புதுடில்லி, டிச. 8- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ‘மிக மோசமான துரோகி’ என்று குற்றம் சாட்டிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பித் பத்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர் ஹிபி ஈடன், மக்களவைத் தலைவருக்கு தாக்கீது அளித்துள்ளார்.
மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு ஹிபி ஈடன் எழுதிய கடிதத்தில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மிக மோசமான துரோகி என மக்களவை உறுப்பினரான சம்பித் பத்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். இது ராகுல் காந்தியை அவமதிக்கக்கூடியது.
மிக மோசமான வார்த்தைப் பிரயோகம். இதன்மூலம் அவர் சட்ட விதிகளை மீறியுள்ளார். எனவே சம்பித் பத்ராவுக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் பிரச்சினையை எழுப்பி, உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.
வீண் வம்பு!
மடாதிபதி சிலைக்கு தார்ப்பூச்சு
பெங்களூரு, டிச. 8- கருநாடகாவில் லிங்காயத்து மடாதிபதி சித்தகங்கா சிவகுமார சுவாமி கடந்த 2019ஆம் ஆண்டு தனது 111ஆவது வயதில் காலமானார். அவருக்கு பெங்களூரு வீரபத்ர நகரில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த நவம்பர் 30ஆம் தேதி இரவில் தார் பூசி அவமதிக்கப்பட்டது.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் உணவு வழங்கும் ஊழியர் சிறீகிருஷ்ணா (33) என்பவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் பெங்களூருவில் தங்கி, உணவு வழங்கும் ஊழியராக பணியாற்றி வருவது தெரியவந்தது.
கைதான சிறீகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்திய போது, “இயேசு கிறிஸ்து அண்மையில் கனவில் வந்து விக்கிரக வழிபாட்டை போதிப்பவர்களை அழிக்க சொன் னார். அதனால் மடாதிபதியின் சிலைக்கு தார் பூசினேன்” என கூறியுள்ளார். இதையடுத்து சிறீகிருஷ்ணாவை பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
மணிப்பூர் வன்முறை
பிரதமருக்கு அரசியல் கட்சித்
தலைவர்கள் கூட்டாக எழுதிய கடிதம்
புதுடில்லி, டிச. 8- இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உட்பட மணிப்பூர் மாநிலத்தின் 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர் மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.
அதில் “மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறை நிகழ்வுகள் 2 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், தற்போது வரை ஒருமுறை கூட பிரதமர் ஆகிய தாங்கள் தங்களுடைய மாநிலத்திற்கு வருகை தந்து இயல்பு நிலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர்.உலக நாடுகள் அனைத்திற்கும் ஆர்வமுடன் செல்லும் தாங்கள், பல நாடுகளின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதாக சொல்லிக் கொள்ளும் தாங்கள், சொந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலம் வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை வருகை தராதது விந்தையாக உள்ளது” என தெரிவித்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பதற்றம் மற்றும் அச்சத்துடன் உள்ளனர் என்றும் உதவிக்காக அவர்கள் காத்திருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையை எண்ணி பார்த்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆவது மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் வருகை தந்து இயல்பு நிலையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
உலகின் முதல் 100 நகரங்களில் இந்தியாவுக்கு ஒரே ஒரு இடம் தான்…
உலக அளவில் மக்களை அதிகம் கவர்ந்த முதல் 100 நகரங்களில், இந்தியாவின் ஒரே ஒரு நகரமாக டில்லி மட்டுமே இடம் பிடித்துள்ளது. Euromonitor International நடத்திய ஆய்வில் டில்லி 74ஆவது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 4ஆவது ஆண்டாக பாரிஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. மேட்ரிட் 2ஆம் இடத்திலும், டோக்கியோ 3, ரோம் 4, மிலன 5ஆம் இடத்திலும் உள்ளன. எகிப்தின் தலைநகரமான கெய்ரோ கடைசி இடத்தில் உள்ளது.