புதுடில்லி, டிச.3- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் டில்லியை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச விவசாயிகள்
உத்தரப்பிரதேசத்தில் வளர்ச்சி திட்டங்களுக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு பதிலாக நிலம் ‘ஒதுக்கீடு மற்றும் கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இதைப்போல கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின்கட்டண உயர்வு தள்ளுபடி, 2021ஆம் ஆண்டு லகிம்கேரி வன்முறையில் விவசாயிகளுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் திரும்ப உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டில்லி நோக்கிய பேரணிக்கு பாரதிய கிசான் பரிஷத் (பி.கே.பி.) அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.பேரணியாக சென்றனர்
அதன்படி ஆக்ரா, அலிகார் உள்பட உத்தரப்பிரதேசத்தின் 20 மாவட்டங்களை சேர்ந்த நூற் றுக்கணக்கான விவசாயிகள் நேற்று (2.12.2024) நொய்டா அருகே உள்ள மகாமயா மேம்பாலம் அருகே குவிந்தனர்.
பின்னர் தங்கள் கோரிக் கையை வலியுறுத்தி டில்லியை நோக்கி பேரணி தொடங்கினர். பல்வேறு விவசாய அமைப்புகளின் கொடிகள், பேனர்களுடன் முழக்கமிட்டவாறே தாத்ரி-நொய்டா இணைப்புச்சாலையில் பேரணியாக சென்றனர். விவசாயிகள் தலைநகருக்குள் நுழைவதை தடுக்க டில்லி காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். குறிப்பாக எல்லைப்பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைத்து சாலைகளை அடைத்திருந்தனர்.
தடுப்பு வேலிகளுக்கு மேல் ஏறினர்
ஆனால் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளுக்கு மேல் ஏறியும், அவற்றை அப்புறப்படுத்தி விட்டும் விவசாயிகள் தலைநகரை நோக்கி முன்னேறினர். சில்லா எல்லைப்பகுதியில் இருந்து 1 கி.மீ.க்கு முன்பு கடைசியாக அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். உடனே அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.அவர்களுடன் காவல்துறையினர் உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அரசுக்கு 7 நாள் கெடு
சில்லா எல்லைப்பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
அப்போது விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு 7 நாள் கெடு விதித்தனர்.அதற்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் டில்லி நோக்கி பேரணி நடத்துவோம் என அறிவித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.