அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் திறமைமிக்க நபர்களைத் தேர்ந்தெடுக்கும் துறை என்ற ஒன்றை உருவாக்கி அதன் தலைமைப்பதவியில் ஏலான் மாஸ்க், இந்திய வம்சாவளி பார்ப்பனத் தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகிய இருவரையும் அமர வைத்துள்ளார்.
பிரச்சினை இங்கிருந்துதான் தொடங்கியது. பார்ப்பனர்கள் எங்கு சென்றாலும் எக்காலத்திலும் தங்களின் சுய ரூபத்தை மாற்றமாட்டர்கள் என்பதற்கு விவேக் ராமசாமி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு நடுவே டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்கும் ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருந்த போது முக்கிய நபராக இருக்கும் விவேக் ராமசாமி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்கர்களை மிகவும் மோசமாக சித்தரித்தார்.
அவரது பதிவின் தமிழாக்கம்
தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்கர்களை விட அதிகமாக வெளிநாட்டில் பிறந்த முதல் தலைமுறை பொறியாளர்களை (இந்தியப் பார்ப்பனர்களை) வேலைக்கு எடுப்பதற்கான காரணம், அமெரிக்கர்களின் சோம்பேறித்தனம், அவர்களது (நாற்றம் பிடித்த) கலாச்சாரம் ஆகியவையே! நிலைமைகளை நாம் உண்மையாகச் சரிசெய்ய விரும்பினால், உண்மையை எதிர்கொள்ள வேண்டும்; அமெரிக்க கலாச்சாரம் மூளைக்கு எளிய வேலை கொடுப்பதை விட கடினமான முடிவுகளைத் தேடுகிறது. இது கல்லூரியில் தொடங்கவில்லை – சிறு வயதிலேயே தொடங்குகிறது. குழந்தைகள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதிர்காலத்தை சிறப்பாக்கும் விதமாக இல்லை. தொழில்நுட்பத் திறனுக்கான மிகுந்த போட்டியுள்ள உலகச் சந்தையில் அமெரிக்கர்கள் தற்போதையை நிலையில், வெற்றி பெறமுடியாது. அதை வெற்றி பெறுவதாக நாம் நம்பினால், சீனாவால் நம்மைத் தோற்கடிக்க முடியும் என்று விரிவாக கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக மேலை நாடுகளில்
குடியேற கட்டணங்கள்
அதாவது தொலைக்காட்சிகளில் இந்தியாவில் காண்பிப்பதுபோல் சோட்டா பீம், லிட்டில் கிருஷ்ணா, பால ஹனுமான், பால கணபதி போன்ற கார்ட்டூன் தொடர்கள் மட்டுமே குழந்தைகளை மேம்படுத்தும் என்று மறைமுகமாகப் பேசியிருக்கிறார்.
அமெரிக்கர்கள் சோம்பேறிகள், முட்டாள்கள் என்று நேரடியாகப் பேசிய அவர் மறைமுகமாக அவர்களது உணவுக் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களைத் தாக்கி உள்ளார். எப்படி இங்கே சாமானியர்களின் இறைச்சி உணவையும், அவர்களின் நடை உடைபாவனைகளையும், மொழியையும் பார்ப்பனர்கள் கேலி செய்கின்றனரோ அதையே தான் பாலக்காட்டு பார்ப்பனத் தம்பதிகளின் மகனான விவேக் ராமசாமியும் அங்கே பேசியுள்ளார்.
ஏற்கெனவே அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட விடுமுறையில் நாடு முழுவதும் உற்சாகமாக இருக்கும் அமெரிக்கர்களை இவரின் இந்த பேச்சு கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுவிட்டது.
சாலைத் தடுப்பு சிவலிங்கமாம் – பரிதாபம்
(லாஸ் ஏஞ்செல்ஸ்)
விளைவு இந்தியர்கள் மீதான வெறுப்பு அமெரிக்க இளைஞர்களிடையே திடீரென உயர்ந்துள்ளது.
சமூக வலைதளங்களில் வெறுப்புப் பேச்சு தொடர்பான பதிவுகளைக் கணக்கிடும் ஆய்வு நிறுவனம் தந்த அதிர்ச்சித் தகவலில் இந்தியர்கள் அதிகம் வெறுப்புக்குள்ளாகும் நபர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துவிட்டனர். பொதுவாக அரசியல்வாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட அமெரிக்க இளைஞர்கள் கம்யூனிச நாடுகள் மீதுதான் அடிக்கடி அதிக வெறுப்பைக் கொட்டி வருவார்கள். ஆனால், இம்முறை இந்தியர்கள் மீதான கோபமாக அது திரும்பி உள்ளது.
