மும்பை, டிச.18 மகாராட்டிர மாநிலம் பர்பானி நகரில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி ரயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசமைப்புச் சட்ட நகலை எரித்ததைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.
கைது
பகுஜன் அகாடி (VBA) கட்சியினர் உள்பட பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் டிசம்பர் 11 ஆம் தேதி இரவு கலவரத்தில் ஈடுபட்டு சொத்துகளை சேதப்படுத்தியதாக 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர் களில் 35 வயதான பகுஜன் அகாடி (VBA)அமைப்பின் செயல்பாட்டாளர் சோம்நாத் வெங்கட் சூர்யவன்ஷி என்பவரும் அடங்குவார். பர்பானி மாவட்ட மத்திய சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 15.12.2024 அன்று காலையில் அவர் காவல் துறையினரின் காவலில் உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக சூர்யவன்ஷி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது. ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் சூர்யவன்ஷியின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது உடல், உடற் கூராய்விற்காக சத்ரபதி சாம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சித்ரவதை
காட்சிப் பதிவுடன் நடத்தப்பட்ட அவரது உடற்கூராய்வில் சூர்யவன் ஷியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததும், அந்தக் காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் உயிர் பிரிந்துள்ளது என்றும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். எனவே, காவல்துறையினரின் காவலில் சித்திரவதை செய்யப்பட்டு அவர் உயிரிழந்தது உறுதியான நிலையில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளது.
நாடோடி இனமான வடார் இனத்தைச் சேர்ந்த சூர்யவன்ஷி, படிப்பு செலவுக்காக சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தார். இவரது சகோதரரும், தாயும் புனேவில் உள்ள சாக்கனில் கூலி வேலை செய்து வந்தனர்.
பகுஜன் அகாடி கட்சியுடன் இணைந்து உள்ளூர் செயல்பாட் டாளராக சூர்யவன்ஷி இருந்துள்ளார்.இந்நிலையில் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சூரியவனாஷியின் குடும்பத்தினர் முதலில் மாவட்டத் துக்குள் நுழைய விடாமல் காவல் துறையினரால் தடுக்கப்பட்டனர்.
பின்னர், அவரது உடலை பர்பானிக்கு கொண்டு வருவதற்குப் பதிலாக லத்தூரில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். ஆனால் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் காவல்துறை பின்வாங்கியுள்ளது.
பர்பானி மாவட்டத்தில் தாழ்த் தப்பட்ட பகுஜன் அம்பேத்கரிய இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் அளவை சூர்யவன்ஷியின் உயிரிழப்பு எடுத்துக்காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முற்றிலும் தோற்றுப் போயுள்ளார் என்று உத்தவ் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.