புதுடில்லி, டிச.19- அயோத் தியில் மசூதி கட்டுவதற்கு வழங்கிய நிலத்தை திரும்பப் பெற வேண்டும் என உ.பி. முதலமைச்சருக்கு பாஜக மூத்த தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என கடந்த 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேநேரம், அயோத்தியில் வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதன்படி, உ.பி. அரசு அயோத்தியின் தன்னிபூரில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. அந்த இடத்தில் மசூதி கட்டும் பணியை மேற்கொள்வதற்காக இந்தோ-இசுலாமிக் கலாச்சார அறக்கட்டளையை சன்னி மத்திய வக்பு வாரியம் நிறுவியது.
திரும்பப் பெற நடிவடிக்கை
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ரஜ்னீஷ் சிங் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த இடத்தில் மசூதி கட்ட வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கம் அல்ல. மாறாக மசூதி என்ற போர்வையில் குழப்பத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
எனவே, மசூதி கட்ட வழங்கிய நிலத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.