பெங்களூரு, டிச.26 குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த ஜனவரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூரு அய்அய்எம் கல்வி நிறுவனத்துக்கு வந்தார். அப்போது அங்கு பணிபுரியும் தாழ்த்தப்பட்ட சமூகப் பேராசிரியர் கோபால் தாஸுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
புகார் கடிதம்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். அவரது புகாரை விசாரிக்குமாறு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து கருநாடக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கருநாடக சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மணிவண்ணனுக்கும் பேராசிரியர் கோபால் தாஸ் புகாரை அனுப்பினார்.
ஆதாரங்கள்
இதையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஜாதிய பாகுபாடு கடைப்பிடித்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின்பேரில் மைக்கோ லே அவுட் காவல்துறையினரை அய்அய்எம் பெங்களூரு கல்வி நிறுவன இயக்குநர் ரிஷிகேஷ் டி கிருஷ்ணன், பேராசிரியர்கள் ஜி.சைனேஷ், தினேஷ் குமார், ஸ்ரீனிவாஸ் பிரக்யா, சேத்தன் சுப்ரமணியன், ஆஷிஷ் மிஸ்ரா, சிறீலதா ஜொன்னலஹேடா, ராகுல் ஆகிய 8 பேர் மீதும் ஜாதி அடிப்படையிலான துன்புறுத்தல், பணியிட பாகுபாடு ஆகிய குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்தனர். தாழ்த்தப்பட்ட சமூகப் பேராசிரியரை ஜாதிப் பெயரை சொல்லி திட்டியது, மிரட்டியது, அச்சுறுத்தியது ஆகிய காரணங்களுக்காக 8 பேர் மீதும் பட்டியலின பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.