திருவெறும்பூர், ஜன. 6- திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் மாதந்தோறும் “பெரியார் பேசுகிறார்” நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்களே, ஒவ்வொரு மாதமும் ஒரு தோழர் பேசுகிறார்கள். அதேபோல மகளிரும் தனித் தலைப்புகளில் சிறப்பாக உரையாற்றி வருகிறார்கள்.
மேலும் இயக்கக் குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்களும், மாணவர்களும் வரும் மாதங்களில் பேச இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாதமும் ஒரு தோழர் ஒருங்கிணைப்பார். ஆக ஒரே தோழர் பார்வையாளராக, உரை நிகழ்த்து பவராக, ஒருங்கிணைப்பாளராகச் சுழற்சி முறையில் வருவார்கள்.
ஆக எல்லோருக்கும் பங்களிப்பு இருக்கிறது, எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்கிற வகையில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதிதாக வரும் தோழர்கள் தங்களின் கொள்கை அறிமுகம், இயக்கத்தில் இணைந்த வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறார்கள்.
அந்த வகையில் இந்த மாத நான்காவது நிகழ்ச்சியில் “ஜெகதீஸ் இண்டஸ்ட்ரீஸ்” உரிமையாளர் போ.ஜெகதீஸ்வரன், “நான் ஏன் பெரியார் கொள்கையைக் கடைப்பிடிக்கிறேன்”, எனும் தலைப்பில் பேசினார். பெரியார் கொள்கை தனக்கு எப்போது அறிமுகம் ஏற்பட்டது, அதை நடைமுறையில் எப்படி செயல்படுத்தி வருகிறேன் என்று கூறினார். தனது பெரிய நிறுவனத்தில் ஆயுதபூஜை போன்ற எந்த மதச்சடங்குகளும் செய்வதில்லை என்றவர், அதற்காகப் பணியாளர்கள் வருத்தப்பட்டதையும் கூறினார்.
ஆயுதபூஜை போன்ற பண்டிகைகளுக்கு எவ்வளவு செலவாகிறது எனக் கணக்கிட்டு, அந்தத் தொகையில் பணியாளர்கள் குடும்பத்தின் அனைவ ரையும் கொடைக்கானல் அழைத்துச் சென்றாகக் கூறினார். மேலும் ஒரு ஆண்டு ஒவ்வொரு ஊழியர்கள் வீட்டிற்கே சென்று தங்க நாணயம் வழங்கியதாகவும் கூறினார். ஆக ஒவ்வொரு ஆண்டும் குடும்பங்களுக்குப் பயன்படும் வகையில் செலவிடுவதால், ஊழியர்களும் இப்போது இரட்டை மகிழ்ச்சியில் இருப்பதாகக் கூறினார். அவரது நிறுவனத்தில் இருந்து பணியாளர்கள் வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது
இதற்கிடையே மாதந்தோறும் 50 இருக்கைகளை வாடகைக்கு எடுத்த வந்த நிலையில், புதிய 50 நாற்காலிகளை நானே சொந்தமாக வாங்கித் தருகிறேன் எனக் கூறி, உடனடியாக வாங்கியும் கொடுத்துவிட்டார்
அவரைப் பாராட்டி திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநிலச் செயலாளர் மு.சேகர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
‘பெரியார் பேசுகிறார்’ நான்காவது நிகழ்ச்சிக்கு ம.ஆறுமுகம் தலைமை வகிக்க, க.புனிதா முன்னிலை ஏற்றார். காட்டூர் ம.சங்கிலிமுத்து வரவேற்புரை ஆற்றினார். இறுதியில் ரெ.காமராஜ் நன்றி கூற, நிகழ்ச்சிகளை ஆ.பாண்டிக்குமார் ஒருங்கிணைத்தார். ஒவ்வொரு மாதமும் மிகத் துல்லியமாக மாலை 6 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சி 7.30 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்நிகழ்வில் மு.சேகர், ம.ஆறுமுகம், வி.சி.வில்வம், ஆர்.குமரவேல், ம.சங் கிலிமுத்து, ரெ.காமராஜ், விடுதலை க.கிருட்டிணன், ச.கணேசன், அ.சிவா னந்தம், பஞ்சலிங்கம், ஆ.பாண்டிக்குமார், அசோக்குமார், மு.ஆண்டிராஜ், ஆறு.இராஜாராமன், சி.நிர்மலா, க.புனிதா, சு.சாந்தி, பி.சித்ரா, ஆ.தமிழ்க்கவி, கரு.புனிதவதி, ச.பாலகங்காதரன், அ.அன்புலதா, பு.வி.கியூபா, செ.வீரக் குமார், சி.ஆ.கயல், சி.ஆ.அபெகா, எம்.முகமது அனிபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.