இந்த கோபத்திற்கு விதைபோட்டவர் விவேக் ராமசாமி தான். அவர்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
சமூக ஊடகங்களில் இந்தியர்களைக் கேலி செய்து பதிவிடுகிறார்கள். அதில் இந்தியர்களைப் பின்தங்கிய, சுகாதாரமற்ற, நாற்றம் பிடித்த வாழ்க்கையை வாழ்பவர்கள் என்றும், இணையவழியில் மோசடி செய்பவர்கள் என்றும் பேசி வருகின்றனர்.
குறிப்பாக இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் ‘சார்’ என்ற சொல் ஏற்கெனவே அய்ரோப்பிய நாடுகளில் பெரும் கேலிக்கான ஒன்றாக மாறியுள்ளது. மேலை நாடுகளிலும் மத்திய கீழை நாடுகளிலும் யாரையுமே பெயர் கூறியே அழைப்பார்கள். அதை ஒரு தவறாகவே எதிர் தரப்பார் பார்க்க மாட்டார்கள்.
ஆனால், இங்கே ஒருவரை ‘சார்’ என்று அழைக்காவிட்டால் அது தவறாகிப் போய்விடுமோ என்ற தாழ்வு மனப்பான்மையில் அவர்களின் ஒவ்வொரு வாக்கியத்துடனும் ‘சார்’ என்ற வார்த்தையைச் சேர்க்கின்றனர்.
குறிப்பாக அண்மைக் காலமாக மேலை நாடுகளிலும் வளைகுடா நாடுகளிலும் ஹிந்துத்துவச் சிந்தனை கொண்ட சில சங்கிகள் சூழ்நிலை தெரியாமலும் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமலும் மதவாத இனவாத பதிவுகளை இடுவதால் அவர்களோடு இதர இந்தியர்களும் சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர்.
வளைகுடா நாடுகளில் 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை சுமார் 4000த்திற்கும் மேற்பட்டோர் மதவாத சமூக வலைதளப் பதிவுகளைப் போட்ட காரணத்தால் நிரந்தரமாக இந்தியா திரும்பி உள்ளனர். அதாவது கட்டாயமாக வெளியே தள்ளிவிடப்பட்டுள்ளனர்.
இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த அமெரிக்க இணையரைச் சீண்டும் வடஇந்தியர்கள்
குறிப்பாக அமெரிக்காவின் அரசியலில் தலையிடத் தொடங்கி உள்ளதால் ஒருவித வெறுப்பிற்கு இந்தியர்கள் ஆளாகி உள்ளனர். இங்கே ஒரு மாநில அரசியலில் வேறு மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் நுழையும் போது மாநிலங்களுக்கிடையே மோதல் ஏற்படுகிறது.
அதே நேரத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் வெளிநபர்கள் என்று கூறப்படும் குடியேறிகள் அரசியலில் தலையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை.
சட்டவிரோத குடியேறிகள்
2016 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதக் குடியேற்றம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலிருந்து அதிகமானோர் செல்கின்றனர். அடுத்து அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்தும் செல்கின்றனர்.
இதனால் சட்டவிரோதப் புலம்பெயர்தல் எல்லை மீறிச் சென்றுவிட்டது. இது தொடர்பாக சமீபத்தில் சாருக்கான் நடித்து ‘டுங்கி’ என்ற திரைப்படமே வந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ‘டுங்கி’ எனப்படும் சட்டவிரோத குடியேற்றம் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் நுழைய முயற்சிக்கின்றனர். இதில் அங்கு சென்ற பிறகு சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக வட இந்தியர்கள் சிலர் மோசமான பழக்கங்களையும் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். சுகாதாரத்தைப் பேணாமல் இருந்தல், குப்பைகளைக் கண்ட இடத்தில் வீசுதல், குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளைப் போட்டு எங்கும் துப்புதல், பொது இடங்களில் மோசமாகப் பேசுதல், பிறருக்கு ஏற்படும் இடையூறுகளைக் கருத்தில் கொள்ளாது சத்தமாக பாடல்களைக் கேட்பது, அதிகாலையில் சங்கு ஊதுவது, தீட்டுக்கழிப்புப் பொருட்களை வீதிகளில் வீசுதல் போன்றவற்றைச் செய்கின்றனர்.
