக்க வேண்டும்.
அரசனையானாலும், மதத்தையானாலும், கடவுளை யானாலும் நாம் எதிர்ப்பதும், அழிக்க முற்படுவதுமான காரணமெல்லாம் இவை தீமைக்குக் காவலாய் இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல், அவைகளிடம் நமக்குப் பொறாமையோ, துவேஷமோ ஏற்பட்டதால் அல்ல. ஏழ்மைக் கஷ்டமில்லாமலும், பணக்காரக் கொடுமை இல்லாமலும், பார்ப்பன உயர் ஜாதி இல்லாமலும் – பறையன் தாழ்ந்த ஜாதியல்லாமலும் – முதலாளி ஆதிக்கமில்லாமலும் – கூலி அடிமைத் தன்மை இல்லாமலுமிருப்பதற்கு ஆதாரமான மதம், கடவுள், அரசன், சட்டம், நீதி, தர்மம் ஆகியவைகளை நாம் அழிப்பதில்லை.
அவைகளைப்பற்றி நமக்குக் கவலையேயில்லை. இவர்கள் விஷயத்தில் நாம் மதத்துரோகியோ, கடவுள் துரோகியோ, ராஜத் துரோகியோ, சட்டம் மறுக்கவோ, அதர்மக்காரனாகவோ இருக்க நாம் சிறிதும் விரும்பவில்லை.
ஏழை – பணக்காரத் தன்மையையும், கீழ்-மேல் ஜாதியையும், முதலாளி – அடிமையையும் கொண்டதான நிலைமைகள் நடைபெற ஆதரவாயிருக்கும் கடவுள், மதம், அரசன், தர்மம், சட்டம் ஒழிந்தே ஆக வேண்டும். ஆதரவாயிருக்கும் கடவுள், மதம், அரசன் என்பவைகள் மாத்திரமல்ல – இவைகளை அனுமதித்துக் கொண்டிருக்கும் அரசாங்கமும், நீதி, ஒழுக்கம், பழக்கம், வழக்கம் முதலியன என்பவைகளையும், நாங்கள் அழித்தே தீருவோம். ராஜத் துரோகி, கடவுள் துரோகி, மதத் துரோகி பூச்சாண்டிகள் இனி சுயமரியாதைக்காரர்களிடம் செல்லாது.
சுயமரியாதைக்காரர்களிடம் மாத்திரமல்ல, வெகு சீக்கிரத்தில் உலகத்திலேயே அவைகளுக்கு இடமில்லாமல் போகப் போகின்றது. இதுகாலவரையும் கஷ்டப்படும் மக்கள் தங்கள் தலைவிதியின்மீதும், கடவுள் மீதும் பழி போட்டுக் கொண்டு தலைவிதியை மாற்றவும், கடவுள் தயவு பெறவும் என்று மேலும் மேலும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்து வந்தார்கள். ஆனால், இப்போது சுயமரியாதைக்காரர்களால் – நாத்திகர்களால் – கடவுள், மதத் துரோகிகளால் ஜனங்கள் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். இவைகள் சோம்பேறிகளும், பணக்கார முதலாளிகளும் செய்யும் சூழ்ச்சியும், பித்தலாட்டமுமே யொழிய வேறல்ல என்றும் கடவுளும் மதமும் இந்தப் பித்தலாட்டக்காரர் கற்பனைகளே தவிர வேறுயில்லை என்றும் உணர்ந்து கொண்டார்கள். நன்றாய் உணர்ந்து கொண்டார்கள். இப்பொழுது இவை களை எப்படி ஒழிப்பது? என்பதில்தான் கவலையாய் இருக்கிறார்கள்.
வேகமாய்ப் போக வேண்டி – போவதற்குத் தயாராய் இருக்கிற மோட்டார்காருக்கு முன்னால் பனை மரத்தைக் கொண்டு வந்து போட்டதுபோல், இன்று கடவுளும், மதமும், அரசாங்கமும் குறுக்கே கொண்டு வந்து போடப்பட்டு இருக்கின்றன. இவை வெகு நாளைய கடவுளாய் இருந்தாலென்ன? அவதாரப் புருடர்களால் உண்டாக்கப்பட்ட மதமாய் இருந்தாலென்ன? சட்டப்படி அமைக்கப்பட்ட அரசாங்கமாய் இருந்தாலென்ன? ஒழிய வேண்டும் என்று முடிவுக்கு வந்தபின் அவை தானாக ஏற்பட்டால் என்ன? சட்டப்படி ஏற்பட்டால் என்ன? சும்மா ஏற்பட்டால் என்ன? ஒழிய வேண்டுமா வேண்டாமா? என்பதுதானே முக்கிய விஷயம்.
(‘குடிஅரசு’ 05.02.1933)
91 ஆண்டுகளுக்கு முன் அய்யா அவர்களால் அளிக்கப்பட்ட இந்தப் பிரகடனம் இன்றைய தினம் உலக மானுடத்தையே தழுவிக் கொள்ளும் அளவுக்கு அது உயர்ந்து நிற்கிறது! அது தேவைப்பட்டு இருக்கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
தந்தை பெரியார் அமைப்பு ரீதியாகப் பணியாற்றத் தொடங்கியது காங்கிரசில்தான் என்றாலும், வைதீகம் தலைவிரித்து நின்ற அந்த அமைப்பில் இருந்தேகூட தனக்கென்று இருந்த உணர்வுகளை வெளிப்படுத்தத் தவறியதே கிடையாது.
