‘‘காயம் இல்லாமல் கவலைக்கிடமாம்; சாதாரண சிராய்ப்புக்கு தலைமுழுவதும் கட்டு’’
புதுடில்லி, டிச.21 அண்ணல் அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காப்பாற்ற பாஜக நிகழ்த்திய நாடகம் அம்பலமாகியுள்ளது.
தள்ளு முள்ளு!
அண்ணல் அம்பேத்கரை அவமதித்துப் பேசிய ஒன்றிய உள்துறை அமை ச்சர் அமித் ஷாவை கண்டித்தும், பதவி விலகக் கோரியும் கடந்த 19.12.2024 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் “இந்தியா” கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு போட்டிப் போராட்டம் நடத்திய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் “இந்தியா” கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். இந்த தள்ளுமுள்ளுவில் 82 வயதான காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன கார்கே மீது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்த முயன்றனர். மல்லிகார்ஜுன கார்கே, மகர் துவார் எனப்படும் நாடாளுமன்ற நுழைவாயிலின் படிக்கட்டில் கீழே விழுந்தார். மல்லிகார்ஜுன கார்கேவை பாதுகாக்கும் நோக்கத்தில் “இந்தியா” கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுவான பாதுகாப்பு அரண் அமைக்க, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தள்ளு முள்ளுவில் இருந்து பின்வாங்கினர். “இந்தியா” கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அரணை உடைக்க முடியாமல் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் அவருக்கு இடது கண்ணின் புருவத்திற்கு அருகே லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. மேலும் மற்றொரு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் முகேஷ் ராஜ்புத் திடீரென மயங்கி விழுந்தார்.
தலைமுழுவதும் கட்டு
அம்பேத்கரை அவமதித்து பேசிய அமித் ஷாவை காப்பாற்றவும், இந்த விவகாரத்தை திசை திருப்பவும், பிரதாப் சாரங்கிக்கு கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு தலை முழுவதும் கட்டுப் போட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல காயம் இல்லாத முகேஷ் ராஜ்புத் கவலைக்கிடமாக இருப்பதாக மோடி அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் மோடி அரசின் கைப்பாவையான “கோடி மீடியா” ஊடகங்கள் பிரதாப் சாரங்கி, முகேஷ் ராஜ்புத் மருத்துவ சிகிச்சை செய்தியை நாட்டின் தலைப்புச் செய்தியாக ஒளிபரப்பி அமித் ஷாவை காப்பாற்றும் வேலையில் இறங்கின.
மோடி ஷூட்டிங்; நோயாளிகள் பாதிப்பு
பிரதாப் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத்தை சந்தித்து நலம் விசாரிப்பதாக பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிறப்பு ஷூட்டிங் நடத்தினர். இந்த ஷூட்டிங்கையும் “கோடி மீடியா” ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக ஒளிபரப்பின. பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்களின் அரசியல் ஆதாய ஷூட்டிங் காரணமாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். மருத்துவமனையில் இருந்து பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் சென்ற பின்பே, நோயாளிகள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர் என செய்திகள் வெளியாகின.
நாடகம் அம்பலம்!
பிரதாப் சாரங்கிக்கு இடது கண்ணின் கீழ் லேசாக சிராய்ப்பு ஏற்பட்டது. ஆனால், சிராய்ப்பு ஏற்பட்ட இடத்தில் டிங்சர் இல்லாமல் கட்டுப் போட்டு, காயம் ஏற்படாத தலையில் பெரிதாக கட்டு போடப்பட்டு இருந்தது. அதே போல, நிகழ்வு நடந்த 19.12.2024 அன்று மதியம் 2 மணிக்கு பிரதாப் சாரங்கிக்கு தலை முழுவதும் கட்டுப் போடப்பட்டு இருந்தது. ஆனால், அன்றிரவு ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பார்க்க வந்த பொழுது, கட்டு அகற்றப்பட்டு இருந்தது. இதுதொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதே போல காயம் ஏற்படாமல் கவலைக் கிடமாக இருப்பதாக சிகிச்சை பெற்று வந்த முகேஷ் ராஜ்புத் பேசும் காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியது. தனக்குப் பின்தலையில் அடிபட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக என்னால் பேச முடியவில்லை, எனது நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறும் “நகைச்சுவை காட்சிப் பதிவு” சமூக வலைதளங்ளில் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் அமித் ஷாவின் அம்பேத்கர் அவமதிப்பை மறைக்க பாஜக ஏற்பாடு செய்த நாடகத்தின் உண்மையான திரைக்கதை அம்பலமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.