மேலே உள்ள அனைத்துமே வட மாநில இந்தியரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. உ.பி., பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதையாவது கூறினால், யாரும் சட்டை செய்யமாட்டார்கள். நீங்கள் எங்காவது துப்பலாம், எங்காவது குப்பையை வீசலாம், யாரையாவது துன்புறுத்தலாம்,சாலை ஓரத்தில் அல்லது நெடுஞ்சாலையின் மத்தியில் அமர்ந்துகொண்டு மது அருந்தலாம் – விழாக்காலம் என்ற பெயரில் பல மடங்கு திறன் கொண்ட ஒலி பெருக்கிகளை இசைக்க வைக்கலாம் – இங்கே எல்லாம் யாருமே கேட்கமாட்டார்கள்.
முன்பு எல்லாம் மேலை நாடுகளில் தீபாவளி உள்ளிட்ட விழாக்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டன. ஆனால், அண்மை ஆண்டுகளில் தீபாவளி அன்று இரவு முழுவதும் பட்டாசு வெடிக்கிறார்கள் அல்லது இரவு முழுவதும் பாடல்களை இசைத்து நடனமாடுகிறார்கள். பொது இடங்களில் கூட இவ்வாறு செய்கிறார்கள், இது மற்றவர்களுக்கு சிரமமாக இருக்கிறது.
தமிழர்களைப் போன்றோ இதர தென் இந்தியர்களைப் போன்றோ கல்விகற்று தொழில் திறன் பெற்று அங்கு சென்றால் அவர்களுக்கு உழைப்பின் முக்கியத்துவம் புரியும். ஆனால், கள்ளத்தனமாக சென்றவர்களுக்கு?
சட்டவிரோதமாக அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு, படிக்காதவர்கள் பலர் சென்று கொண்டு இருக்கின்றனர்.
இந்த மக்களிடம் நாகரீக உணர்வு அதிகமாக இல்லை, இதனால் அவர்கள் பெரும்பாலும் தவறுகள் செய்கிறார்கள், இதனால் இந்திய சமூகம் பற்றிய பார்வையை முழுமையாக சீர்குலைக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.
குஜராத், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்து பலர் தங்கள் நிலங்களை விற்று அங்கே சென்று கொண்டிருக்கின்றனர். மேலை நாடுகளில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.
அமெரிக்காவில் மீதமுள்ள உணவுகளை பசியோடு இருப்பவர்களுக்காக தனியாக எடுத்து வைத்திருப்பார்கள். அதற்கு என்று உணவு வங்கி உள்ளது.
முதியவர்களுக்கும் சிரமப்படும் மாற்றுத் திறனாளிகளுக்குமான இந்த உணவு வங்கிகளுக்குள் நுழைந்து இந்தியர்கள் மொத்தமாக அள்ளிச்செல்லும் அசிங்கம் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த நற்பெயரும் கெடுகிறது.
இந்தியாவில் இருந்து வரும் மோசடி அலைபேசி அழைப்புகளும் உலகளாவிய அளவில் இந்தியாவின் நன்மதிப்பை குலைத்து விடுகின்றன. மோசடி அழைப்புகளில் 95 விழுக்காடு இந்தியாவில் இருந்து தான் செல்கிறது. இவ்வகையான போலி அழைப்பு மய்யங்கள் டில்லி காசியாபாத், நொய்டா, மும்பை, அகமதாபாத் போன்ற நகரங்களில் இருந்து செயல்படுகின்றன. ஒன்றிய அரசு இவற்றைத் தடுப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
இவ்வகையான மோசடி அழைப்பு மய்யங்கள் மேற்கத்திய நாடுகளின் முதியவர்களை இலக்காகக் கொண்டுள்ளன. அவர்களுக்கு தொழில்நுட்பம் குறைந்த அளவிலேயே தெரியும். இதனால் அவர்களை ஏமாற்றுகின்றனர். மூத்த குடிகளின் வாழ்நாள் உழைப்பை ஓர் அலைபேசி அழைப்பிலேயே எடுத்துக்கொள்ளும் மோசடியாளர்களால் ஒட்டுமொத்த இந்தியர்களையும் மேலை நாட்டவர்கள் மோசமானவர்களாக சித்தரிக்கின்றனர்.
