விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல்
போபால், ஜன.4 மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா கோயில்-கமல் மவுலா மசூதி வளாகம் தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் இடையில் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள போஜ்சாலா கோயில்-கமல் மவுலா மசூதி 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது, சரஸ்வதி தேவியின் அவதாரமான வாக்தேவியின் கோயில் என்று இந்துக்கள் நம்புகின்றனர். அதேசமயம், முசுலிம்கள் அதை கமல் மவுலா மசூதி என்று அழைக் கின்றனர்.
நீதிமன்றம் உத்தரவு
மத்திய பிரதேச உயர் நீதிமன் றத்தில் இது தொடர்பாக தொடரப் பட்ட வழக்கு கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, போஜ்சாலா வளாகத்தில் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தி ஆறு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இந்திய தொல்லியல் ஆய்வு (ஏஎஸ்அய்) துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏஎஸ்அய் ஆய்வுக்கு அனுமதி வழங்கியது. இருப்பினும், ஆய்வின் அடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் ஆய்வின்போது எந்த அகழாய்வு பணிகளையும் மேற் கொள்ள கூடாது என ஏஎஸ்அய்-க்கு நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது.
விசாரணை
இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 2.1.2025 அன்று விசாரணக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களுடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல் பெறப்பட்டுள்ளது” என்றனர்.
இதையடுத்து, இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் பட்டியலிட பதிவுத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப் பித்தனர்.