இந்தியத் துணைக் கண்டத்தில் பிறப்பின் அடிப்படையிலான ஜாதிக் கொடுமை என்னும் வருணாசிரம நச்சரவத்தின் குடியிருப்பு என்பது ஹிந்து மதத்தின் ஆணி வேரில்தான்!
மனிதனை மனிதனாகப் பார்க்காமல், மதிக்காமல் பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்னும் நச்சுப் பார்வை ஹிந்து மதத்திற்கே உரித்தானது. 2500 ஆண்டுகளுக்கு முன் கவுதம புத்தர் அதனை எதிர்த்து மக்களைத் திரட்டினார்; அறவழியில் அவருடைய பயணம் அமைந்திருந்தது.
இந்தியா முழுவதும் அவரின் மானுடக் கருத்துகள் பரவித் தழைத்தன. காலத்தை எதிர்பார்த்திருந்த வஞ்சக பார்ப்பனீயம் அரசர்களைக் கைகளில் போட்டுக் கொண்டு பவுத்தத்தை ஒழித்தது.
பவுத்த மார்க்கம் மதமாக மாற்றப்பட்டது – பார்ப்பனீயம் உள்ளே ஊடுருவியது. அதன் பலாபலனாக இன்று வரை நாடு சொல்லொணாத் துன்பப் பாழுங் கிணற்றில் தலைகுப்புற வீழ்ந்து தத்தளிக்கிறது.
வைக்கம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த ஊர். அந்த ஊரில் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் தீண் டத்தகாதோர் எனப்படுவோர் நடந்து செல்லக் கூடாது என்ற நிலை.
அதனை எதிர்த்து நடைபெற்றதுதான் வரலாற்றில் ‘வைக்கம் போராட்டம்’ என்று பதிவாகியுள்ளது.
சட்டம் படித்த வழக்குரைஞர் மாதவன் என்பவர் நீதிமன்றத்துக்குச் ெசன்றபோது தடுக்கப்பட்டது ஏன்?
நீதிமன்றம் அரசரின் அரண்மனைக் கொட்டாரத்தில் இருந்தது. அரசனின் பிறந்த நாளையொட்டி யாகங்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. வழக்குரைஞர் மாதவனோ ஈழவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்; அதனால் நீதிமன்ற வளாகத்திற்குள் வரக்கூடாது என்று தடுக்கப்பட்டார். அந்தப் புள்ளியிலிருந்து தொடங்கப்பட்டதுதான் வைக்கம் போராட்டம்.
டி.கே. மாதவன், கே.பி. கேசவமேனன், எ.கே. பிள்ளை,
கே. வேலாயுத மேனன், கிருஷ்ணசாமி அய்யர், கே. கேளப்பன், மன்னத் பத்மநாப பிள்ளை, சங்கனாஞ்சேரி பரமேசுவரன் பிள்ளை, எம்.ஆர். நாயர், சி.வி. குஞ்சுராமன், ஆலம்மூட்டில் சான்னா உள்ளிட்டோரால் கிளர்ச்சி தொடங்கப்பட்டது (1924 மார்ச்சு 30).
19 பேர் வரை கைது செய்யப்பட்ட நிலையில், கிளர்ச்சி கிழடு தட்டி விட்டது. தொடர்ந்து நடத்துவாரில்லை.
இதனை எடுத்து நடத்துவார் யார்? இந்தியாவிலேயே ஒரே ஒருவர் பெயர் மட்டுமே கிளர்ச்சியாளர்களின் நினைவிற்கு வந்தது. அவர்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த ஈ.வெ.ராமசாமி என்ற மாமனிதர்.
அவருக்குத் தந்தி போகிறது (12.4.1924) வயிற்றுவலியால் அவதிப்பட்டிருந்த நிலையிலும் அவற்றையெல்லாம் ஒரு பக்கத்தில் மூட்டை கட்டி வைத்து விட்டு மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டார் அந்தத் தலைவர்.
13.4.1924 அன்று அந்தத் தலைவரின் காலடி வைக்கம் மண்ணில் பதிந்தது. (வரலாறு எப்படி மறக்கும் அந்த நாளை).
மனோ வேகம் – வாயு வேகம்தான் – பிரச்சார மழை கொட்டோ கொட்டென்று கொட்ட ஆரம்பித்து விட்டது.
நம்மைத் தீண்டத்தகாதான் என்று கூறும் வைக்கத்தப்பனை குப்புறப் போட்டுத் துணி துவையுங்கள் என்கிற அளவுக்குப் பிரச்சாரம் சூடு பிடித்து விட்டது.
மக்கள் அணி திரள ஆரம்பித்தனர் – அரசருக்கு எதிராக மக்கள் சக்தியைத் தட்டி எழுப்பியது அந்த ஈரோட்டு ஞாயிறு.
