புதுடில்லி, டிச.6 இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை தோ்ந்தெடுக்கும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை அமா்வில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விலக்கிக்கொண்டார்.
மூன்று பேர் குழு
கடந்த 2023-இல் கொண்டுவரப்பட்ட தலைமைத் தோ்தல் ஆணையா்கள் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் சட் டத்தில், தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை தோ்ந்தெடுக்கும் மூன்று நபா் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டார். அதற்கு பதிலாக ஒன்றிய அமைச்சா் ஒருவரை குழுவில் இடம்பெறச் செய்ய அந்தச் சட்டம் வழிவகை செய்தது. முன்னதாக, மூன்று நபா் குழுவில் பிரதமா், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ஆகியோர் இடம் பெற்றிருந்தனா். தற்போது அந்தக் குழுவில் பிரதமா், ஒன்றிய அமைச்சா் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ஆகியோர் இடம்பெறுகின்றனா்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ் சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது மனுதாரா்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞா்களிடம் சஞ்சீவ் கன்னா கூறியதாவது:
அமர்வில் இருந்து விலகல்
2023-இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில் தோ்தல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய முடியாது. அதுதொடா்பான மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. அதேவேளையில் மூன்று நபா் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிய விவகாரம் மற்றும் தோ்தல் ஆணையா்கள் நியமன நடை முறை தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஒன்றிய அரசு மற்றும் இந்திய தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். இதுதொடா்பாக விசாரணை மேற்கொள்ளும் அமா்வில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். இந்த மனுக்களை மற்றொரு அமா்வின் முன் 2025, ஜனவரி 6-இல் தொடங்கும் வாரத்தில் பட்டியலிட வேண்டும் என்றார்.
முன்னதாக, தலைமைத் தோ்தல் ஆணையா்கள் மற்றும் பிற தோ்தல் ஆணையா்கள் சட்டம், 2023 -அய் எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெயா தாக்குா் மற்றும் ஜனநாயக சீா்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்தன. தோ்தல் ஆணையத்தின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற செயல்பாட்டை சீா் குலைக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றஞ்சாட்டப்பட்டது.