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் வலியுறுத்தி வந்த வகுப்புரிமையைக் காங்கிரசில் இருந்துகொண்டே ஆதரித்து முழக்கமிட்டு வந்தார்.
1922ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற 25 ஆவது தமிழ் மாகாணக் காங்கிரஸ் மாநாட்டிலேயே இராமாயணத்தையும், மனுதர்ம சாத்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்றார். காங்கிரசின் அன்றைய நிலை மக்கள் சமுதாயத்தின் போக்கு அந்தக் கால கட்டத்தில் எந்தத் திசையில், இருந்திருக்கும் என்பதை எண்ணினால், தந்தை பெரியாரின் அந்தக் கர்ச்சனை எவ்வளவு பெரிய புரட்சியானதாக இருந்திருக்க முடியும்?
சேரன்மாதேவியில் குருகுலம்
வைக்கம் போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி, அதனை வெற்றி முகட்டுக்குக் கொண்டு சென்றதேகூட – தந்தை பெரியார் காங்கிரசில் இருந்த கால கட்டத்தில் தான்! அதுபோலவே சேரன்மாதேவியில் குருகுலம் என்ற பெயரால் வருணாசிரமக் கொடியேற்றப்பட்டபோது, போர்க்கொடி தூக்கி, அதற்கொரு முடிவை ஏற்படுத்தியதும் காங்கிரசில் இருந்தபோதுதான்! சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவிப்பதற்கு முன்னரேயே தந்தை பெரியார் அவர்களை அந்தக் கொள்கைகள் ஆட்கொண்டிருந்தன என்பதற்கு இவை எடுத்துக் காட்டுகளாகும்.
காங்கிரசுக்கு அவரை இழுத்தது கூட வெறும் அரசியல் கொள்கையல்ல; தீண்டாமை ஒழிப்புப் போன்ற காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களே!
காங்கிரசை விட்டு அவர் வெளியேற நேர்ந்ததும் சமூக நீதிக் கொள்கைக்காகத்தான். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவராக, செயலாளராக தன் மனைவி நாகம்மையார் உட்பட அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்த அந்தக் கால கட்டத்தில், வைக்கம் வீரர் என்று வரலாறு மகுடம் சூட்டி உச்சி மோந்த அந்தத் தருணத்தில், செல்வாக்கு, புகழ் என்பவை உச்சக் கட்டமாக இருந்த நேரத்தில், தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார் என்றால், கொள்கைக்கு முன் அவை எல்லாம் குப்புறத் தள்ளப்பட வேண்டியவை என்கிற இலட்சிய நோக்குத்தான்! மனித சுபாவத்தில் சாதாரணமாக இதனை எவரிடமும் எதிர்பார்க்கவே முடியாது! அதனால்தான் உலகிலேயே யாருக்கும் கிடைக்காத பெரியார் என்ற பட்டம் அவர்களுக்குக் கிடைத்தது என்றே நினைக்கத் தோன்றுகிறது!
‘குடிஅரசு’ என்ற இதழை – போர் வாளை தந்தை பெரியார் துவக்கியதே கூட காங்கிரசில் இருந்தபோதுதான் (02.05.1925) அது செய்த மகத்தான புரட்சியை மண்ணும், மலையும் உள்ளவரை மக்கள் சமுத்திரம் மறந்துவிடாது.
‘குடிஅரசு’ இதழ் மக்களிடையே ஏற்படுத்திய புரட்சி மகத்தானது. தந்தை பெரியார் கையில் சுழன்ற பேராயுதமாக அது மின்னியது!
ஜாதி, மதம், கடவுள், சாத்திரம், புராணம், இதிகாசம் மூடநம்பிக்கைகள், பெண்ணடிமை இவற்றைச் சக்கைச் சக்கையாகக் கழித்தது.
சிந்தனையாளர் ம.சிங்காரவேலர், சுவாமி கைவல்யம், சந்திரசேகரப் பாவலர் என்ற படை வரிசை இருந்தது. அவர்களின் எழுத்தாணிகள் எதிரிகளின் குடலைக் கிழித்து மாலையாகப் போட்டன!
மலேசிய மண்ணிலும் கால் பதித்தது
தந்தை பெரியாரின் அந்தக் கைவாள் மலேசிய மண்ணிலும் கால் பதித்தது. அது சென்ற இடங்களில் எல்லாம் விவாதப் புயலைத் தட்டி எழுப்பியது! தேநீர்க் கடைகளிலும், முடிதிருத்தும் நிலையங்களிலும், திருமண வீடுகளிலும், கருமாதித் துறைகளிலும் கூட விவாதத் தலைப்பின் மய்யப் புள்ளியாக ‘குடிஅரசு’ தான் நிமிர்ந்திருந்தது.
– தொடரும்