விருப்ப நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கிய சுவிட்சர்லாந்து! சிக்கலில் நிறுவனங்கள்

Viduthalai
2 Min Read

புதுடில்லி, டிச.16 விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை சுவிட்சர்லாந்து நீக்கியிருக்கிறது. இதனால் அங்கு வணிகம் மேற்கொண்டிருக்கும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரியை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றன.
2015ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து வெளிநாட்டு உறவு விடயத்தில் தொடர் பஞ்சாயத்துகள் வெடித்து வருகின்றன. குறிப்பாக கனடா நாட்டின் அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே போர் மட்டும்தான் இன்னும் வெடிக்கவில்லை. அந்த அளவுக்கு பிரச்சினைகள் இரு நாட்டுக்கு இடையில் போய்க் கொண் டிருக்கின்றன. போதாத குறைக்கு நட்பு நாடாக உள்ள அமெரிக்காவிடமும் இந்திய உளவு முகமைகள் சிக்கலை கூட்டி வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த பட்டியலில் தற்போது சுவிட்சர்லாந்து புதியதாக இணைந்திருக்கிறது. அதாவது அந்நாட்டின் மிகப்பெரிய வணிக நிறுவனமான நெஸ்லே இந்தியா வில் பெரிய அளவில் தனது பொருட் களை விற்று வருகிறது. இதில் குறிப் பிடத்தக்கதாக மேகி நூடுல்ஸ் இருக் கிறது. உணவுப் பொருளான இதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு ரசாயனம் கலந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரையடுத்து விசாரணை நடத்திய ஒன்றிய அமைப்புகள் கடந்த 2015ஆம் ஆண்டு மேகியை இந்தியாவில் தடை செய்தன.

அன்றைய காலத்தில் விற் பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 38,000 டன் மேகியை நெஸ்லே அழித்தது. ஒன்றிய அரசின் இந்த தடை உத்தரவுக்கு எதிராக நெஸ்லே உச்சநீதிமன்றத்தை நாடியது. விசாரணையில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே ரசாயனங்கள் கலக்கப்பட்டிருப்பதாகவும் எனவே இது பாதுகாப்பான உணவுதான் என்றும் வாதிட்டது. ஆனால், மேகியில் ஈயம் கலக்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு குற்றம்சாட்டியது.
இந்நிலையில்தான் கடந்த 2023ஆம் ஆண்டு ஒன்றிய அரசுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பு நெஸ்லே நிறுவனத்தை கடுமையாக பாதித்தது. எனவே தக்க சமயம் பார்த்து காத்திருந்த இந்நிறுவனம், தனது நாட்டின் அரசின் மூலம் இந்தியாவை பழி வாங்கியிருக்கிறது.

அதாவது சுவிட்சர்லாந்து இந்தியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது. இந்திய நிறுவனங்களும் அந்நாட்டில் வர்த்தகம் செய்து வருகின்றன. எனவே, இந்திய நிறுவனங்களை அந்நாடு விருப்ப பட்டியலில் வைத்திருந்தது. மற்ற நிறுவனங்கள் 10 விழுக்காடு வரியை செலுத்த வேண்டும் என்பது அந்நாட்டின் சட்டம். ஆனால் இந்தியா விருப்ப நாடுகள் பட்டியலில் இருப்பதால் 5 விழுக்காடு வரியை செலுத்தினால் போதுமானது என்று இருந்தது. இந்த விருப்ப பட்டியலிலிருந்துதான் தற்போது இந்தியாவை அந்நாடு நீக்கியிருக்கிறது.
இந்த உத்தரவு 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இனி வரும் நாட்களில் இந்திய நிறுவனங்கள் 10 விழுக்காடு வரியை செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *