புதுடில்லி, டிச.21 தேசிய மனித உரிமைகள் ஆணையத் (என்ஹெச்ஆா்சி) தலைவா் பதவிக்கான பரிசீலனையில் மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடின் பெயா் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அதை அவா் திட்டவட்டமாக மறுத்தார்.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், என்எச்ஆா்சி தலைவா் பதவி குறித்து வெளியான செய்திகளை மறுத்த அவா், ‘இது உண்மை செய்தியல்ல. தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன்’ என தெரிவித்தார். என்எச்ஆா்சியின் 8-ஆவது தலைவராக பதவி வகித்த மேனாள் நீதிபதி அருண் குமார் ஓய்வுபெற்ற பின் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தலைவா் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது என்ஹெச்ஆா்சி பொறுப்புத் தலைவராக விஜய பாரதி சயானி செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில், என்எச்ஆா்சியின் அடுத்த தலைவரை தோ்ந்தெடுப்பதற்காக பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலைக் குழுக் கூட்டம் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவுள்ள ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.
தேர்ந்தெடுக்கும் முறை
என்எச்ஆா்சி தலைவரை பிரதமா், ஒன்றிய உள்துறை அமைச்சா், மக்களவைத் தலைவா், மக்களவை எதிர்க்கட்சித் தலைவா், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவா், மாநிலங்களவை துணைத் தலைவா் ஆகிய 6 போ் அடங்கிய குழு தோ்ந்தெடுக்கும்.இந்தக் குழுவின் பரிந்துரையை ஏற்று என்எச்ஆா்சி தலை வரை குடியரசுத் தலைவா் நியமிப்பார்.