கழகத் தலைவர் தலைமையில் நேற்று (3.1.2025) சென்னை தலைமையகத்தில் கழகத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர்கள், மாநில ஒருங்கி ணைப்பாளர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டு இயக்க வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆண்டு; தந்தை பெரியாரால் தோற்று விக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் மற்றும் ‘குடிஅரசு‘ இதழின் நூற்றாண்டாகும்.
வரலாற்றையே மாற்றியமைத்த
ஒரு சகாப்தம்
இந்த ஒரு நூற்றாண்டில் தந்தை பெரியாரும், அவர்களின் தலைமையிலான இயக்கமும் சாதித்தவை சாதாரணமானவையல்ல – வரலாற்றையே மாற்றிய மைத்த ஒரு சகாப்தம்!
50 விழுக்காடு கேட்டு தந்தை பெரியார் காங்கிரசில் போராடி, அது வெற்றி பெறாத நிலையில், காங்கிரசை விட்டு வெளியேறினார்.
இப்பொழுது 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைத் தமிழ்நாடு அனுபவிக்கிறது என்றால், அதற்குக் காரணம்; இந்த ஒரு நூற்றாண்டாக நமது இயக்கம் மேற்கொண்ட அரும்பாடாகும்!
மக்கள் மத்தியில் தந்தை பெரியாரும், நம் இயக்கமும் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி, ஆட்சி அதிகாரத்தில் வந்த கட்சிகளை சமூகநீதித் தளத்தில் நடைபோட வைத்த நமது அழுத்தம், அணுகுமுறைகள், போராட்டங்கள், சிறைவாசம் உள்பட நாம் கொடுத்த விலைகள் ஆணிவேராக, அடித்தளமாக இருந்து வந்துள்ளன!
ஒப்பாரும் மிக்காரும் இல்லா
முழு புரட்சியாளர்!
நூறாண்டுமுன் வைக்கம் சென்று தீண்டாமையை ஒழிக்கும் போருக்குத் தலைமை தாங்கி, வெற்றி கொண்டார் நமது ஒப்பாரும் மிக்காரும் இல்லா முழு புரட்சியாளர் தந்தை பெரியார்.
அதன் நூற்றாண்டு விழாவின் மாட்சியைக் கொண்டாடும் வகையில் ‘திராவிட மாடல் அரசான‘ தமிழ்நாடு அரசும், பொதுவுடைமைக் கட்சி ஆட்சி செய்யும் கேரளாவும் இணைந்து வைக்கத்தில் எடுத்த விழாவும், நினைவுச் சின்னங்களும் காலத்தால் அழிக்கப்படவே முடியாதவை!
அதேநேரத்தில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும், சந்திக்க வேண்டியிருக்கும் சவால்களையும் புறந்தள்ள முடியாது.
மதவாத ஒன்றிய அரசு, சமூகநீதியின் வேரில் திரா வகத்தைப் பாய்ச்சும் போக்கு, அதற்குக் கையாளப்படும் முகமூடியணிந்த தந்திர உபாயங்கள் எல்லாம் நமக்குச் சவால்கள் என்பதில் அய்யமில்லை.
மதவாத சக்தியின் ஆட்சி ஒன்றியத்தில் இருப்பதால், ஆரியக் கொடியை ஏற்றி மனுதர்மத்திற்கு மகுடம் சூட்டும் அபாயம் மற்றொரு பக்கம்!
மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் மகத்தான கடமை நமக்கு அதிகம்!
அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூகநீதி சக்திகளை, மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் மகத்தான கடமை சமூகப் புரட்சி இயக்கமான நமக்கு மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
மற்றொரு பக்கம் ‘‘மக்களை எப்போதும் சந்தித்துக் கொண்டேயிருங்கள்!’’ என்ற நம் அய்யாவின் ஆணை ஒவ்வொரு நொடியும் நம் நடையை வேகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
புதிய ரத்த ஓட்டம் தேவைப்படும் காலம்!
அதற்கான திட்டங்களும், அணுகுமுறைகளும் வகுக்கப்படவேண்டும். இயக்கத்திலும் புதிய ரத்த ஓட்டம் தேவைப்படும் காலம்!
இயக்கத்திற்கு அடுத்த தலைமுறையினரை ஆற்றுப்படுத்தவேண்டிய அவசியமும் இருக்கிறது!
எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, மனதிற்கொண்டு புதிய அறிவிப்புகளை நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கைமூலம் நாளை (5.1.2025) வெளிப்படுத்த இருக்கிறார்.
அனுபவத் தழும்பேறிய பொறுப்பாளர்கள் புதிய பொறுப்பாளர்களை, இளைய தலைமுறையினர், மகளிர் உள்பட அனைத்து கொள்கை உறவுகளையும் ஊக்கப்படுத்தி, வழிநடத்தி இயக்கத்தின் வீச்சை வேகப்படுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.1.2025