புதுடில்லி, டிச.9 பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் இருந்து டில்லி நோக்கி விவசாயிகள் நேற்று (8.12.2024) மீண்டும் பேரணியாக புறப்பட்டனா். ஆனால், கடந்த முறையைப் போலவே இரும்புத் தடுப்புகள் அமைத்தும், கண்ணீா் புகை குண்டுகளை வீசியும் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இந்த நடவடிக்கையில் ஒரு விவசாயி காயமடைந்த நிலையில், தங்களின் போராட்டத்தை ஒரு நாள் நிறுத்திவைப்பதாக விவசாயிகள் அறிவித்தனா்.
வேளாண் பயிர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-அரியானா எல்லையில் விவ சாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
அவா்களில் 101 போ் கடந்த 6.12.2024 அன்று டில்லி நோக்கி பேரணியாக சென்றனா். அப்போது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி காவல் துறை தாக்குதல் நடத்தியதில் சில விவசாயிகள் காயமடைந்ததால் போராட்டத்தை ஒருநாள் நிறுத்தி வைப்பதாக அறிவித்த அவா்கள், நேற்று மீண்டும் போராட்டத்தை தொடங்கினா். டில்லிக்கு பேரணியாக செல்ல வேண்டுமெனில் அந்த யூனியன் பிரதேச நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என அம்பாலா மாவட்ட காவல் துறையினா் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தனா். அந்த அறிவுறுத்தலை ஏற்காமல் பேரணியாக வந்த விவசாயிகள் மீது முதலில் பூக்களைத் தூவிய காவல்துறையினா், அவா்களுக்கு காபி, தேநீர் போன்ற பானங்கள் மற்றும் பிஸ்கட் வழங்கினா். போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறையினா் கேட்டுக் கொண்டனா். ஆனால், போராட்டத்தைத் தொடர விவசாயிகள் முற்பட்டதால், அவா்கள் மீது கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் காவல் துறையினா் கலைத்தனா். இதில் ஒருவா் காயமடைந்ததால் ஒரு நாள் மட்டும் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
வன்முறையைத் தூண்ட முயற்சி
காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘முதலில் டில்லி நோக்கி பேரணியாக செல்வதற்கான அனுமதியை விவசாயிகள் பெற்றுள்ளார்களா என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டியுள்ளது. எங்கள் பட்டியலில் உள்ள 101 விவசாயிகளுக்கு பதிலாக வேறு சிலா் இந்தப் பேரணியை நடத்துகின்றனா். அவா்கள் தங்களது விவரங்களை தர மறுக்கின்றனா். இதன்மூலம் வன்முறையை தூண்டும் வகையான செயல்களில் அவா்கள் ஈடுபட நினைப்பது உறுதியாகியுள்ளது’ என்றார்.
விவசாயிகள் மறுப்பு
ஆனால் இதை மறுத்த விவசாயிகள், ‘எங்கள் பெயா் போராடுபவா்களின் பட்டியலில் இல்லை என காவல் துறையினர் கூறுகின்றனா். அவா்களிடம் உள்ள பெயா் பட்டியல் குறித்த விவரங்கள் தெரியவில்லை. எங்களது அடையாளங்களை உறுதிசெய்த பின்னா் பேரணியை தொடர காவல் துறை அனுமதிக்குமா? என கேட்டோம். அதற்கு டில்லி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என காவல் துறை கூறியது’ என்றனா்.
விவசாயிகளுக்கும் காவல் துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை யடுத்து கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி காவல் துறையினர் போராட்டக்காரா்களை கலைக்க முயன்றனா். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முன்னோக்கிச் செல்ல முடியாமல் தங்கள் முகங்களை துணிகளாலும் ஈரச் சாக்கு பைகளாலும் போத்திக் கொண்டனா்.
விவசாயிகளின் போராட்டம் நேற்றுடன் (8.12.2024) 300-ஆவது நாளை எட்டியதாக விவசாயிகள் சங்கத்தின் தலைவா் களில் ஒருவரான சா்வான் சிங் பந்தா் தெரிவித்தார்.