ர. பிரகாசு
1957-நவம்பரில், அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்திற்காக, பெரியாரும் திராவிடர் கழகத் தொண்டர்கள் சுமார் நான்காயிரம் பேரும் சிறையில் இருந்தனர். பெரியாரின் பேச்சு குறித்து மறைமுகமாக விமர்சித்த பிரதமர் நேரு. பெரியாரைச் சிறையில் தள்ள வேண்டும் என்று 1957-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வந்தபோது கூறினார். டிசம்பர்
14-ஆம் தேதி பெரியாருக்கு 6 மாத காலம் சிறைத் தண்டனை வேறு ஒரு வழக்கில் உறுதி செய்யப்பட்டது. அந்த சமயத்தில் நாஞ்சில் மாவட்ட தி.மு.க. 2-ஆவது மாநாடு டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலை அடுத்த கிருஷ்ணன்கோவிலில் நடைபெற்றது.
மாவட்டக் கழக அலுவலகத்தில் இருந்து மாநாட்டுப் பந்தல் வரை 2 மைல் தொலைவுக்குப் பிரமாண்ட பேரணி நடை பெற்றது. மாநாட்டுப் பந்தலில் மாநாட்டுத் தலைவர் ஈ.வெ.கி.சம்பத் கொடியேற்றி வைத்தார். மீண்டும் மாலை 4 மணிக்கு இசைமுரசு ‘நாகூர் ஹனிபாவின் இன்னிசை நிகழ்ச்சியோடு மாநாடு கூடியது. டாக்டர் ஏ.அருணாசலம் மாநாட்டைத் திறந்துவைக்க, வரவேற்புக் குழுத்தலைவர் கி.மனோகரன் நாஞ்சில் மாவட்டக் கழகப் பணிகளையும், மாநாட்டின் முக்கியத் துவத்தையும் எடுத் துரைத்தார். மதுரை முத்து, பொன்னம்பலனார். நாஞ்சில் அன்பெழில், தோழியர் சத்தியவாணி முத்து, என்.வி.நடராசன் ஆகியோர் அடுத்தடுத்து உரையாற்றினர்.
பின்னர் மாநாட்டுத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு விடுதலையை வலியுறுத்தி முழங்கினார். தலைமையுரைக்குப் பிறகு சி.பி.சிற்றரசு, ப.உ.சண்முகம் ஆகியோர் உரையாற்றினர். இடையே பெருமழை குறுக்கிட்டது. மீண்டும் இரவு 10 மணிக்கு சுசீந்திரம் லலிதா குழுவினரின் நடன நிகழ்ச்சியும். தியாகராச பாகவதரின் இளவல் எம்.கே.கோவிந்தராச பாகவதர் குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. முதல் நாள் நிகழ்ச்சிகள் நள்ளிரவு 2.30 மணிக்கு முடிவுற்றன.
மறுநாள் மாநாட்டிற்கு வருவோருக்காக நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இரண்டாவது நாள் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், என்.வி. நடராசன், பஉசண்முகம், இளம்வழுதி, அன்னை சத்தியவாணி முத்து, காஞ்சி கல்யாணசுந்தரம், வி.பி.இராமன், இரா.செழியன், சி.பி.சிற்றரசு, தாமரைச் செல்வி, ஏ.கோவிந்த சாமி எனப் பெரும் படையினர் தனித்தனி தலைப்புகளில் உணர்ச்சிப் பிழம்பாய் உரையாற்றினர்.
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படியை உயர்த்த வேண்டும். தென்னாட்டு மக்கள் அரிசியைக் குறைத்துக்கொண்டு கோதுமை உணவுப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற ஒன்றிய அரசின் கருத்துக்கு கண்டனம், ‘நெய்யாற்றின் கரை’, ‘தேவிகுளம்’, ‘பீர்மேடு’, ‘செங்கோட்டை’யின் சில பகுதிகள் என தமிழர்கள் வாழும் பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும். ஹிந்தித் திணிப்பைக் கைவிடல் வேண்டும் என்பன உட்பட 15 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
அதில் 15-ஆவது தீர்மானம் ‘‘பெரியாரை விடுதலை செய்க’’ என்பதாகும். ‘பெரியாரையும், ஆயிரக்கணக்கான தோழர்களையும் தோழியர்களையும் சிறையில் வைத்திருக்கிறது இந்த சர்க்கார். பெரியாரை விடுதலை செய்து, ஜாதி ஒழிப்புக்கான வழிவகைகளைக் காண இந்த சர்க்கார் முன்வர வேண்டும். பெரியாரின் அறிவாற்றல், பொதுமக்களிடம் அவருக்குள்ள செல்வாக்கு ஆகியவற்றை யோசித்துப் பார்க்காமல் பேசிய நேருவை இம்மாநாடு கண்டிக்கிறது” என்பது அத்தீர்மானம். அண்ணாவே முன்மொழிந்தார். மறுநாள் நடைபெற்ற பொதுக்குழுவிலும் பெரியார் விடுதலை வற்புறுத்தப்பட்டது. பெரியாரிடமிருந்து இயக்கமாய் பிரிந்திருந்தாலும் இதயமாய் இணைந்தே இருந்தார் அண்ணா.
நன்றி: ’முரசொலி’ பாசறை 31.12.2024