புதுடில்லி, டிச.16 வழிபாட்டுத் தலங்கள் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 16-ஆம் நூற்றாண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் முகலாயா் ஆட்சி காலத்தில் ஷாஹி ஜாமா மசூதி கட்டப்பட்டது. ஹிந்துக் கோயிலை இடித்துவிட்டு அந்த மசூதி கட்டப் பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அவா்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் மாவட்ட நீதிமன்றம், அந்த மசூதியில் ஆய்வுக்கு உத்தரவிட்டது. 2-ஆம் கட்ட ஆய்வைத் தொடா்ந்து, அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உள்ளூா் வாசிகள் வன்முறையில் ஈடுபட்டனா்.
இதேபோல ராஜஸ்தானில் அஜ்மீா் தா்கா உள்ள இடத்திலும் முன்பு சிவன் கோயில் இருந்தது என்றும், இதுகுறித்து அங்கு ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அஜ்மீா் நீதிமன்றத்தில் ஹிந்து சேனை அமைப்பு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த நீதி மன்றம், மனு தொடா்பாக பதில ளிக்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம், இந்திய தொல்லி யல் துறை, அஜ்மீா் தா்கா குழு ஆகிய வற்றுக்கு தாக்கீது அனுப்பியது.
இந்த விவகாரங்கள் தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘சம்பல் மசூதி, அஜ்மீா் தா்கா விவகாரங்கள் கெட்ட வாய்ப்பானவை.
கடந்த 2022-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடா்பாக மேனாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வாய்மொழியாக தெரிவித்த கருத்துகள் பல சிக்கலான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.
1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எழுப்பும்’ என்றாா்.