மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் நினைவு வரலாற்றில் என்றும் நிலைக்கும்! கழகத் தலைவர் இரங்கல்

Viduthalai
2 Min Read

ஆழ்ந்த பொருளாதார அனுபவசாலி!

எவரிடத்திலும் பண்போடு பழகக்கூடிய ஓர் அற்புதமான தலைவர்

பத்தாண்டு காலம் நல்லாட்சிப் புரிந்து, உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த கால கட்டத்தில் தனது ஆழ்ந்த பொருளாதார அறிவு நுட்பத்தால், இந்தியாவை நிமிர்த்திக் காட்டிய மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் நேற்றிரவு (26.12.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களை ஓர் ‘ஆக்சிடெண்டல் பிரைம்மினிஸ்டர்‘ என்று – எதிர்பாராமல் பிரதமர் ஆனவர் என்று ஒரு சிலர் சொன்னாலும்கூட, அவருடைய வாழ்க்கையில் அதில் சிறப்பான அளவிற்கு, ஒரு புதிய வரலாற்றைத் தனித்தன்மையுடன் உருவாக்கியவர்.
ஏனென்றால், நம் நாட்டில் இதுவரை வந்த பிரதமர்களிலேயே, தலைசிறந்த பொருளாதார நிபுணர், ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தவர் என்ற பெருமையை உடைய ஒருவர் – அவர் கடமையாற்றுகின்ற நேரத்தில், சற்றும் எதிர்பாராத வகையில், பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்.
அந்தப் பொறுப்பில் இருந்தபோது சிறப்பாக செயல்பட்டதற்கு அடையாளம், ஒருமுறை அல்ல, இரண்டாவது முறையும் அவர் பிரதமரானார்.
எவரையும் புண்படுத்தாத பண்பட்டப் பேச்சுகளாலும், தெளிவான, ஆழ்ந்த பொருளாதார அனுபவங்களாலும், நடைமுறைச் சித்தாந்தங்களோடு எவரிடத்திலும் பண்போடு பழகக்கூடிய ஓர் அற்புதமான தலைவர் அவர்!
அவருடைய மறைவு என்பது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் இழப்பல்ல; பொருளாதார உலகத்திற்கும் பெரிய இழப்பாகும்.
பண்பட்ட பொதுவாழ்க்கைக்கும், மாறுபட்ட கருத்துள்ளவர்களைக்கூட மதிக்கவேண்டும் என்ற ஒரு சிறந்த வழி முறைக்கும் அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

அவருடைய நினைவு வரலாற்றில் என்றும் நிலைக்கும்!
மன்மோகன்சிங் அவர்கள் கடமையாற்றக் கூடிய நேரத்தில், மற்றவர்களுடைய விருப்பு – வெறுப்புகளைப் பார்க்காமல், கடமை உணர்வுடன் தனக்குச் சரியென்று பட்டதை நேர்மையோடு செய்யக்கூடிய அந்த அறிவு நாணயத்தினுடைய எடுத்துக்காட்டாக அவர் இருந்திருக்கிறார்
கலைஞர் அவர்களோடு நட்புறவோடு அவர் இருந்து, பல நல்ல பணிகள் உருவா வதற்கு அடித்தளமாக இருந்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக அவர் என்ன செய்தார் என்பதற்கு, துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைக்காக, ‘‘ஆயிரம் கோடி ரூபாய் தருகிறேன், பணியை நிறுத்தி வைக்காதீர்கள்; உடனடியாக அந்தப் பணியைச் செய்யுங்கள்’’ என்று ஒரு தனித் தூதுவரை அனுப்பி, துறைமுகத்திலிருந்து அந்த சாலைப் பணிகளைத் தொடருவதற்காக அவர் செய்தவற்றை மறக்க முடியாது. மன்மோகன்சிங் அவர்கள் பிரதமர் என்ற முறையில் தமிழ்நாட்டின்மீது காட்டிய பரிவு என்பது மறக்க முடியாத உண்மையாகும்!
அவரது பிரிவு ஒரு கட்சிக்கானதல்ல – நாட்டுக்கே பேரிழப்பாகும். கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

27.12.2024 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *