உயர்நீதிமன்ற நீதிபதியின் மதவாதப் ‘பெரும்பான்மை’ பேச்சு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Viduthalai
3 Min Read

புதுடில்லி, டிச. 13- விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவின் பேச்சு குறித்து நீதிமன்றக் குறிப்பு எடுத்துக்கொண்டு, அது குறித்து விளக்கம் அளிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகு றித்து வெளியிடப்பட் டுள்ள அந்தக் குறிப்பில், “அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவின் பேச்சு குறித்து நாளிதழ்களில் வந்த செய்திகளை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இருந்து இது குறித்த விபரங்கள் மற்றும் விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி என்ன?
பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் ஒரு பிரிவாக இருப்பது விஎச்பி. இதன் சட்டப்பிரிவு சார்பில் உ.பி.யின் அலகாபாத் உயர் நீதிமன்ற நூலக அரங்கில் ஒரு பயிலரங்கம் 8.12.2024 அன்று நடைபெற்றது. இப்பயிலரங்கில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், ‘பொது சிவில் சட்டம்: அரசமைப்பு சட்ட அவசியம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அப்போது நீதிபதி சேகர் யாதவ் பேசுகையில், “இது ஒரு இந்துஸ்தான் நாடு என்பதைக் கூற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இங்கு பெரும்பான்மையாக வாழ்பவர்களுக்கு ஏற்றவகையில் இந்நாடு செயல்படுகிறது. இதுதான் சட்டம். இதை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சொல்வதாக யாரும் கருதக் கூடாது. சட்டம் என்பது பெரும்பான்மையை பொறுத்தே அமையும். இதையே ஒரு சமூகம் அல்லது குடும்பத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதிலும் பெரும்பான்மையின் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதே ஏற்கப்படுகிறது” என்றார்.

அடுத்த நாள், சட்டம் என்பது பெரும்பான்மையைப் பொறுத்தே அமையும் என்பன உள்ளிட்ட நீதிபதியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்த காட்சிப் பதிவுகள் வேகமாக பரவின. நீதிபதியின் இந்தப் பேச்சு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், இதனை வெறுப்புப் பேச்சு என்று அழைத்தனர்.
நீதிபதியை பதவி நீக்க வேண்டும் – கபில் சிபல்
விஎச்பி நிகழ்வில் வெறுப்பு பேச்சு பேசிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தனது பதவிப் பிரமாணத்தை மீறியுள்ளார். அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு மற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தாக்கீது சமர்ப்பிப்பேன் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், “அப்படியொரு அறிக்கையை வெளியிடும் எந்த ஒரு நீதிபதியும் தான் எடுத்துக்கொண்ட பதவி பிரமாணத்தை மீறுகிறார். அப்படி மீறும் ஒருவர் தொடர்ந்து நீதிபதி நாற்காலியில் உட்காரும் தகுதியை இழக்கிறார். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரே இப்படி பேசும்போது இவரைப் போன்றவர்கள் எப்படி நியமிக்கப்படுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதேபோல், இவ்வாறு பேசுவதற்கு அவர்களுக்கு எவ்வாறு தைரியம் வருகிறது. இதுபோன்ற விடயங்கள் ஏன் கடந்த பத்தாண்டுகளில் அதிகமாக நடக்கிறது போன்ற கேள்விகள் எழுகின்றன.

அப்படிபட்டவர்களை நீதிபதி யாக தொடர்வதைத் தடுக்கும் அதி காரம் உச்ச நீதிமன்றத்துக்கு உள்ளது. அதுவரை அவர்களுக்கு எந்த வழக்கும் விசாரணைக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நான், எனது சக தோழர்களான திக் விஜய் சிங் (காங்கிரஸ்), விவேக் தங்கா (காங்கிரஸ்), மனோஜ் ஜா (ஆர்ஜேடி), ஜாவேத் அலி (சமாஜ்வாதி) மற்றும் ஜான் பிரிட்டாஸ் (சிபிஅய்) ஆகியோரிடம் பேசியுள்ளேன். நாங்கள் விரைவில் சந்தித்து, அந்த நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வருவோம். வேறு வழியே இல்லை. அந்த பேச்சின் ஒவ்வொரு வார்த்தையிலும் வெறுப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.
மூத்த வழக்குரைஞரான கபில் சிபில் கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தார். அதேபோல், 1993ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுவாமி நிதி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டபோது அவருக்காக வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *