இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பேராளர்கள் பங்கேற்பு!

Viduthalai
3 Min Read

திருச்சியில் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின்
13 ஆம் தேசிய மாநாட்டில் – தெலங்கானா மனவ விகாச வேதிகா அமைப்பின் சார்பில்
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு ‘‘தேசிய மனிதநேயர் விருது’’ வழங்கப்பட்டது!

திருச்சி, டிச.28 திருச்சியில் இன்று (28.12.2024) நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் முதல் நாளில், தெலங்கானா மனவ விகாச வேதிகா அமைப்பின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு தேசிய மனிதநேயர் விருது–2024 வழங்கப்பட்டது! மாநாட்டிற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பகுத்தறிவாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழக ஒருங்கிணைப்பில், திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் 13 ஆம் தேசிய மாநாட்டின் முதல் நாளான இன்று (28.12.2024) மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், கருத்தரங்கிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கவிஞர் கலி.பூங்குன்றன், நரேந்திர நாயக், டி.கே.எஸ்.இளங்கோவன், டாக்டர் சுடேஷ்கோதேராவ் ஆகியோரையும், அனைந்திந்திய FIRA உறுப்பினர்களையும், திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்களையும் வரவேற்றார்.

1000 பேருக்கு மேல் பங்கேற்பு
மாநாட்டின் நோக்கவுரையாற்றிய FIRA பொதுச்செய லாளர் டாக்டர் சுடேஷ்கோதேராவ், ‘‘இதுவரை இந்தியாவின் பல பகுதிகளில் தேசிய கருத்தரங்குகள் நடைபெற்று உள்ளன. ஆனால், இன்று நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு ஏறத்தாழ 1000 பேருக்கு மேல் பார்வையாளராக வந்துள்ளார்கள் என்று வியப்பு மேலிட உரையாற்றினார்.

மதச்சார்பற்ற இந்தியாவுக்காக போராட வேண்டும்
தலைமையுரையாற்றிய FIRA தலைவர் நரேந்திர நாயக், ‘‘இந்தியா மனிதாபிமானம், மதச்சார்பற்ற நிலை, ஜனநாயகம் ஆகியவற்றின் ஆதாரத்தில் இருந்த நிலையில், தற்போது மதத்தின் அடிப்படையிலான மூடநம்பிக்கைக் கொள்கைகளைக் கொண்டவர்களால் ஆட்சி செய்யப்படுகின்றது. நாம் மதச்சார்பற்ற இந்தியாவுக்காகப் போராட வேண்டும்’’ என்றார்.

பகுத்தறிவுச் சிந்தனை மிகவும் தேவை!
மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ‘‘6.9.1970 அன்று தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தைத் துவங்கி வைத்தார்கள். இந்தியாவில் ஆண்களின் சராசரி வயது 71, பெண்களின் சராசரி வயது தற்போது 74. இந்த வளர்ச்சிக்குக் காரணம் விஞ்ஞானத்தின் வளர்ச்சிதான். இந்தியாவில் படித்தவர்கள்தான் மூடநம்பிக்கையை அதிகம் வளர்க்கிறார்கள். பகுத்தறிவாளர்களாக இருப்பதால் என்ன நன்மை? பகுத்தறிவாளர்களுக்குக் காலத்தையும், நேரத்தையும் சேமிக்க முடிகிறது. ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி போன்றவற்றிற்காக ஓராண்டில் பல நாள்கள் வீணாகின்றன. மூடநம்பிக்கைக்காக 197 நாள்கள் வீணாகின்றன. ஆகவே, பகுத்தறிவுச் சிந்தனை மிகவும் தேவை’’ என்றார்.

மொழிப் பெயர்ப்பாளர்களுக்கு சிறப்பு!
மாநாட்டில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள மனவ விகாச வேதிகா அமைப்பினர், ‘‘தேசிய மனித நேயத்திற்கான விருதை (2024)’’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினர்.
பெரியார் சிந்தனைகளை மாநில மொழிகளில் மொழி பெயர்த்த மொழிப் பெயர்ப்பாளர்கள் சுப்ரியா தருண்லேகா பந்தோபத்யாயா (பெங்காலி) முனைவர் ஜஸ்வந்த்ராஜ் (பஞ்சாபி), தோழர். லால்சலாம் (மலையாளம்) தானேஸ்வர் சாகு (ஒடியா) ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் எம்.சண்முகம் உரையாற்றுகையில், ‘‘பெரியார் அவர்கள் பகுத்தறிவுச் சிந்தனைகளை பரப்பியதுபற்றியும், குலத்தொழிலை எதிர்த்துப் போராடியதுபற்றியும் குறிப்பிட்டு, தற்போது மீண்டும் ‘‘விஸ்வகர்மா யோஜனா திட்டம்’’ திணிக்கப்படுகிறது; இவற்றை எதிர்ப்பதுதான் பகுத்தறிவாளர்கள் கடமை’’ என்றார்.

இளையதலைமுறையினரை விஞ்ஞானப் பார்வையோடு வளர்க்க வேண்டும்!
மாநாட்டில் சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற தி.மு.க. மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், ‘‘இந்தியாவில் இருப்பதெல்லாம் மகாபாரதம், இராமாயணக் கதைகள்தான். பகவத் கீதையில் கிருஷ்ணன் – ‘‘நால்வகை வருணத்தை நான்தான் படைத்தேன்’’ என்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் Artical 25 நமக்கு மதச் சுதந்திரத்தை தருகின்றது. நாம் எந்தக் கடவுளையும் வணங்கலாம். வேண்டுமென்றால், நாம் நாத்திகவாதியாகவும் இருக்கலாம். அடுத்த தலைமுறையினரை விஞ்ஞானப் பார்வையோடு வளர்க்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.
மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பேராளர்கள் பங்கேற்பு
இம்மாநாட்டிற்கு கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், ஒடிசா, பெர்சி, உத்ரகாண்ட், குஜராத், உத்தரப்பிரதேசம், அரியானா, மேற்கு வங்காளம், ம.பி. மலேசியாவிலிருந்தும் மற்றும் இந்தியா முழுவதிலுமிருந்தும் ஏராளமான பேராளர்கள் வந்திருந்தனர்.
மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *