நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
புதுடில்லி, டிச.4- சம்பல் கலவரம் குறித்து பேச அனுமதி மறுக்கப் பட்டதால்,ராகுல்காந்தி உள்பட எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
5 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில், முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது. ஏற்ெகனவே அங்கிருந்த இந்து கோவிலை இடித்து அகற்றி விட்டு, மசூதி கட்டப்பட்ட தாக சம்பல் சிவில் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குதொடர்ந்தார்.
அதன்பேரில், மசூதியில் ஆய்வு நடத்த நீதிபதி கடந்த 19ஆம் தேதி உத்தரவிட்டார். அதைய டுத்து, கடந்த 24ஆம் தேதி அங்கு ஆய்வு நடத்த சென்றபோது, ஒரு கும்பல் எதிர்த்து கல்வீச்சில் ஈடு பட்டது. காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
அனுமதி மறுப்பு
இந்நிலையில், நேற்று (3.12.2024) நாடாளுமன்ற மக்களவை, வழக்கம் போல் கேள்வி நேரத்துடன் கூடியது.
சற்று நேரத்தில், சமாஜ் வாடி கட்சி தலைவர் அகி லேஷ் எழுந்து, சம்பல் கலவர பிரச்சினையை எழுப் பினார்.”அது தீவிரமான பிரச்சினை. 5 பேர் உயிரிழந்து விட்டனர்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சம்பல் கலவர பிரச்சினை குறித்து பேச அவைத் தலைவரிடம் ஓம் பிர்லாவிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவைத் தலைவர் அனுமதி மறுத்தார். கேள்வி நேரம் முடிந்த பிறகு பேசலாம் என்று அவர் கூறினார்.
ஆனால் அதை ஏற்கமறுத்து அகிலேஷ் யாதவும் மற்றும் சமாஜ் வாடி கட்சி உறுப்பினர்கள் சிலரும் வெளிநடப்பு செய்ய எழுந்தனர்.
அதே சமயத்தில், வேறு சில சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் அவையின் ‘மய்யப் பகுதிக்கு சென்று முழக்கமிட தொடங்கினர். அப்போது, தி.மு.க. உறுப்பினர் ஆ.ராசா, காங்கிரஸ் உள்ளிட்ட இதர எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நிற்குமாறும், போராட்டத்தில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுத்தார்.
தேசியவாத காங்கிரஸ், உத்தவ் சிவசேனா கட்சிகளின் உறுப்பினர்கள் சமாஜ்வாடி உறுப்பினர்களுக்கு ஆதரவாக எழுந்து நின்றனர். எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி, போராட்டத்துக்கு ஆதரவாக நடைபாதைக்கு வந்து நின்றார்.
போராட்டத்துக்கு இடையே, நாடாளுமன்ற உடன் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அகிலேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அகிலேஷ் தனது கட்சி உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு வெளிநடப்பு செய்தார்.
அவர்களை தொடர்ந்து, ராகுல் காந்தி உள்ளிட்ட இதர எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
சற்று நேரத்தில் எதிர்க்கட்சியினர் திரும்பி வந்து கேள்வி நேரத்தில் பங்கேற்றனர்.
ஆனால், கேள்வி நேரத்தின் இறுதி யில், ஒன்றிய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அளித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
திட்டமிட்ட சதி
கேள்வி நேரம் முடிந்த பிறகு, சம்பல் கலவரம் பற்றி பேச அகிலேஷ்க்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அவர் பேசியதாவது:- சகோதரத் துவத்துக்கு புகழ் பெற்ற சம்பல் நகரத்தில், நன்கு திட்டமிடப்பட்ட சதி காரணமாக வன்முறை நடந்துள்ளது. மசூதியை தோண்ட வேண்டும் என்று பா.ஜனதா எவ்வளவுக்கு எவ்வளவு பேசுகிறதோ, அந்த அளவுக்கு நாட்டின் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும்.
சம்பல் மாவட்டநிர்வாகம் அவசரகதியில் செயல்பட்டது. தவறு செய்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
-இவ்வாறு அவர் பேசினார்.