தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கேள்வி?
புதுடில்லி, டிச. 13- சைதாப்பேட்டை ரயில்நிலையம் மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக மக்களவையில் 11.12.2024 அன்று கேள்வி நேரத்தின்போது, அம்ரித் (AMRIT) திட்டத்தின் கீழ் மறுமேம்பாடுக்காக தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்கள் உள்பட 1,324 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. எனது தென்சென்னைத் தொகுதியில் உள்ள சைதாப்பேட்டை ரயில் நிலையத்தையும், சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தையும் இத்திட்டத்தில் மேம்படுத்த கோரிக்கை ஏற்கெனவே அளித்திருந்தேன். அதன் நிலவரத்தை அறிய விரும்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘ரயில்வே துறையை உருமாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 1,300 ரயில் நிலையங்கள் மறு சீரமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அம்ரித் பாரத் நிலையங்களில் ஒன்றாகும். அது நல்லமுறையில் உருவாக்கப்பட்டு வருகிறது. அங்கு இருமுறை நேரில் சென்றுள்ளேன். இந்தத் திட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் உற்சாகம், வடிவமைப்பு உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது. இது சென்னை நகரின் முக்கிய ஈர்ப்பு நிலையங்களில் ஒன்றாக இருக்கும். இதர நிலையங்களைப் பொறுத்தவரை, மக்களவை உறுப்பினர் என்னிடம் நேரில் சந்தித்து விரிவாக விவாதிக்கலாம்’ என்றார்.
எழும்பூர் பெயரை தமிழில் சரியாக உச்சரித்த அமைச்சர்
தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பும்போது அமைச்சருக்குப் புரிய வைக்கும் நோக்குடன் எழும்பூர் ரயில் நிலையத்தை ஆங்கிலத்தில் எக்மோர் என அழைத்தார். இதைத் தொடர்ந்து அஸ்வினி வைஷ்ணவ் பதிலளிக்க எழுந்த போது, ‘நான் சென்னை எக்மோர் என்பதை சென்னை எழும்பூர் என சரியாக உச்சரிக்க விரும்புகிறேன். ஆகவே, சென்னை எழும்பூர், அம்ரித் பாரத் ரயில் நிலையங்களில் ஒன்றாகும்’ என்றார். அமைச்சர் சரியாக பெயரை குறிப்பிட்டவுடன் தமிழில் எழும்பூர் பெயரை உச்சரித்தமைக்கு நன்றி எனக் கூறினார் தமிழச்சி தங்கபாண்டியன்.
அமைச்சரின் பதில் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், ‘சைதாப்பேட்டை ரயில் நிலையத்தை அம்ரித் நிலையத்தில் சேர்க்குமாறு ஏற்கெனவே அமைச்சரை கடந்த ஆகஸ்ட் மாதம் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தேன். இப்போது மீண்டும் பழைய பதிலையே அமைச்சர் குறிப்பிட்டு நேரில் சந்தித்து வலியுறுத்துமாறு மக்களவையில் தெரிவிக்கிறார்’ என்றார்.
என்எல்சி விவகாரம்
இதற்கிடையே, என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஊழியர்களின் துயர நிலைமை குறித்து அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதா? என்று தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மக்களவையில் 11.12.2024 அன்று நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்துள்ள எழுத்து பூர்வ பதிலில், என்எல்சி -இல் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பயன்கள் மற்றும் நல நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.