அதற்குமேல் மன்னராட்சியால் பொறுக்க முடியவில்லை. நம் பூதிரிப் பார்ப்பனர்களின் அழுத்தம் – முதலில் ஒரு மாதம் வெறுங் காவல் அருவிக்குத்தி சிறைச் சாலையில்.
அடங்குமா அந்தச் சிங்கம்? மறுபடியும் பிரச்சார சண்டமாருதம் மண்ணையும் விண்ணையும் துவம்சம் செய்தது.
இப்பொழுதோ கடுங்காவல் தண்டனை – திருவாங்கூர் சிறைச்சாலையில்!
சிறைச்சாலையில் எப்படி இருந்தார் பெரியார்? கே.பி. கேசவ மேனன் இதோ எழுதுகிறார்:
“கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு
ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கிறார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு வேலை ஒரு நாளைக்குச் செய்வானோ, அது போல் இரு மடங்கு வேலை செய்கிறார்.”
“ஜாதி இந்து என்ற சொல்லக் கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத் தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காகச் செய்த தியாகம் நமக்கும் புது வாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.
“ஈ.வெ.ரா. அவர்களுக்கு இருக்கக் கூடிய நாட்டுப் பற்று, உற்சாகம், அனுபவம், பெருந்தன்மை, பெரும் பக்குவம் இவை களெல்லாம் உடைய இன்னொருவரை இந்த நாட்டிலே அந்த அளவுக்குக் காண முடியுமா? இந்த மாநிலத்து மக்கள் அனுபவிக்கிற கொடுமையை நீக்க வேண்டும் என்பதற்காக, எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை வேண்டுமானாலும் ஏற்கலாம் என்று சொல்லி ஒரு தலைவர் வந்தாரே, அதைப் பார்த்து இந்த மாநில மக்கள் யாருக்குமே வெட்கம் ஏற்படவில்லையா? கேரளத்தின் முதிர்ந்த அனுபவம் மிக்க தலைவர்கள், தங்கள் சாய்வு நாற்காலியைத் தூக்கி எறிந்து விட்டு, தங்கள் பங்கைச் செலுத்த இப்போதாவது வரவேண்டாமா?” என்று மனம் உருகி, படிப்போர் கண் கலங்க இரத்தக் கண்ணீர் வடித்து எழுதியுள்ளார்.
தந்தை பெரியார் வைக்கத்தில் இருந்தகாலம் 141 நாட்கள் அதில் சிறையில் இருந்த நாட்கள் 74.
தந்தை பெரியார் மட்டுமல்ல – அந்தக் காலத்தில் தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மாள், தங்கை எஸ்.ஆர். கண்ணம் மாளும் பங்கு கொண்டனர்.
இறுதி வெற்றி தந்தை பெரியாருக்கே – ‘வைக்கம் வீரர் பெரியார்!’ என்று நவசக்தியில் திரு.வி.க. தீட்டினார். (‘நவசக்தி’ 24.5.1924).
இந்த வைக்கம் போராட்டம் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனை யில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது – அதன் நீட்சியே ‘மகத்’ போராட்டம்!
வைக்கம் வெற்றி விழா 29.12.1925 இல் வைக்கத்தில் நடை பெற்றது. அதற்குத் தலைமை வகித்தவர் யார் தெரியுமா?
வைக்கம் வீரர் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமிதான்.
வைக்கம் வெற்றியின் நூற்றாண்டு விழா காலத்தில் இப்பொழுது நாம் பயணிக்கிறோம்.
நாளை 12ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசும், கேரள மாநில அரசும் இணைந்து வைக்கத்தில் கொண்டாட உள்ளன.
வைக்கம் நினைவு மாளிகை மட்டுமல்ல – நூலகமும் திறப்பது – பகுத்தறிவுப் பகலவனுக்குப் பொருத்தமான – காலத்தால் நிலைத்து போற்றப்படும் அறிவுக் களஞ்சியமாகும்.
கேரள மாநில முதலமைச்சர் மாண்பமை பினராயி விஜயன் தலைமை வகிக்க திராவிட மாடல் அரசின் – சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் முன்னிலை வகிக்கிறார். கருஞ்சட்டைப் பட்டாளமும் திரள்கிறது.
தந்தை பெரியார் என்றால் ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூகநீதி, சமத்துவம், சமதர்மம், சுயமரியாதை என்று பொருள்.
தந்தை பெரியாரின் இந்தக் கொள்கைகளை உலகமயமாக் குவோம். உலகத்தைப் பெரியார் மயமாக்கிட உறுதி கொள்வோம்!
வாழ்க பெரியார்!
மலரட்டும் பெரியார் வழி உலகம்!
(வைக்கம் வெற்றியை நினைவு கூரும் நிகழ்வுகள் – அருகே)