கொல்கத்தா, டிச.4-வங்க தேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகின்றன. இஸ்கான் கோயிலின் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸ் டாக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வங்கதேசத்தின் இந்து விரோதப் போக்கை கண்டித்து மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, வங்க தேசத்திலிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மருத்துவமனைகளில் உள்ள பல மருத்துவர்கள் வெளிப்படையாக அறிவித் துள்ளனர்.
இந்த நிலையில், சிலிகுரியைச் சேர்ந்த இஎன்டி மருத்துவர் சேகர் பந்தோபாத்யாய், “எனது மருத்துவமனைக்கு வரும் வங்கதேசத்தவர் சிகிச்சைக்கு முன்பாக இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த வேண்டும்” என கண்டிப்புடன் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “நமது நாட்டு தேசியக்கொடி வங்கதேசத்தவரால் அவமதிக்கப்படுவது மனதில் வலியை ஏற்படுத் தியுள்ளது.
ஒரு மருத்துவர் என்ற முறையில் நோயாளிக்கு சிகிச்சையை மறுக்க முடியாது. ஆனால். என்னிடம் சிகிச்சை பெற விரும்புபவர் எனது நாட்டு கொடிக்கும், இந்த மண்ணுக்கும் மரியாதை செலுத்த வேண்டும். வங்கதேசம் தற்போது தலிபான் மனநிலைக்கு மாறியுள்ளது” என்றார்.