சூரத், டிச. 17- குஜராத் மாநிலம் சூரத்தில் ரூ.2.57 கோடி கள்ள நோட்டுகளுடன் நால்வா் கைது செய்யப்பட்டனா். இவா்களில் மூவா் மகாராட்டிர மாநிலம் அகல்யா நகரைச் சோ்ந்தவா்கள். ஒருவா் குஜராத்தைச் சோ்ந்தவா் என்பதுவிசாரணையில் தெரியவந்தது.
சூரத்தில் உள்ள சரோல் காவல் சோதனைச் சாவடியை கடக்க முயன்றபோது அந்த நால்வா் வைத்திருந்த பைகள் சந்தேகத்துக்கிடமாக இருந்தன. இதையடுத்து காவல் துறையினா் பைகளை சோதித்தனா். அப்போது, பைகளில் கட்டுக்கட்டாக ரூ.500 மற்றும் ரூ.200 கள்ள நோட்டுகள் இருந்தன. மொத்தம் ரூ.2.57 கோடி கள்ள நோட்டுகள் இருந்தன.
குஜராத்தில் தங்கியிருந்து அந்த நோட்டுகளை சிறிது சிறிதாக புழக்கத்தில் விட அவா்கள் முடிவு செய்துள்ளனா். இதற்காக மூன்று போ் மகாராட்டிரத்தில் இருந்து இங்கு வந்துள்ளனா். குஜராத்தின் சூரத்தைச் சோ்ந்த குல்சான் கோகலே அவா்களுக்கு உதவியுள்ளார். அவா்கள் மீது மோசடி, ஏமாற்றுதல், குற்றச் சதி, நாட்டுக்கு எதிரான தீவிர குற்றத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
அந்த நோட்டுகள் எங்கு அச்சிடப்பட்டன, வேறு கும்பல் ஏதும் கள்ள நோட்டுகளுடன் குஜராத்தில் ஊடுருவியுள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.