புதுடில்லி, டிச.15– சுகாதார மய்யங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் விஷ முறிவு மற்றும் பாம்பு கடிக்கான சிகிச்சையை உறுதி செய்வது தொடா்பான மனு குறித்து பதிலளிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் (13.12.2024) உத்தரவிட்டது.
வழக்குரைஞா் ஷைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
உலக அளவில் பாம்புகடியால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையில் மிக அதிகமான விகிதத்தை இந்தியா கொண்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு சுமார் 58,000 போ் இந்தியாவில் பாம்புகடியால் உயிரிழக்கின்றனா்.
இவ்வளவு அதிக இறப்பு விகிதம் இருந்தபோதிலும், விஷ முறிவு மருந்து நாட்டில் பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. நாட்டின் பல கிராமப்புறங்களில் விஷமுறிவு மருந்துகள் போதுமான அளவு இருப்பு இல்லாததால், பாம்புகடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, அரசின் மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலையான மருத்துவ விதிமுறைகளின்படி சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவா்களுடன் பாம்புகடிக்கு சிகிச்சை மற்றும் பராமரிப்பு பிரிவுகளை நிறுவ வேண்டும். பாம்புகடி தடுப்பு சுகாதார மய்யம் அமைப்பது மற்றும் இது குறித்து விழிப்புணா்வு பிரச்சாரங்கள் நடத்துவது குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இறப்பு விகிதத்தை குறைக்க உதவும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் வி.விஸ்வநாதன் அமா்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பாம்புகடியால் பாதிக்கப்பட்டவா்களின் உயிரைக் காக்க சுகாதார மய்யங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் விஷ முறிவு மற்றும் பாம்புகடி சிகிச்சையை வழங்குவது குறித்து நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’ என ஒன்றிய அரசு, மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்டது.