புதுடில்லி, டிச. 14- ‘பெண்கள் உதவி எண்’ மூலம் 81.64 லட்சம் பெண்கள் பயனடைந் துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2015 ஏப்ரல் முதல் செயல்பட்டுவரும் பெண்கள் உதவி எண் திட்டத்தின் மூலம் அக்டோபர் மாத இறுதிவரை 81.64 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர்.
பெண்கள் உதவி எண்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய மிஷன் சக்தி என்ற திட்டத்தின் குடையின் கீழ் பெண்கள் உதவி எண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
181 என்ற உதவி எண் மூலம் 24 மணி நேரமும் வாரத்தின் அனைத்து நாள்களுக்கும் – ஆண்டு முழுவதும் பெண்களுக்கு தொலைத்தொடர்பு மூலம் உதவவும், வழிநடத்தவும் மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன.காவல் துறை, மருத்துவமனை, போன்ற அரசு சார்ந்த பொருத்தமான துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மூலம் உதவவும் வழிவகை செய்யப்படுகிறது.கூடுதலாக, பெண்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களும் இந்த உதவி எண் மூலம் வழங்கப்படுகிறது.
தற்போது 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்கள் உதவி எண் மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் இதுவரை 81.64 பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பெண்கள் உதவிஎண் மய்யம் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மிஷன் சக்தி திட்டத்தின் வழிகாட்டுதல்கள்படி, மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களுமே இத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். உதவி எண் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளையும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.