புதுடில்லி, டிச.21 வாக்குப் பதிவு இயந்திரங்களை சரி பார்ப்பதற்கு கொள்கை வகுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமா்விலிருந்து வேறு நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றப்பட்டது.
மேனாள் அரியானா அமைச்சா் கரண் சிங் தலால், லகன்குமார் சிங்லா ஆகியோர் தாக்கல் செய்த அந்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக நேற்று (20.12.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுபோன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக் களை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மணீந்தா் சிங் கோரிக்கை விடுத்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்காத தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, ‘அடுத்த ஆண்டு ஜன.20-ஆம் தேதி முதல் தொடங்கும் வாரத்தில், இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி தீபாங்கா் தத்தா தலைமையிலான வேறு அமா்வு விசாரிக்கும்’ என்றார்.