மும்பை,டிச.24- ஏக்நாத் ஷிண்டேவை ஓரம்கட்ட வேண்டும் என்று நினைத்ததை அரங்கேற்றும் வகையில், உள்துறையை எதிர் பார்த்த ஷிண்டேவுக்கு உப்பு சப்பில்லாத (‘டம்மி’) இலாகாவை பாஜக ஒதுக்கியுள்ளது. இதனை சிவசேனா மட்டுமின்றி எதிர்க் கட்சிகளும் விமர்சனம் செய்து உள்ளன.
கூட்டணி ஆட்சி
மகாராட்டிரா மாநிலத்தில் பாஜக – சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது. முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ், துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் ஆகியோர் கடந்த 5ஆம் தேதி பதவியேற்றனர். மீண்டும் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக அவருக்கு விட்டுக் கொடுக்கவில்லை.
தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி 39 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், தற்போது அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ் உள்துறையை (சட்டம் ஒழுங்கு) மீண்டும் (துணை முதலமைச்சராக இருந்த போதும் இதே துறையை கவனித்துக் கொண்டார்) கைவசப்படுத்திக்கொண்டார். மேலும், எரிசக்தி, சட்டம் மற்றும் நீதிமன்றம், பொது நிர்வாகம், தகவல் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளை அவரே நிர்வகிக்கவுள்ளார்.
டம்மி இலாகா
துணை முதலமைச்சர்களாக பதவியேற்ற அஜித் பவாருக்கு அவர் ஏற்கெனவே வகித்த நிதித்துறை மற்றும் திட்டம், மாநில கலால் துறையும், முதலமைச்சராக இருந்து துணை முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுக்கு நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் பொதுப்பணி துறை ஆகிய 3 அமைச்சகங்கள் ஒதுக்கப்பட்டன.
ஆனால், உள்துறை இலாகா தங்கள் வசம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக சிவசேனா (ஷிண்டே அணி) கூறி வந்த நிலையில், உப்பு சப்பில்லாத (‘டம்மி’) இலாகாவை ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒதுக்கியது கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஓயவில்லை
ஏற்கெனவே தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு பின்னர்தான் முதலமைச்சர் யார் என்பதை அறிவித்தனர். அப்போது பாஜகவுக்கும், ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே இழுபறி பேச்சுவார்த்தைகள் நடந்தன. டில்லி வரை சென்றும் பிரச்சினைகள் ஓயவில்லை.
நீண்ட இழுபறிக்கு பின்னர் ஏக்நாத் ஷிண்டேவை சரிகட்டினர். இருந்தாலும் உள்துறையை எதிர்பார்த்த ஷிண்டேவுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனை அவரது கட்சியினர் மட்டுமின்றி எதிர்கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.