அதே போல் உணவு விவகாரத்திலும் மோசமான நடத்தை கொண்டவர்களாக உள்ளனர். அமெரிக்காவிலும், இந்திய வகை உணவு என்ற பெயரில் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி உணவு தயாரித்து விற்கின்றனர். பல அமெரிக்கர்கள் இந்த மோசடிகள் குறித்து தெரியாமல் இந்திய உணவு என்று வாங்கி சாப்பிட்டுவிட்டு உடல் நலம்கெட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்த நிகழ்வுகள் அதிகம் உள்ளன.
சமூகவலைதளம் ஒன்றில் சியாட்டல் பகுதியைச் சேர்ந்த அமெரிக்கர் ஒருவர் – மேற்குவங்க உணவான கச்சோரி எனப்படும் சிற்றுண்டி வகையை உண்டுவிட்டு அது நஞ்சாக மாறியதால் மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டு பெரும் அவதிப்பட்டதை அனுபவமாக எழுதி உள்ளார்.
அந்தக் கச்சோரி தரமற்ற தண்ணீர் கலந்தும் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட கலப்பட மசாலா பொருளாலும் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் தொடர்ந்து வாந்தி எடுத்துக்கொண்டு கண்கள் சிவப்பேறி அவதிப்படுவதைப் பார்க்கும் பிற அமெரிக்கர்கள் அங்குள்ள இந்தியர்கள் குறித்து என்ன நினைப்பார்கள்?
இங்கு எந்த அளவு நதிகளை நாசப்படுத்துகிறார்களோ அதே போல் அமெரிக்காவிலும் நாசமாக்க கிளம்பி விட்டார்கள்.
குறிப்பாக லாஸ்ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் போக்குவரத்துத் தடைக்கான கல்தூணின் சிதிலமடைந்த பாகத்தினை அகற்றி பூங்கா ஒன்றில் வைத்துள்ளனர். ஆனால் இந்தியர்கள் அந்தத் தூணை சிவலிங்கம் என்று நினைத்து பூஜை செய்யத் துவங்கி விட்டனர்.
அதற்கு ஊதுபத்தி ஏற்றி கற்பூரம், பூக்கள், பழங்கள் என வைத்து பூஜை செய்கின்றனர். ஊதுபத்தி அதிகம் பற்றவைக்கும் போது அந்தப் பூங்காவின் சூழலே மோசமாக மாறிவிட்டது. மேலும் பழங்கள், பூக்கள் போன்றவற்றை அப்படியே விட்டுச்செல்வதால் ஏற்படும் மாசு காரணமாக பூங்கா இதர நபர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டது. குளிர்காலத்தில் கூட நதிகளில் பூஜை செய்துவிட்டுப் பூஜைப்பொருட்களை அப்படியே விட்டுச்செல்கின்றனர்.
இது அமெரிக்கர்களுக்கு அருவெறுப்பான ஒன்றாக மாறிவிடுகிறது. குறிப்பாக நதிக்கரை ஓரத்தில் நடந்து செல்லும் போது கரை ஒதுங்கும் அழுகிய பூஜைப் பொருட்களால் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் உடல் நிலை குன்றும் அளவிற்குச் சென்றுவிடுகிறது.
சமூக வலைதளங்களில் குறிப்பாக வட இந்தியர்கள் செய்யும் அசிங்க அவலங்கள் உடனுக்கு உடன் பதிவேற்றப்படுவதால் ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே அவப்பெயர் ஏற்படுகிறது.
வடஇந்தியாவில் ஜாதியக் கொடுமையும் அதிகம் உள்ளது. குறிப்பாக உயர்ஜாதி நபர்கள் கீழ் ஜாதியினரின் பெயரில் கூட நல்ல சொற்கள் இருப்பதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்கள் குதிரையில் ஏறுவதையும், விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வைத்திருப்பதையும் எதிர்க்கின்றனர். பணம் உள்ள தாழ்த்தப்பட்டோரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சிலரும் வீடுகளைக் கட்டுவதைக்கூட எதிர்க்கின்றனர்.
இன்றும் கருப்பானவர்களை அவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், கல்வி கற்றாலும் அவர்களை ‘காலியா’ என்று சிறுவயது உயர்ஜாதியினர் கூட அழைப்பது வட இந்தியாவில் சகஜமான ஒன்றாக உள்ளது.
அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கமலேஷவர் தோதியார், ரத்லம் அரசு மருத்துவமனையை 10.12.2024 அன்று ஆய்வு செய்யச் சென்றார்.
அப்போது அங்கு தலைமை மருத்துவராக இருந்த உயர்ஜாதி மருத்துவர் இவர் வருவதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். மேலும் அந்த மருத்துவமனையில் உயர்ஜாதி இதர பணியாளர்கள் அவரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டனர். அவருக்கு உட்கார இருக்கை தராமல் அவர் கேட்ட பதிவேடு மற்றும் மருந்து இருப்பு தொடர்பானவற்றை தூக்கிப்போட்டு இழிவு படுத்தி உள்ளனர்.
அவர் உடனடியாக மருத்துவத்துறைச் செயலாளருக்கு புகார் செய்தார். ஆனால் இது தொடர்பாக அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மறியல் போராட்டத்தில் இறங்கிய எம்.எல்.ஏ.வை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
மேலும் அவர் ஆய்வு செய்த மருத்துவமனையில் ஊழியர்கள் இவர் மீது அரசு பணியாளர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் , பெண் ஊழியர்களை அவதூறான சொற்களால் இழிவுபடுத்தியதாகவும், மருத்துவமனைப் பொருட்களை சேதம் செய்ததாகவும் புகார் அளித்தனர். இதனை அடுத்துதான் காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினர் கமலேஷவர் தோதியார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் அய்யோ எங்களை இழிவு படுத்துகிறார்கள் என்று புலம்பும் சங்கிகள் இங்கே என்ன செய்கிறார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க மறுக்கின்றனர்.
நாம் நமக்கு நேரும் இனவெறியைப் பற்றி புகார் செய்கிறோம், இது தவறானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாமே நமது நாட்டின் மக்களிடம் எவ்வளவு இனவெறி, ஜாதிவெறியுடன் நடந்து காட்டுகிறோம்!
இன்றும், நாடு முழுவதும் தினமும் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்டோர் மீதான அடக்குமுறை சம்பவங்கள் பதிவாகின்றன.
சமூக ஊடகங்களின் மூலம் இந்தியாவில் நடைபெறும் ஜாதியப் பாகுபாடுகள் உலகம் முழுவதும் பரவுகின்றன. மேலும், நாமே இந்த நடைமுறைகளை மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துச் செல்கிறோம். ஆம், இந்தியாவிலிருந்து வெளியேறும்போது, ஸநாதன பார்ப்பனிய கலாச்சாரத்தையும் எடுத்துச் செல்கின்றனர்.
ஜாதி அடிப்படையிலான பாகுபாடு இதன் ஒரு முக்கியப் பகுதியாகும். அமெரிக்காவிலும் பார்ப்பனக் கூட்டங்கள் ஜாதிவெறியைக் காட்டுகின்றன. இது பெரிய பிரச்சினையாக வெடித்துள்ளது. அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், அங்கே வாழும் இந்திய தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 67 விழுக்காடு பேர் வேலை இடத்தில் ஜாதி அடிப்படையிலான தொல்லையை எதிர்கொண்டதாக ஒப்புக்கொண்டனர். மேலும், 27% பேர் உடல் மற்றும் சொற்களால் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்று புகார் செய்தனர்.
இதன் விளைவு, அமெரிக்காவில் 2023இல் முதலில் சியாட்டிலிலும் பின்னர் கலிபோர்னியாவிலும், பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தில் ஜாதியைச் சேர்த்துள்ளனர்.
மற்ற நாடுகளில், நாம் சிறுபான்மையாக இருக்கும்போது, நம்மை தவறாக நடத்தினால், நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இதைத் தடுக்க, எது செய்ய முடியும் என்று பார்த்துச் செய்ய வேண்டும். ஆனால், நாமே நமது சிறுபான்மை மக்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பதை யோசிக்கிறோமா?
இந்த நாட்டின் முதன்மையான மதச் சிறுபான்மையினர் இஸ்லாமியர்கள். இன்று அவர்களுக்கு எதிராக பொதுவெளியில் வெறுப்பைப் பரப்புவது நாகரிகமாக மாறிவிட்டது. சமூக ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுவெளி வெறுப்பு பரப்பப்படுகிறது.
நமது நாட்டின் பிரதமர் கூட தேர்தலில் இந்த வெறுப்பை ஊக்குவிக்கின்றார். 2024இல் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2023இல் மட்டும் முஸ்லிம்களுக்கு எதிரான 668 வெறுப்பு பேச்சுகள் பதிவாகியுள்ளன.
இந்த நிகழ்வுகளில் நேரடியாக 36 விழுக்காடு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் இறங்கி உள்ளனர். 25 விழுக்காடு முஸ்லிம்களின் வழிபாட்டு இடங்களை தாக்கி உள்ளனர்; 63 விழுக்காடு பேர் முஸ்லிம்களுக்கு எதிரான வதந்திகளைப் பரப்புகின்றனர். (லவ் ஜிஹாத், லேண்ட் ஜிஹாத், பாப்புலேஷன் ஜிஹாத் போன்றவை)அண்மையில் மகாராட்டிராவில் நடைபெற்ற தேர்தலின் போது மராட்டிய பார்ப்பன முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் “வோட் ஜிகாத்” என்று பேசியுள்ளார். ஹிந்துக் கலாச்சாரத்தை மதிக்காதவர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என்று இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள அகமத் நகரின் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.
முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்கக் கூடாது என்று ஒலிபெருக்கி வைத்து வீதி வீதியாக நகராட்சித் தலைவர்கள் மிரட்டிக்கொண்டு சென்ற காட்சிகள் உத்தராகண்ட் மற்றும் டில்லியில் நடந்தேறி உள்ளன. உ.பி. அரசே இஸ்லாமியர்கள் தங்கள் கடையில் தங்கள் பெயரை எழுதி வைக்குமாறு கூறுகின்றது.
அண்மையில், உத்தரப்பிரதேசத்தின் முராதாபாத் நகரில் ஒரு முஸ்லிம் இணையர், மக்கள் எதிர்ப்பின் காரணமாகத் தாங்கள் வாங்கிய வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்குள்ள குடியிருப்பாளர்கள், மற்ற சமூகத்தின் நபர் எங்கள் அக்கம் பக்கத்தில் வாழ்வதை நாங்கள் சகிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகின்றனர் அல்லது அடிக்கப்படுகின்றனர். இஸ்லாமியச் சிறுவர்கள் ‘ஜெய் சிறீ ராம்’ என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சொல்லாவிட்டால் துன்புறுத்தப்படுகின்றனர் அல்லது அடிக்கப்படுகின்றனர்.
மேற்கத்திய நாடுகள் சிறுபான்மையின சமூகத்தினரைச் சிறப்பாக நடத்துகின்றனர். அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்குகின்றனர். இந்திய வம்சாவளியினர் அங்கு பெரிய நிறுவனங்களை நடத்துகின்றனர். மேலும் ஆட்சி அதிகாரத்திலும் உள்ளனர். இந்திய வம்சாவளி ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக இருந்தார்; இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் இப்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ளார்.
வடக்கே இன்றும் தமிழர்களை மதராஸி என்று கிண்டல் செய்கின்றனர். அமெரிக்காவில் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தமிழர் ஒருவர் இறைச்சி உணவைச் சாப்பிட்டுள்ளார். அருகில் இருந்த வடக்கு சங்கி ஒருவன், “நீ ஹிந்துவா – ஏன் புனித நாளில் இறைச்சி உணவைச் சாப்பிட்டு ஹிந்துமதத்திற்கு துரோகம் செய்கிறாய்?” என்று பேசியுள்ளான். இதை அவர் தனது சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டு “அசிங்கமான சிந்தனைகளை விமானத்தில் தூக்கிக்கொண்டு வந்த கும்பல்” என்று பதிவிட்டார். உடனேயே இந்தியாவில் உள்ள பல சங்கிக்கூட்டங்கள் மோசமான சொற்களால் அவரை வசைபாடவே அவர் சமூகவலைதளப் பக்கத்தில் இருந்தே விலகி விட்டார்.
இவ்வளவு மோசமான ஜாதி வெறி, இனவெறி, மதவெறி கொண்ட சங்கிக்கூட்டங்கள் அமெரிக்காவில் எதிர்ப்பைச் சந்தித்தால் உடனே “அய்யோ எங்களை சிறுமைப்படுத்துகிறார்களே” என்று முறையிடுகின்றனர்.
சிலர் மோடிக்கும் அமித்ஷாவிற்கும் புகார் அனுப்பும் கோமாளித்தனத்தையும் செய்து வருகின்றனர்.