திஸ்பூர், டிச. 6- அசாம் மாநிலத்தில் உணவகங்கள், பொது நிகழ்ச்சிகள், பொது இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிட 4.12.2024 அன்று முதல் தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள 5 கி.மீ சுற்றளவில் மாட்டிறைச்சிக்கு முன்பு தடை விதிக்கப் பட்டிருந்தது. தற்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிட 4.12.2024 அன்று முதல் தடை விதிக்கப் படுகிறது. இந்த கட்டுப்பாடு மாநிலம் முழுவதும் உள்ள உணவக விடுதிகள்,உணவகம் மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்ச்சி உட்பட அனைத்திற்கும் பொருந்தும். விதிகளை மீறுபவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்படுவர். மேலும் அசாமில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலர் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். ஆனால், இதற்கு முன்பே நாங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளோம். தற்போது பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண முற்றிலுமாகத் தடை விதித்துள்ளோம். அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ராகிங் செய்த மருத்துவ
மாணவர்களுக்கு அபராதம்!
சென்னை, டிச. 6- ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மாணவர்களை ராகிங் செய்த விவகாரத்தில் தொடர்புடைய 3 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையம், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கையை ஆய்வு செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதலாமாண்டு மாணவர், பல்கலை. மானியக் குழுவுக்கு அண்மையில் மின்னஞ்சல் மூலமாக புகார் ஒன்றை அனுப்பினார்.
அதில், கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும் மூத்த மாணவர்கள், தங்கள் செயல்முறை பாடக் கையேடுகளை எழுதித் தருமாறு நிர்ப்பந்திப்பதாகத் தெரிவித்திருந்தார். தேசிய மருத்துவ ஆணையம் மூலமாக மருத்துவக் கல்லூரி, காவல் துணை ஆணையர், மருத்துவப் பல்கலைக்கழகம், காவல் நிலையங்களுக்கு அந்த புகாரின் நகல் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், காவல் துறை அடங்கிய குழுவினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர்.
விசாரணையில், செயல்முறை பாடக் கையேடுகளை எழுதித் தருமாறு முதலாமாண்டு மாணவர்களை 3 மூத்த மாணவர்கள் நிர்ப்பந்தித்தது உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில், விடுதியில் இருந்து மூவரும் 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டனர். தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி மூவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முகநூல் பதிவு
சீனா – பூமியைத் தோண்டி 6 லட்சத்து 85 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு!
இந்தியா – மசூதி கீழ் தோண்டி சிவலிங்கம் கண்டு பிடிக்க முயற்சி!!