புதுடில்லி, டிச.3 அரசமைப்புச் சட்டமானது அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையில் அதன் மீது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது.
மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா தலைமையில் பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.அதன்படி, அரசமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டைக் குறிக்கும் வகையிலான விவாதம் மக்களவையில் டிச. 13, 14-ஆம் தேதிகளிலும், மாநிலங்களவையில் டிச. 16, 17-ஆம் தேதிகளிலும் நடைபெற உள்ளது.
இத் தகவலை 2.12.2024 அன்று தெரிவித்த நாடளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘ஒன்றிய அரசு – எதிர்க்கட்சி உறுப் பினா்கள் இடையே ஏற்பட்டுள்ள இந்த உடன்பாட்டின் மூலம், நாடாளுமன்ற இரு அவைகளும் சுமுகமாக நடைபெற வாய்ப்புள்ளது’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதானி விவகாரம், சம்பல் வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் மீது விவாதம் நடத்த வலியுறுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினா்களின் கோரிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த கிரண் ரிஜிஜு, ‘நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு அந்த விவாதங்களுக்கு அனுமதிப்பது குறித்த முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
முன்னதாக, அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மய்ய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமா்வு குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு தலைமையில் கடந்த நவ. 26-ஆம் தேதி நடைபெற்றது. அப்போதே, இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
வாக்குச்சாவடிகளில் வாக்காளா் எண்ணிக்கையை உயா்த்தியதற்கு எதிராக வழக்கு
தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
புதுடில்லி, டிச.4 வாக்குச் சாவடிகளில் வாக்காளா்களின் எண்ணிக்கையை உயா்த்தியதற்கு எதிரான வழக்கு தொடா்பாக 3 வாரங்களில் பதிலளிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் 1.12.2024 அன்று உத்தரவிட்டது
இதுதொடா்பாக உச்சநீதிமன் றத்தில் இந்து பிரகாஷ் சிங் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘அனைத்து தொகுதிகளிலுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவோரின் அதிகபட்ச எண்ணிக்கையை 1,200-இல் இருந்து 1,500-ஆக தோ்தல் ஆணையம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த தகவலை கடந்த ஆகஸ்ட் 7 மற்றும் 23-ஆம் தேதிகளில் அந்த ஆணையம் வெளியிட்டது.கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பின்னா், நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. இதைக் கருத்தில் கொள்ளும்போது வாக்குச்சாவடியில் வாக்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரித்ததற்கு உதவும் வகையில், தோ்தல் ஆணையத்திடம் புதிதாக எந்தப் புள்ளிவிவரமும் இல்லை.
‘வாக்களிப்பதை கைவிடக் கூடும்’: தோ்தல் ஆணையத்தின் முடிவால் வாக்குச்சாவடிகளின் செயல்பாட்டு திறனில் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இது வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் நீண்ட நேரம் காத்திருக்கவும், அவா்கள் சோர்வடையவும், கூட்ட நெரிசல் ஏற்படவும் வழிவகுக்கும்.